Wednesday, October 1, 2008

பி.எஸ்.ஆர். என்ற மாமனிதர்

இந்திய வரலாற்றில் 20ம் நூற்றாண்டுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. காரணம், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் தேசிய விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்து கூர்மை அடைந்த காலம். தேச விடுதலைக்கு அழைத்துச் சென்ற காலம். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி சுதந்திர இந்தியாவின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்காகத் திட்டங்கள், இயக்கங்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலம். இந்த இரண்டு காலங்களிலும் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் வாழ்ந்து நாட்டு விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபட்ட முக்கிய போராளிகளில் ஒருவர்தான் பி. சீனிவாசராவ். 1907ம் ஆண்டு கர்நாடகத்தில் பிறந்து 1961 செப்டம்பரில் தஞ்சையில் இறந்தார். 52 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். இந்த குறுகிய காலத்தில் அவர் ஆற்றிய பணி, அவரது பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கர்நாடகாவில் தென்கனரா பகுதியில் பிறந்து பெங்களூரில் கல்வி பயின்றவர். சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தபோது ""மாணவர்களே ஆங்கிலேயர் கல்வி முறையை எதிர்த்து கல்விக்கூடங்களில் இருந்து வெளியேறுங்கள். பெற்றோர்களே! பிள்ளைகளை அவர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு அனுப்பாதீர்கள்'' என 1920ல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கட்டளையிட்டது. இந்த அறைகூவலை ஏற்று 1920களில் கல்லூரிப் படிப்பை தூக்கியெறிந்து விட்டு வெளியேறிய தேசப்பற்று மிக்க பல மாணவர்களில் பி. சீனிவாசராவும் ஒருவர்.

சுதந்திர வேட்கையால் கல்லூரியை விட்டு வெளியேறி நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்ற அவர் பிறகு சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார். சென்னையில் 1930ம் ஆண்டு நடைபெற்ற அன்னிய துணி விற்பனைக்கு எதிரான மறியலில் கலந்து கொண்டார். காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய பி.எஸ்.ஆர். 1936ல் தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையில் தோழர்கள் பி. இராமமூர்த்தி மற்றும் ஜீவானந்தம் ஆகியோருடன் சேர்ந்தார். 1943ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தஞ்சையில் விவசாயிகளைத் திரட்டும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து பி.எஸ்.ஆர். தஞ்சைக்குச் சென்றார். தமிழகத்தின் மற்ற பகுதிகளை விடவும் அன்றைய தஞ்சையில் அரசியல், பொருளாதார, சமூகச் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது. மாவட்டத்தில் நிலங்கள் அனைத்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலச்சுவான்தார்கள்; மடாதிபதிகள் மற்றும் ஜமீன்தார்கள் போன்றோருக்குச் சொந்தமாக இருந்தது. தமிழகத்திலேயே நிலக்குவியல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்தான் அதிகம்; மறுபுறத்தில் விவசாயத்தில் அன்றாட சாகுபடி வேலைகளைச் செய்யும் பெரும்பான்மையோர் நிலமற்ற தலித் பண்ணையாள்களாக இருந்தார்கள். ஜாதி இந்து மக்களில் பெரும்பான்மையோர் குத்தகை சாகுபடிதாரர்களாக இருந்தார்கள். நிலச்சுவான்தார்கள் அனைவரும் ஜாதி இந்துக்கள். தலித் பண்ணையாள்கள் தீண்டாமை கொடுமைக்கும், நிலப்பிரபுத்துவத்தின் கொடுமையான சுரண்டலுக்கும் ஆளானார்கள். கீழத் தஞ்சையில் ஜாதியும், நிலவுடைமை ஆதிக்கமும் பின்னிப் பிணைந்திருந்தது.

பி.எஸ்.ஆருக்கு தமிழில் பேச முடியும். ஆனால் சரியாகப் படிக்கவும், எழுதவும் தெரியாது. மொழி புதிது; மக்களும் புதியவர்கள். இத்தகைய தடைகளையும் கடந்து பி.எஸ்.ஆர். தஞ்சை மாவட்டத்திற்குச் சென்று கிராமப்புற விவசாயிகளைத் திரட்டினார்.

கீழத் தஞ்சையில் தீண்டாமை கொடுமை பல வடிவங்களில் இருந்தது. ஜாதி இந்துக்கள் தெருக்களில் தலித் மக்கள் செல்ல முடியாது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. டீக்கடைகளில் தலித் மக்களுக்குச் சமமான இடமில்லை. விவசாயத் தொழிலாளர்கள் ஆண்களும், பெண்களும் சூரிய உதயத்திற்கு முன் வேலைக்குச் செல்ல வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகுதான் வீட்டிற்கு வர முடியும். இவ்வாறு வேலை செய்ய மறுப்போருக்கு சாட்டை அடியும், சாணிப்பாலும் தண்டனை. இப்படிப்பட்ட சூழலில்தான் பி.எஸ்.ஆர். தஞ்சை மாவட்டத்திற்குச் சென்றார். கீழத்தஞ்சையில் மன்னார்குடி வட்டம், களப்பால் கிராமத்தில் களப்பால் குப்புவின் தலைமையில் பி.எஸ்.ஆருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக்கொண்டு பி.எஸ்.ஆர். ஏற்புரை ஆற்றினார். ""நீங்கள் எல்லாம் தாய் வயிற்றில் 10 மாதம் கருவாகி, உருவாகி வெளியில் வந்தவர்கள்தான். உங்கள் மிராசுதாரர்களும், கார்வாரிகளும் கூட அப்படிப் பிறந்தவர்கள்தானே. அவர்களைப் போன்று நீங்களும் மனிதர்கள்தான். உங்களுக்கும், அவர்களுக்கும் தலைக்கு இரண்டு கை, இரண்டு கால்தானே. வேறு என்ன வித்தியாசம். உங்களுக்கு சாணிப்பால் புகட்டினால், சாட்டையால் அடித்தால் அது சட்டவிரோதம் அப்படித் தண்டிக்க வருவோரை கைகளை உயர்த்தி ஓட ஓட விரட்டியடியுங்கள். அடியாட்கள் ஆயுதங்களுடன் தாக்க வந்தால், பிடித்துக் கட்டிப் போடுங்கள். ஒருவர் இருவருக்குத் தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம். பி.எஸ்.ஆர். ஆற்றிய உரையை இப்போது படிப்போர் அன்றைய சூழலில் கீழத்தஞ்சையில் இருந்த அரசியல் சமூக பொருளாதார நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். பி.எஸ்.ஆர். ஆற்றிய உரை கூடியிருந்தவர்கள் சிந்தனையில் மின்சாரத்தைப் பாய்ச்சியது போல் ஆயிற்று. தினமும் கிராமம், கிராமமாக பி.எஸ்.ஆரும் மற்ற தலைவர்களும் சென்று விவசாயிகள் சங்கக் கொடியையும், கம்யூனிஸ்ட் கொடியையும் ஏற்றினார்கள். இது கீழத் தஞ்சை முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. மணலி கந்தசாமி, ஆர். தருமலிங்கம், பி.எஸ். தனுஷ்கோடி, ஏ.கே. சுப்பையா, கே.ஆர். ஞானசம்பந்தம், ஏ.எம். கோபு, எம்.பி. கண்ணுசாமி, மணலூர் மணியம்மை போன்ற மாவட்டத் தலைவர்களும் பி.எஸ்.ஆர். உடன் கிராமம், கிராமமாகச் சென்றார்கள்.

சாணிப்பால் சாட்டையடி போன்ற தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும், பண்ணையாள்களுக்கு இழைக்கப்பட்ட பல அநீதிகளை எதிர்த்தும் குத்தகை விவசாயிகளுக்கு நியாயமான குத்தகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி போன்ற வட்டங்களில் பரவலாக இயக்கம் துவங்கியது. இதனுடைய பிரதிபலிப்பாக கீழத்தஞ்சை முழுவதும் தலித் மக்கள் மத்தியில் ஓர் எழுச்சி ஏற்பட்டது.

இதன் விளைவாக காவல்துறை தலையிட்டு விவசாய சங்கப் பிரதிநிதிகளையும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி 1944ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. சாணிப்பால், சாட்டையடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, நிலச்சுவான்தார்களின் பிரதிநிதிகளும், தலித் பிரதிநிதிகளும் சரிசமமாக உட்கார்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நிலச்சுவான்தார்களின் கையிலிருந்த சாட்டையை கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாய சங்கமும் பறித்து அன்று நிலவிய மோசமான தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இத்தகைய போராட்டத்தின்போது, ஆங்கிலேயர் அரசு கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்டது. நிலச்சுவான்தார்களின் கொடுமை ஆங்கிலேயர் அரசின் அடக்குமுறை இவைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டுவதில் பி.எஸ்.ஆர். பிரதான பாத்திரம் வகித்தார். தான் மட்டுமல்ல. பல தலைவர்களையும் உருவாக்கினார்.

இதனால்தான் இவரை தலைவர்களை உருவாக்கிய தலைவர் என்று கூறினார்கள். தடியடி, கைது, சிறை என பல அடக்குமுறைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பினார். நாடு விடுதலை அடைந்த பிறகு சுதந்திர ஆட்சியில் பண்ணை ஆள்களுக்கும் குத்தகை விவசாயிகளுக்கும், விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. போராட்டம் தொடர்ந்தது.

1948 51ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. பி.எஸ்.ஆர். மற்றும் மாநிலத் தலைவர்கள் தலைமறைவாகச் செயல்பட வேண்டியிருந்தது. இவருடைய தலைக்கு அன்றைய மாநில அரசு விலை வைத்தது. உழைப்பாளி மக்களின் நலனே தன்னுடைய வாழ்க்கை என்ற அடிப்படையில் பல சிரமங்களையும் ஏற்று பி.எஸ்.ஆர். செயல்பட்டு வந்தார். 1952ம் ஆண்டு பழைய சென்னை மாகாணத்திற்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இன்றைய தமிழகப் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் 6 இடங்கள் தஞ்சை மாவட்டத்தில் இருந்து என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிக்காக பி.எஸ்.ஆர். பாடுபட்டார். அவர் தேர்தலில் நிற்கவில்லை.

தொடர்ச்சியாக நடந்த போராட்டத்தின் விளைவாக மாநில அரசு 1952ம் ஆண்டு பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது. குத்தகை விவசாயிகளுக்கும், ஓரளவுக்குப் பாதுகாப்பு கிடைத்தது. 1958ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த கேரள அரசு நில உச்சவரம்புச் சட்டத்தை கொண்டு வந்தது. 5 பேர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு இரு போக நிலம் 15 ஏக்கர் என இந்தச் சட்டம் நிர்ணயித்தது. இது இந்தியா முழுவதும் ஒரு பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. இதனால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எல்லா மாநிலங்களிலும் 1959க்குள் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தது. தமிழகத்தில், 1960 ஏப்ரல் 6ம் தேதியன்று நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் உச்ச வரம்பு என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதர மாநில சட்டங்களில் இருந்த பாதகமான அம்சங்களெல்லாம் இச்சட்டத்தில் இருந்தன. இந்தச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு தழுவிய மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் திட்டமிட்டது. இம்மறியல் வெற்றி பெற விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில் பி.எஸ்.ஆர். மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். ஓய்வின்றி அலைந்ததால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு 1961 செப்டம்பர் 30ம் தேதி தஞ்சையில் கட்சி அலுவலகத்தில் இறந்தார். தஞ்சை மாவட்டமே கண்ணீர் வடித்தது. அங்கிருந்து அவரது உடல் இறுதி நிகழ்ச்சிக்காக திருத்துறைப்பூண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது வழிநெடுகிலும் லட்சக்கணக்கில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடகத்தில் தென் கனராவில் பிறந்து பெங்களூரில் படித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி தஞ்சைக்குச் சென்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன்னுடைய வாழ்க்கையையே பி.எஸ்.ஆர். அர்ப்பணித்தார். இன்றும் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் தீண்டாமை கொடுமை ஒழிக்கப்பட்டுள்ளது கீழத் தஞ்சையில்தான். இத்தகைய மாற்றத்திற்காக போராடிய அந்த மாமனிதரின் நினைவு நாள் செப்டம்பர் 30.

(கட்டுரையாளர்: மத்தியக் குழு உறுப்பினர் சி.பி.ஐ.(எம்))

0 comments: