Saturday, September 13, 2008

புரியாத புதிராய் அவசர சிகிச்சை மையங்கள்!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள விபத்து அவசர சிகிச்சை மையங்கள் விழிப்புணர்வுடன் இயங்குவதால், சாலை விபத்துகளில் உயிர் இழப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்பது உண்மை.
ஆனால், விபத்தில் காயமடைந்தவர்கள் இந்த சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படும்போது அவர்கள் உள்ளே சிக்கித் தவிக்கும் நிலைதான் பரிதாபமாக உள்ளது.
இதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் காயங்களுடன் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற யாரும் முன்வருவதில்லை.
அப்படியே காப்பாற்றினாலும்கூட, போலீஸ் விசாரணையில் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
இந்த நிலை இப்போது இல்லை. நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி அளிக்க அரசு ஆங்காங்கே விபத்து அவசர சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
20062007 புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் 50 கி.மீக்கு ஒரு விபத்து அவசர சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
மொத்தம் உள்ள 100 மையங்களில், 64 மையங்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
36 மையங்கள் அதிகபட்சம் மாதம் ரூ. 40 ஆயிரம் தமிழக அரசின் பங்களிப்பு நிதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த 36 மையங்களுக்கும் அரசு மாதம் ரூ. 1.74 கோடி, சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கி வருகிறது.
இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டதால் சாலை விபத்துகளில் உயிர் இழப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
20062007 புள்ளிவிவரப்படி, கொடூர சாலை விபத்தில் உயிருக்கு போராடிய 16,796 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த அவசர சிகிச்சை மையங்களின் செயல்பாடுகளினால் உயிர்கள் காப்பாற்றப்படுவது என்பது உண்மை. ஆனால் அதற்கு பின்னணியில் உள்ள நிலையைப் பார்த்தால்தான் பரிதாபமாக உள்ளது.
தனியார் மருத்துவமனை வைத்திருப்பவர்களே பெரும்பாலும் இந்த மையங்களையும் ஏற்று நடத்தி வருகின்றனர். விபத்து நடத்தவுடன் காயமடைந்தவர்களை மீட்டு தங்கள் மருத்துவனைக்கு எடுத்து வருகின்றனர் இவர்கள்.
முதலில் முதலுதவி செய்ய வேண்டும். அதன்பிறகு, காயம் பலமாக இருந்தால் காயமடைந்தவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு எவ்வித கட்டணமும் இன்றி தீவிர சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்பது அரசு விதி.
காயமடைந்தவர்கள் அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற விரும்பினால், அதற்கு எவ்விதத் தடையும் இல்லை.
அவசர சிகிச்சை மையங்களை நடத்தும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் முதலுதவி என்ற பெயரில் காயமடைந்தவர்களை அவசர சிகிச்சை வார்டில் சேர்த்து விடுகின்றனர்.
உறவினர்கள் யாரையும் உள்ளே சென்று பார்ப்பதற்குகூட இவர்கள் அனுமதிப்பதில்லை
அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியோ தீவிர சிகிச்சை செய்வதற்கான அவசியம் குறித்தோ காயமடைந்தவர்களிடமோ, அல்லது அவரது உறவினர்களிடமோ மருத்துவர்கள் கூறுவதில்லை.
மணிக்கணக்கில் காயமடைந்தவர்களை அவசர சிகிச்சை வார்டில் வைத்து விடுகின்றனர். பிறகு உறவினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகே, வெளியே உள்ள மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கின்றனர்.
மருத்துவமனையை விட்டு செல்லும் போது சிகிச்சைக்குச் செலவாக பெரும் தொகையை சொல்லி அதை செலுத்த வேண்டும் என்கின்றனர்.
காயமடைந்தவரின் உயிருக்கு ஒருவேளை ஆபத்து ஏற்படும் என தெரிந்தால் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்து விடுகின்றனர்.
அந்த வாகனத்திற்கான கட்டணத்தைக்கூட உறவினர்களிடம் வசூலித்து விடுகின்றனர்.
சில நேரங்களில் அவசர வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து இருப்பதாகக்கூறி ஏமாற்றிப் பணம் வசூலிப்பதாகவும் உறவினர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் ஏழைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் சில மருத்துவமனைகளில் உறவினர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்குமிடையே தகராறே ஏற்படுகிறது. இந்த குறையை யாரிடம் சென்று முறையிடுவது என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
இதனால் அவசர சிகிச்சை மையங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறும் இதுபோன்ற மருத்துவமனைகளை அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். அந்த மருத்துவமனைகளில் போதுமான அடிப்படைக் கட்டமைப்பு மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும்.
புரியாத புதிராகவும், தொடர்ந்து தவறு செய்யும் அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள மருத்துவனை மையங்களுக்கான அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும்.
சு . பழனி
நன்றி : தினமணி

0 comments: