Wednesday, September 10, 2008

சுமங்கலித் திட்டம்: சாபமா, வரமா?

""சுமங்கலித் திட்டம்"" இது வறுமையில் வாடும் ஏழை இளம்பெண்களின் திருமணத்திற்காக அரசு அறிவித்திருக்கும் திட்டம் அல்ல. மாறாக இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி மேலும் லாபத்தில் கொழிப்பதற்காக நூற்பாலை உரிமையாளர்கள் தங்கள் மூளையைக் கசக்கிக் கண்டறிந்த திட்டம்.
சுமங்கலித் திட்டத்தின் கீழ் இளம்பெண்களைப் பணிக்குச் சேர்ப்பதற்காக வறுமையில் வாடும் குடும்பங்களை இலக்காக கொண்டு அணுகுகின்றனர். பெண்களைப் பணிக்குக் கொண்டு வர இடைத்தரகர்களும் உண்டு.
இத்திட்டத்தின் கீழ் பணிபுரிய 13 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்ட திருமணமாகாத பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தங்கள் பெண்களைப் பணிக்கு அனுப்பச் சம்மதிக்கும் பெற்றோர்களுக்கு உடனடியாக ரூ. 10 ஆயிரம் முன்பணம் வழங்கப்படுகிறது. பணிக்குத் தேர்வு செய்யப்படும் பெண்கள் நூற்பாலைகளில் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை பணிபுரிய ஒப்பந்தம் போடப்படும். ஒப்பந்தப்படி பணிமுடிக்கும் பெண்களுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும். தங்குமிடமும், உணவும் இலவசமாக வழங்கப்படும். பெற்றோர்கள், பெண்களைப் பார்க்க வாரம் ஒருமுறை அனுமதி அளிக்கப்படுகிறார்கள். மருத்துவ வசதி செய்து தரப்படும் என பல வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது. இதை முழுமையாக நம்பும் பெற்றோரும் தங்கள் பெண்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டதாக அகமகிழ்ந்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அவர்கள் 12 முதல் 16 மணிநேரம் பணிபுரியும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
மேலும், தங்குமிடம் என்ற பெயரில் ஒரு சிறிய அறைக்குள் 10 முதல் 15 பெண்கள் வரை ஆடு, மாடுகளை அடைப்பது போல் அடைக்கப்படுகின்றனர். இதனால் மிகக் கடுமையான மனஉளைச்சலுக்கு பெண்கள் ஆளாகின்றனர். மருத்துவ வசதியும் கிடையாது.
பெற்றோர்களையும் அவ்வளவு எளிதில் சந்திக்க அனுமதிப்பதில்லை. சந்திக்க வரும் பெற்றோரிடம் கொடுமைகளைப் பற்றி கூறிவிடக் கூடாது என்பதற்காக நிர்வாகத்தைச் சேர்ந்தவரும் உடனிருப்பார். தட்டிக் கேட்கும் பெற்றோரை அடியாள்கள் மூலம் மிரட்டுவது, ஊதியம் கொடுக்காமல் வெளியேற்றுவது ஆகியவையும் நடக்கிறது.
பாலியல் கொடுமை: இந்த கொடுமைகளுக்கு எல்லாம் உச்சகட்டமாக பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் கொடுமையும் நடக்கிறது என்பது அதிர்ச்சியளிப்பதாகும். பெண்களுக்கு இரவுப் பணி வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு அதிக நாள்கள் பெண்களுக்கு இரவுப் பணி வழங்கப்படுகிறது.
மேலும், அப்படிப்பட்ட சூழலில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்றுகளும் ஏற்படுகிறது. ஓராண்டிற்கு முன் கரூர் பகுதியில் உள்ள நூற்பாலையில் சுமங்கலித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த இளம்பெண்கள் 2 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு நிர்வாகத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு பெண்களுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் உடன்பணிபுரியும் பெண்கள் சிலரிடம் பரிசோதனை நடத்தினர். அதில் சில பெண்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவர அதிர்ந்த மருத்துவர்கள் அந்த ஆலையில் உள்ள பெண்கள் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை நடத்தியதில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஆலையில் இரவுப் பணியின்போது பெண்களிடம் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஆண்கள் பலர் தவறாக நடந்திருப்பதும், அப்பாவிப் பெண்கள் நோய்த்தொற்றுக்கு ஆளானதும் தெரியவந்தது. இச்சம்பவம் வார ஏடுகளில் பரபரப்புச் செய்தியாக வந்தது. இதையடுத்து அந்த நூற்பாலை சீல் வைத்து மூடப்பட்டது. ஆனால், நிர்வாகிகள் மற்றும் தவறிழைத்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நடத்தப்படும் கொடுமைகளை சில மாதர் அமைப்புகள் அரசுக்குப் புகாராக அனுப்பின.
இதையடுத்து அரசு ஓரிரு மாதங்களுக்கு முன்பு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில் சுமங்கலித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 145க்கு குறையாத ஊதியம் வழங்கவேண்டும் என்றும் அரசு ஆணையை அமல்படுத்தாதபட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.
ஆனால், இரண்டு வாரங்களுக்கு பின்பு மதுரை புறநகர் பகுதியில் உள்ள நூற்பாலையின் அருகே 14 வயது மதிக்கதக்க 3 பெண்கள் அதிகாலை நேரத்தில் சுற்றியதைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் பெண்களை அழைத்து விசாரித்தபோது அப்பெண்கள் சுமங்கலித் திட்டத்தின்கீழ் பணிபுரிய அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால் பணியின் போது மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், உணவுகூட சரியாக வழங்காததால் நள்ளிரவில் ஆலையின் வளாகச் சுவர் ஏறிக்குதித்து தப்பியதாகவும் தெரிவித்தனர். இதைப்பற்றி தகவலறிந்த போலீஸார் அப்பெண்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆலை நிர்வாகத்தின் மீது வெறும் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது.
இக்கொடுமைகள் திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் அதிகம் நடக்கிறது. விளக்கைக் கண்டுவிழும் விட்டில் பூச்சிகளாய் வறுமையால் வாழ்க்கையைத் தொலைக்கும் ஏழைப்பெண்களைக் காப்பாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.பி. உமாமகேஸ்வரன்

0 comments: