Saturday, August 23, 2008

திருப்புமுனை ஒலிம்பிக்ஸ்?

முப்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உலக விளையாட்டு அரங்கில் நாங்களும் இருக்கிறோம் என்று இந்தியா நிரூபித்திருக்கிறது. அபிநவ் பிந்த்ராவின் தங்கப் பதக்கத்தைத் தொடர்ந்து, மல்யுத்தத்தில் சுஷில் குமாரும், குத்துச் சண்டையில் விஜேந்தர் சிங்கும் பெய்ஜிங் ஒலிம்பிக் பந்தயங்களில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.
108 கோடி பேர் கொண்ட, ஒரு நாடு உலக அரங்கில் முன்னணியில் நிற்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது மனித வளத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நமது சோம்பேறித்தனம்தான் என்று கூற வேண்டும். திறமைசாலிகளான சிறுவர்களைப் பள்ளிகளிலேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு முறையாக விளையாட்டுப் பயிற்சிகளை அளிப்பதற்கான முயற்சியில் சுதந்திர இந்தியா ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டவில்லை.
கேரளத்திலுள்ள கண்ணூர், தலைச்சேரி பகுதியினர்தான் விரும்பி சர்க்கஸ் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றுபவர்கள். இப்போதும்கூட அதே நிலைமைதான். அந்தக் குழந்தைகள் இயற்கையிலேயே உடலை வளைத்து வித்தை காட்டும் "ஜிம்னாஸ்டிக்ஸ்' விளையாட்டில் திறமைசாலிகளாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு முறையான தேர்ச்சி அளித்தால் உலக அரங்கில் இந்தியா ஜிம்னாஸ்டிக்கில் முதலிடம் வகிக்கும் என்று கடந்த 40 ஆண்டுகளாகக் கைவலிக்கப் பலரும் எழுதியதுதான் மிச்சம். அதற்கான முயற்சிகளை அரசு செய்யவில்லை.
கிரிக்கெட், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டிற்குத் தரப்படும் ஊக்கமும், உதவியும் ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, தடகளம், மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளுக்குத் தரப்படுவதில்லை.
வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் சுஷில் குமார் மற்றும் விஜேந்தர்சிங் போன்றவர்கள், தங்களது கிராமங்களில் கட்டாந்தரையில்தான் மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டு, வளர்ந்த பிறகு சர்வதேச சங்கங்களின் பந்தய மேடைகளைத் தரிசிக்கவே முடிந்திருக்கிறது. உலக வல்லரசாகப் போகிறோம் என்று மார்தட்டும் இந்தியாவில், முறையான பயிற்சி மையங்களும், பந்தய மைதானங்களும் மாவட்ட அளவில்கூட அல்ல, எல்லா மாநிலங்களிலும்கூட இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
2001ஆம் ஆண்டில் 0.06 சதவிகிதமாக இருந்த விளையாட்டுக்கான நிதி ஒதுக்கீடு இப்போதுதான் 0.97 சதவிகிதமாக ஆகியிருக்கிறது. அதாவது, மத்திய அரசின் மொத்த நிதி ஒதுக்கீடான ரூ. 7,85,583.70 கோடியில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்காக நாம் ஒதுக்கீடு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ. 764 கோடி மட்டுமே! இந்த லட்சணத்தில் இந்தியா தங்கப் பதக்கங்களைக் குவிக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டால் எப்படி?
இன்னொரு விஷயம். துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, தடகளம், செஸ் போன்ற தனிநபர் விளையாட்டுகளில்தான் அவ்வப்போது இந்திய வீரர்களின் சாதனைகள் வெளிப்படுகின்றனவே தவிர, அணியாகப் போட்டியிடும் ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து போன்றவைகளில் நாம் ஏன் வெற்றி பெற முடியவில்லை? கிரிக்கெட்டில்கூட அதிர்ஷ்டம் ஒத்துழைத்தால் வெற்றி என்கிற நிலைமைதானே தொடர்கிறது. அது ஏன்?
2000 ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் அமெரிக்காவுக்கு 39 தங்கப் பதக்கங்களும் சீனாவுக்கு வெறும் 28 தங்கப் பதக்கங்களும்தான் கிடைத்தன. 2004ல் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் சீனா 32 தங்கப் பதக்கங்களை வென்று, 35 பதக்கங்களை வென்ற அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது. இப்போது 46 தங்க மெடல்களுடன் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம் சீன அரசு விளையாட்டு வீரர்களுக்கு அளித்த ஊக்கமும், உற்சாகமும், ஏற்படுத்திக் கொடுத்த வசதிகளும்தான்.
முழு மூச்சுடன் அரசு இயந்திரம் செயல்பட்டு, அடுத்த ஒலிம்பிக்கில் தங்க மெடல்களைக் குவித்தே தீர்வது என்கிற முனைப்புடன் செயல்பட்டால் சீனாவால் செய்ய முடிந்த சாதனையை நம்மாலும் செய்து காட்ட முடியும். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் நமது மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் ஒரு திருப்புமுனையாக அமையக்கடவது!
நன்றி : தினமணி

2 comments:

said...

//ஒரு நாடு உலக அரங்கில் முன்னணியில் நிற்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது மனித வளத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நமது சோம்பேறித்தனம்தான் என்று கூற வேண்டும். //

அட நீங்க வேற யோசிப்பவரே, பல நல்ல குறிக்கோள் கொண்ட பலர் வெளிநாட்டில் இருக்குறார்கள். % குறையும் போது பிறர் சேர்க்கை தொற்றிகொள்கிறது.

said...

சிவமுருகன் வருகைக்கு நன்றி