Tuesday, September 9, 2008

வாடகைத் தாய்' எனும் வக்கிரத் "தொழில்'

"மஞ்சி'!
குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் கடந்த ஜூலை மாதம் பிறந்த பெண் குழந்தையின் பெயர் இது. இதன் தாய், தந்தையர் ஜப்பானியர்கள். ஆனால் இதை பிரசவித்தவர் ஓர் இந்தியப் பெண்; வாடகைத் தாய்!
மஞ்சி பிறப்பதற்கு முன்னதாக அந்தக் குழந்தையின் ஜப்பானியத் தாய் தந்தை விவாகரத்து பெற்றதால் நேரிட்ட குழப்பங்கள் நீதிமன்றத்தின் படிகளை எட்டியபோது, "வாடகைத் தாய்மை' பற்றிய எண்ணற்ற சட்டச் சிக்கல்கள் விவாதத்துக்கு வந்துள்ளன.
திருமணம் செய்து கொள்ளும் ஒவ்வொரு ஜோடியின் கனவுகளும் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றியதாகவே இருப்பது இயல்பு. ஆனால், குழந்தைப் பேறு கிட்டாத தம்பதியர்களின் எண்ணிக்கையும் குறைவாக இல்லை. மண் பயனற்றுப் போனால் கரம்பு; பெண் பயனற்றுப் போனால் மலடு என்று ஓர் ஆணாதிக்க சமுதாயச் சொல்லாடல், கருத்தரித்துக் குழந்தை பெற முடியாத பெண்களை இழிவுபடுத்துகிறது. இந்த மலட்டுத்தனம் ஆணிடமும் இருக்கலாம் என்ற இயற்கை நியதி கூடப் புறந்தள்ளப்படுவதன் கொடுமையாகவே, முதல் மனைவியைத் தள்ளி வைப்பதும், இரண்டாம் தாரத்தை மணம் புரிவதும் கூட மிக நியாயமானதாகவே சித்திரித்துக் காட்டப்படுவதுண்டு!
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் சேர்ந்துதான் புதிய உயிர் உருவெடுக்கிறது என்பது உடற்கூறு விஞ்ஞானம். இந்தப் புதிய உயிரைத் தாங்கி வளர்ப்பது பெண்ணின் கருப்பையில் நிகழும் பரிணாம வளர்ச்சி. இதில் உடற்கூறுகளில் நேரிடும் சில பாதிப்புகள் காரணமாகத் தரித்த கரு, கருப்பையைச் சென்றடைய முடியாமல் போவதும் உண்டு. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அறிவியல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் போக்கில் நிகழ்ந்ததுதான் "சோதனைக் குழாய் குழந்தை' என்ற புதிய முயற்சி.
ஆணின் உயிரணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் சோதனைக் குழாயில் வைத்து சினைப்படுத்திய பின் அந்தக் கருவைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, இயல்பான தாய்மைப் பேறு முறையில் குழந்தை பிறக்கச் செய்வதுதான் இந்தப் புதிய சோதனை. உலகத்தில் முதன்முதலாக இப்படி ஒரு சோதனைக் குழாய் முறையில் பிறப்பெடுத்தது ஒரு பெண் குழந்தை. இங்கிலாந்து நாட்டில் 1978 ஜூலை 25 அன்று நிகழ்ந்த இந்தக் குழந்தையின் பிறப்பு ஒரு விஞ்ஞான சாதனையாகப் போற்றப்பட்டது. அந்தக் குழந்தையின் பெயர் "லூயி பிரவுன்'. அது இப்போது 30 வயதைக் கடந்து இயல்பான வளர்ச்சியைப் பெற்ற பெண்ணாக இன்னும் வாழ்கிறது.
அதே ஆண்டில் இந்தியாவிலும் ஒரு "சோதனைக் குழாய் குழந்தை' பிறந்தது என்பது வெளிச்சத்திற்கு அதிகம் வராத உண்மை. "லூயி பிரவுன்' பிறந்த 67 நாள்கள் கழித்து 1978 அக்டோபர் 3 அன்று துர்கா என்கிற "கானுப்பிரியா' என்ற அந்த சோதனைக் குழாய் பெண்ணின் பிறப்புக்கு விஞ்ஞான ரீதியாக வழிவகுத்த டாக்டர் முகோபாத்யாவின் இந்தச் சாதனை அங்கீகரிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல; அவர் விரக்தியில் 1981ல் தற்கொலை செய்து கொண்டு தன் வாழ்க்கையையே முடித்துக் கொண்டார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த அரிய விஞ்ஞான சாதனைகள் அப்போதிருந்தே பல விவாதங்களைக் கிளப்பின.
இவ்வாறு கருப்பைக்கு வெளியே உருவாக்கப்படும் "உயிர்க்கரு' கருப்பையில் செலுத்தப்பட்டுப் பின்னர் வளர்ந்து குழந்தையாகிப் பிரசவிக்கப்பட்டு வந்த பின்னர் அதன் உடலும், மூளையும் முழு வளர்ச்சி பெற்றதாக அமையுமா? அப்படி அமையாது போனால் அதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பு? என்ற கேள்விகள் எழுந்தன.
கூடவே, இந்த சோதனைக் குழாய்க் கருத்தரிப்பு முயற்சி என்பது, வேறொரு பெண்ணின் கருப்பையைப் பயன்படுத்திக் குழந்தை பிறப்பிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லாதா? அது வாடகைத் தாய்களை உருவாக்காதா? என்ற கேள்விகளும் கிளப்பப்பட்டன.
காலப்போக்கில் சோதனைக் குழாய் குழந்தை என்பது ஒரு வெற்றிகரமான விஞ்ஞான நிகழ்வாக மாறிவிட்டது. உலகத்தின் பல பகுதிகளிலும் இந்த முறையில், குழந்தைப் பேற்றுக்காக ஏங்கிய தம்பதியினர் தங்கள் ஏக்கம் தீர்ந்து மகிழ்வவடைவது நடைமுறைக்கு வந்தது.
ஆனால், இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறையில் சில நடைமுறைப் பிரச்னைகள் எழுந்தன.
கணவன் மனைவியாக இணைந்த இருவரின் உயிரணு கருமுட்டையை இணைத்துக் கருத்தரிக்க வைப்பது சில நேர்வுகளில் சாத்தியமாகாமல் போகலாம். இப்போது, வேறொரு பெண்ணின் கரு முட்டையைப் பயன்படுத்தி அந்த ஆணின் உயிரணுவை இணைத்துக் கருக்கொள்ள வைத்தபின், மனைவியின் கருப்பைக்குள் செலுத்திக் குழந்தை பிறக்க வைக்கலாம். இதில் கணவனின் குழந்தையைத் தனது கருப்பையில் வளர்த்துப் பிரசவித்த "தாய்மைப் பேறு' மட்டுமே அந்த மனைவிக்குச் சம்பவிக்கும். உடலுறவுக்கு அப்பாற்பட்டு நிகழும் கருத்தரிப்பு என்ற முறையில் இதையும் ஏற்றுக்கொள்ள அந்தத் தம்பதியர் சம்மதிக்கலாம்.
ஆனால், கணவன் மனைவி இருவரின் உயிரணு கருமுட்டையை வைத்தே கருத்தரிக்கச் செய்த பின்னரும், மனைவியின் கருப்பை, கரு வளர்ந்து குழந்தையாகப் பிரசவிப்பதற்கு இயலாததாக அமைந்து விடுகிற சூழலும் ஏற்படலாம். இப்படிப்பட்ட நிலைமையில்தான், தனக்குள் வளரும் சிசுவுக்கு எந்தவிதப் பங்களிப்பும் இல்லாத ஒரு மூன்றாவது பெண் தன் கருப்பையை மட்டும் அந்தக் குழந்தையின் பிறப்புக்குப் பயன்படுத்த இசையலாம். இதையே, கருப்பையை வாடகைக்கு விடுகிற ஏற்பாடு என்றும் அந்தப் பெண்ணை வாடகைத்தாய் என்றும் சொல்கிற புதிய நடைமுறைக்கு வழிவிட்டது.
கருப்பைக் கோளாறுகள் காரணமாக வாடகைத் தாயை நாடுவது என்ற தேவையையும் கடந்து, பேறுகாலச் சிரமங்களைத் தவிர்ப்பது என்பதற்காகவே, தன் குழந்தையை ஈன்றெடுக்க வேறொரு பெண்ணின் கருப்பையை வாடகைக்குப் பிடிப்பது என்ற நிலையையும் சில "தாய்மார்கள்' எடுப்பதும் நிகழ்கிறது!
சட்டப்படி இப்படி ஒரு மூன்றாவது நபரான வாடகைத் தாய் பிரசவிக்கும் குழந்தை, அந்த வாடகைத் தாயின் குழந்தையாகவே பதிவு செய்யப்படும். அந்தக் குழந்தையின் மரபணு ரீதியான பெற்றோர்கள் அந்தக் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்பதும் ஒரு நடைமுறை.
இந்த "வாடகைத் தாய்மை' என்பது இன்றைய உலகமயச் சூழலில் ஒரு சர்வதேசத் தொழிலாகவே மாறிவிட்டது என்பதுதான் இந்த விஞ்ஞான சாதனையின் பின் விளைவாக நேரிட்டுள்ள வக்கிரம். வாடகைத் தாயாக இருக்கச் சம்மதிக்கிற பெண், குழந்தை பிறந்த பின்னர் அதைப் பிரிய மறுக்கலாம்; பிரிந்த பின்னரும் அவளுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகள் நேரிடலாம்.
வெளிநாட்டவர்கள் இந்தியப் பெண்களை வாடகைத் தாயாக அமர்த்திக் குழந்தை பெற்றுப்போவது என்பது இப்போதைய நிலைமையில் 50 கோடி டாலர் வர்த்தகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது அதிர்ச்சித் தகவல். இந்தியாவில் இந்த "வாடகைத்தாய்'களைப் பிடித்துத் தருகிற "சேவை'யை மேற்கொள்ள 3,000 நிலையங்கள் உள்ளனவாம்!
வாடகைத் தாய்மை என்பதை முறைப்படுத்துவதற்கான சில நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தயாரித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பான பிரச்னைகளைக் கையில் எடுத்துள்ள நிலையில், நம் நாட்டின் மாதர் அமைப்புகளும், பொறுப்பான பல ஆலோசனைகளை முன்வைத்துள்ளன. அக்கறையோடு பரிசீலிக்கப்பட வேண்டிய பிரச்னை இது!
உ .ரா. வரதராசன்
நன்றி ; தினமணி

0 comments: