Monday, September 8, 2008

யாருக்கு லாபம்?

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வெளியிட்டிருக்கும் இரண்டாவது மாஸ்டர் பிளானைப் படிக்கும்போது ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. தனியார் அடுக்குமாடிக் கட்டட நிறுவனங்களுக்கு எப்படியெல்லாம், என்னவெல்லாம் சலுகைகளைச் செய்துதர முடியும் என்று ஆழ்ந்து சிந்தித்து, அதற்கு சட்ட வடிவமும் அமைத்துத் தந்திருக்கிறது இந்த மாஸ்டர் பிளான் என்பதுதான் அது!
அடுத்த 18 ஆண்டுகளில் சென்னை பெருநகரப் பரப்பு அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல, தற்போதைய 73 லட்சத்திலிருந்து அதன் மக்கள்தொகை 1.26 கோடியாக அதிகரிக்கும் என்பதும் உண்மை. இந்த வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில், குடியிருப்புகளும், வணிக வளாகங்களும், அலுவலகங்களும் அதிகரிப்பதுடன், சாலையை விரிவுபடுத்துதல், போக்குவரத்து வசதிகளை அதிகரித்தல், குடிநீர் வடிகால் வசதிகளை அதிகரித்தல் போன்ற வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டாக வேண்டும் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிவித்திருக்கும் 32,700 கோடி ரூபாய் திட்டத்தில் சில நல்ல அம்சங்கள் இல்லாமல் இல்லை. போக்குவரத்துக்கும், சாலை மேம்பாட்டிற்கும் இந்த மாஸ்டர் பிளானில் அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை வரவேற்காமல் இருக்க முடியாது. சென்னை நகரைச் சுற்றி அனைத்துப் புறநகர் பகுதிகளையும், தொழில் பகுதிகளையும் இணைக்கும் வட்டப்பாதை; ராட்சதத் தூண்களை அமைத்து அதன்மேல் அமையும் உயரப் பாதைகள்; சென்னையில் எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் "மெட்ரோ' ரயில் திட்டம்; சுமார் 300 கி.மீ. சாலைகளை விரிவுபடுத்தும் பணி; அதிகரித்த மாநகரப் பேருந்து வசதி மற்றும் பேருந்துகள் விரைவாகச் செல்ல உயரப்பாதைகள்; ஆங்காங்கே சாலையைக் கடக்க "சப் வே'க்கள்; ஏழு இடங்களில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் என்று பல வளர்ச்சிக் கண்ணோட்டங்களும், அத்தியாவசியத் தேவைகளும் இந்த மாஸ்டர் பிளானில் இருப்பது உண்மை.
இப்படியெல்லாம் செய்துவிட்டு, ஒரு மிகப்பெரிய குண்டையும், தூக்கிப் போட்டிருக்கிறது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மாஸ்டர் பிளான். இனிமேல் 100 அடி அகலச் சாலைகளில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும், வணிக வளாகங்களுக்கும் உயரக் கட்டுப்பாடு முற்றிலுமாகத் தளர்த்தப்பட்டிருக்கிறது. இனிமேல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கார் நிறுத்துவதற்காக மண்ணுக்குக் கீழே தளம் அமைத்துக் கொள்வதற்கான விதிகள் தளர்த்தப்படுகின்றன. குறைந்த பரப்பளவு நிலத்திலும் வீடு கட்ட அனுமதி அளிக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல, 30 அடி அகலம் உள்ள சாலைகளிலும் இனி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட அனுமதிப்பது என்கிற பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு மழை பெய்தால் அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையின் சாக்கடைகள் அடைத்து ஆங்காங்கே தெருவெல்லாம் துர்நாற்றம் வீசும் அவலநிலை நீடிக்கிறது. சாக்கடைக் குழாய்களின் அளவு அதிகரிக்கப்பட்டு, மக்கள்தொகையின் தேவைக்கு ஏற்ப தனது கட்டுமான வசதிகளை வடிகால் வாரியம் அதிகரிக்காத வரையில், வரைமுறையற்ற அடுக்குமாடிக் கட்டடங்களை அனுமதிப்பது எந்தவகையில் சரி?
உயரம் அவரவர் இஷ்டத்துக்கு அதிகரித்து, சுற்றிலும் போதுமான இடம் விடாமல் கட்டுவது எந்தவிதத்தில் பாதுகாப்பு என்பதுதான் கேள்வி. தீயணைப்பு வாகனம்கூடப் புக முடியாத நிலையில் குறுகிய சாலையில் அமைந்த சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து ஒரு சமீபத்திய உதாரணம். சமீபகாலமாக அந்தமான் போன்ற இடங்களில் ஏற்படும் நில அதிர்வுகளின் தாக்கம் சென்னையில் காணப்படுகிறது. கட்டுப்பாடில்லாத அடுக்குமாடிக் குடியிருப்புகள் நில அதிர்வு தாக்கும் இடங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை ஏன் நமது அரசு உணரவில்லை?
லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்கள், கட்டடங்களின் வெளித்தோற்றத்திற்கும், உட்புற வசதிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பலமான அஸ்திவாரத்தில் முதலீடு செய்வதில்லை என்கிற உண்மையை புஜ் மற்றும் ஆமதாபாத் பூகம்பம் உறுதிப்படுத்திய பிறகும் நம்மவர்களுக்கு ஏன் தெளிவு பிறக்கவில்லை?
அரசும் தனியார் அடுக்குமாடிக் கட்டட நிறுவனங்களும் கைகோர்த்துச் செயல்பட்டு "லாப'நோக்கில் தயாரிக்கப்பட்டிருக்கும் "மாஸ்டர் பிளான்' இது. என்ன செய்வது, ஆபத்துக்கு அரசே அச்சாரம் போடும் அதிசயத்தை அதிர்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டிய நிலைமையில் மக்கள்!
நன்றி : தினமணி

0 comments: