Monday, September 8, 2008

அடிப்படைக் கல்விக்கு அடித்தளமிடுவோம்

நாடு சுதந்திரமடைந்து 61 ஆண்டுகள் ஆகியும் இன்னும் எழுத்தறிவு பெற்றோர் 100 சதவீதத்தை எட்ட முடியவில்லை. கிராம மக்களுக்கு கல்வியைக் கொண்டு செல்வதற்கு பல ஐந்தாண்டுத் திட்டங்களில் நிதி ஒதுக்கிடப்பட்டும் இன்னும் கிராம அளவில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
61 ஆண்டுகளில் சர்வதேச அளவில் மூன்று முக்கியப் புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. அவை பசுமைப் புரட்சி, தொலைத்தொடர்புப் புரட்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஆகியன. பசுமைப் புரட்சி, தொலைத்தொடர்புப் புரட்சி ஆகியவை இந்திய கிராமங்களை சென்றடைய பல காலம் பிடித்தன. ஆனால் தகவல் தொழில் நுட்பம் மட்டும் அந்தந்த வினாடியே இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை சென்றடைவதை இன்று நாம் காண முடிகிறது. இந்த புரட்சியில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்றுதான் கூற வேண்டும்.
ஆனால் அடிப்படைக் கல்வி அல்லது எழுத்தறிவை கிராம அளவில் உள்ளவர்கள் பெற்றால்தான் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் முழு பலன்கள் அனைவரையும் சென்றடையும்.
1965ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 8ம் நாள் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உலக கல்வி அமைச்சர்கள் மாநாடு முதன்முறையாகக் கூட்டப்பட்டது. உலகளாவிய எழுத்தறிவின்மையால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி மாநாடு தீர விவாதித்தது. இப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8ம் நாளை உலக எழுத்தறிவு நாளாகக் கொண்டாட வேண்டும் என்பது ஒரு முக்கிய அம்சமாகும். இதன் முக்கிய நோக்கம் எழுத்தறிவின்மையை அகற்ற வேண்டும் என்பதை பல்வேறு பிரசார அணுகுமுறைகள் மூலம் எடுத்துக் கூறுவதும் இதற்காக அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெளிப்படுத்துவதும் ஆகும். அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8ம் நாள் உலக எழுத்தறிவு நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1901ம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நூற்றுக்கு 5 பேர் எழுத்தறிவு பெற்றனர். இது 1931ம் ஆண்டு 10 சதவீதமாகவும், 1951ம் ஆண்டு 18 சதவீதமாகவும் உயர்ந்தது.
2001ம் ஆண்டு எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 65.4 சதவீதமாகும். இதே போல் தமிழகத்தின் எழுத்தறிவு சதவீதம் 73.5 சதவீதமாகும்.
இதிலும் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் எழுத்தறிவில்லாமல் இருக்கும் நிலையானது, பெண்கள் மட்டுமல்லாத ஆண்கள் உள்பட சமுதாயமே கவலைப்பட வேண்டியதொன்றாகும். ஏனெனில் அவர்களின் பங்கேற்பு இல்லாமல் பெண்கள் பற்றிய சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் மாறுதல் எதுவும் ஏற்பட்டு விடாது.
ஓர் ஆணுக்கு எழுத்தறிவைக் கற்பிப்பதன் மூலம் ஒரு தனி நபருக்கு எழுத்தறிவு வழங்கலாம். ஒரு பெண்ணுக்கு எழுத்தறிவை கற்பிப்பதன் மூலம் ஒரு குடும்பத்திற்கே எழுத்தறிவை வழங்குவதற்கு ஒப்பானது என்றதொரு முதுமொழி உண்டு. இந்தியாவில் மேலும் மேலும் பெண்கள் எழுத்தறிவு பெறுவதன் வாயிலாக இந்த உண்மை தொடர்ந்து நிரூப்பிக்கப்பட்டு வருகிறது.
சுதந்திரத்துக்குப் பின் நமது நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு எத்தனையோ வளர்ச்சித் திட்டங்கள் / நலத் திட்டங்கள் ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையாவும் முழுமையான பலனை அளிக்காமைக்கான காரணம் மக்களிடையே எழுத்தறிவும், விழிப்புணர்வும் இல்லாமையே. இதைக் கருத்தில் கொண்டு தான் கி.பி.2012ம் ஆண்டுக்குள் ""எல்லோருக்கும் எழுத்தறிவு'' என்ற இலக்கில் தேசிய / மாநில அளவில் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கல்விக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தற்போது 1998 முதல் வளர்கல்வித் திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டு மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 14107 வளர்கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம் மையங்களில் மாலை நேர வகுப்பு / எழுத்தறிவு மையம், நூலகம் / வாசிப்பு மையம், கலந்துரையாடல், பயிற்சி (விழிப்புணர்வு / குறுகிய காலத் தொழில்), அரசு திட்டங்கள் போன்ற தகவல் மையம், விளையாட்டு / கலாசார மையம் மற்றும் சமுதாய மையமாக செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தும் நோக்கத்தில் வளர்கல்வித் திட்டத்துடன் இணைந்து மகளிர் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம், கணினி வழி எழுத்தறிவுத் திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகளுக்கான எழுத்தறிவுத் திட்டம், சிறைவாசிகளுக்கான எழுத்தறிவுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மைய அரசு முழு நிதியுதவி வழங்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 50:50 விகிதத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதியை பகிர்ந்து கொள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மக்களே ஏற்று நடத்த வேண்டும் என அரசு கருதுகிறது.
கற்கும் சமுதாயத்தை உருவாக்குவதற்கு பல்வேறு திட்டங்களின் மூலம் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் திட்டத்தின் முக்கியப் பயனாளிகளின் முழுமையான, தொடர்ச்சியான வருகை, பங்கேற்புக்குத் தடைக் கற்களாக சில சூழ்நிலைகள் இருந்து வருகின்றன. இவற்றைச் சமாளிக்க பல புதிய உத்திகளையும் மாற்று அணுகுமுறைகளையும் திட்டத்தைச் செயல்படுத்துவோர் கையாள வேண்டும். திட்டச் செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றால்தான் அடிப்படை எழுத்தறிவு அளிப்பதுடன் தாம் கற்றுக் கொண்டதை மறக்காமல் இருக்க உதவும். இதன் மூலம்தான் கற்ற / கற்கும் சமுதாயத்தை உருவாக்க முடியும். வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கும் சமுதாயம் உள்ள நாடுதான் சிறந்த சாதனைகளைப் புரிய இயலும்.
ஆர். இராஜன்
நன்றி : தினமணி

0 comments: