Tuesday, September 9, 2008

பாரம்பரியத்துக்கு ஆபத்து!

தஞ்சை நகரின் தனித்தன்மை மிக்க கட்டடங்களுள் ரயில் நிலையமும் ஒன்று. இப்போது மேம்பாட்டுப் பணி என்ற பெயரில் ரயில் நிலைய வளாகத்திலுள்ள பழமையான கட்டடங்களை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். ஏதோ தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு மட்டும் இந்த நிலை ஏற்படவில்லை. நாட்டின் பெரும்பாலான ரயில் நிலையங்கள் இன்று இந்த ஆபத்தைச் சந்தித்திருக்கின்றன.
ரயில் நிலையங்கள் இந்தியக் கட்டடக் கலையின் உன்னதங்களில் ஒன்றான "இந்தோ சார்சனிக்' கட்டடக் கலையின் எச்சங்களாக இன்று நம்மிடம் இருக்கின்றன. ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியபோது இந்தியக் கட்டடக் கலை மரபின் உன்னதத்தை உணர்ந்து இங்கு உருவாக்கிய கட்டடங்களை புராதன இந்தியக் கலை அடிப்படையிலேயே உருவாக்கினர். இந்தோ மொஹல் மேற்கத்திய கலை மரபுகளின் கூட்டுக் கலவையாக அவர்கள் உருவாக்கிய கட்டடக் கலையே "இந்தோ சார்சனிக்' கட்டடக் கலையாகும்.
இம்முறையிலான கட்டடங்கள் கட்டட எழிலுக்கு மட்டும் பேர் போனவை அல்ல; கோபுரக் கலசங்கள், வளைவு கோபுரங்கள், கூர் வளைவுகள், ஸ்தூபிகள், மினார்கள், உயர்ந்த விதானங்கள், மாட கோபுரங்கள் என அழகுக்கும் தடிமனான உறுதியான இரும்பு உத்தரங்கள், பெரிய தூண்கள், வெப்பத்தை எதிர்கொள்ளும் கனத்த சுவர்கள், நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் தரும் நேருக்கு நேரான ஜன்னல்கள் என வசதிகளுக்கும் ஒரு சேர முன்னுரிமை அளிப்பது இக்கலையின் சிறப்பம்சமாகும்.
"இந்தியா கேட்', "விக்டோரியா டெர்மினஸ்', "மெட்ராஸ் மியூசியம்', "விக்டோரியா மெமோரியல்' என இந்தியாவில் மட்டுமன்றி தங்கள் நாட்டிலும் பிரைட்டனில் "ராயல் பெவிலியன்', சந்தர்லாந்தில் "எலிஃபென்ட் டீரூம்ஸ்' என இக் கலையின் உன்னதத்தைப் பறைசாற்றும் ஏராளமான கட்டடங்களை ஆங்கிலேயர்கள் கட்டினர். ஒரு கட்டத்தில் ராபர்ட் ஃபெலோஸ் சிஸ்ஹாம், சார்லஸ் மேன்ட், ஹென்றி இர்வின், லுட்வின் என இக் கட்டடக் கலைக்கென மிகச் சிறந்த கலைஞர்கள் மரபே உருவானது.
ரயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள், ஆட்சி மன்றங்கள், கல்லூரிகள் என ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் இக் கட்டடக் கலையைப் பின்பற்றி இங்கு ஏராளமான கட்டடங்களை உருவாக்கியிருந்தாலும் காலப்போக்கில் அவற்றில் பல அடையாளம் மாறிவிட்டன.
மிகப் பிரபலமான சில கட்டடங்கள் தவிர்த்து இன்றளவும் இந்த உன்னதமான கலையின் எச்சங்களாக ரயில் நிலையங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஆனால், வலுவோடு நிற்கும் இந்தக் கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பணம் செலவழித்து அழித்துக் கொண்டிருக்கிறது ரயில்வே துறை.
சென்னையில் "இந்தோ சார்சனிக்' கட்டடக் கலைக்குச் சாட்சியம் கூறும் பல கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டுவிட்டன. எஞ்சி இருப்பவை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களும், பல்கலைக்கழகம், மத்திய தபால் நிலையம் போன்ற கட்டடங்களும்தான். கடந்த இரண்டு ஆண்டுகளில், சென்னையின் பாரம்பரியம் மிக்க பல கட்டடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
"அட்மிராலிடி ஹவுஸ்' என்று அழைக்கப்பட்ட, அரசினர் தோட்டத்திலிருந்த 208 ஆண்டுகள் பழமையான ஆளுநர் மாளிகை தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. தற்போது, இந்திய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடைய கோகலே ஹாலும் இடிக்கப்பட இருக்கிறது.
இதுபோன்ற சரித்திரச் சின்னங்களையும், கட்டடக் கலையின் அடையாளங்களையும் பாதுகாத்து நமது வருங்காலச் சந்ததியருக்குத் தர வேண்டும் என்கிற மனப்போக்கு ஏனோ நம்மிடம் இல்லை. கட்டடங்களை இடிப்பதிலும், புதிய கட்டடங்களைக் கட்டுவதிலும் பலருக்கும் பொருளாதார லாபம் இருப்பதுதான் காரணம் என்பது வேதனையைத் தருகிறது.
பிரிட்டனிலோ பிரான்ஸிலோ இத்தகைய காரியங்கள் சாத்தியமில்லை. சீனாவும்கூட விழித்துக்கொண்டுவிட்டது. குயிங் ஆட்சியில் பிரசித்தி பெற்ற கியான்மென் வீதியை ரூ. 5,200 கோடி செலவிட்டு அந்நாடு பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
உள்ளபடியே இந்திய ரயில் நிலையங்களில் மேம்படுத்த எவ்வளவோ பணிகள் இருக்கின்றன. குறிப்பாக நம்முடைய கிராமப்புற ரயில் நிலையங்களின் தேவைகள் ஏராளம். நடை மேடை, கூரை கிடையாது. இருக்கைகள் கிடையாது. சரியான குடிநீர், கழிப்பறை வசதிகள்கூட கிடையாது எனப் பரிதாபகரமாகக் காட்சியளிக்கின்றன நம்முடைய கிராமப்புற ரயில் நிலையங்கள்.
ரயில்வே துறை இங்கெல்லாம் வசதிகளை மேம்படுத்தலாம். உச்சி வெயிலிலும் கடும் மழையிலும், ரயில் எப்போது வரும் எனத் தெரியாமல் இயற்கை உபாதையோடு பரிதவித்துப் போகும் கர்ப்பிணிகளும் வயோதிகர்களும் கழிப்பறைகளைக் கட்டி நன்கு பராமரித்தால் ரயில்வே துறையை வாழ்த்துவார்கள்.
நன்றி : தினமணி

0 comments: