Tuesday, October 28, 2008

மாறும் உலகில் மாறத்தான் வேண்டும்

இப்படியாகப் பேசினால் கைது செய்வார்கள் என்பது மதிமுக தலைவர் வைகோவுக்கு தெரியாத விஷயம் அல்ல. ஏற்கெனவே 18 மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு இதெல்லாம் தெரிந்தவைதான்.
ஆகவேதான் பேசினார்.
அதற்கான காரணங்கள் இரண்டு.
முதலாவதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இலங்கைத் தமிழருக்காக இந்திய அரசை எதிர்த்த அரசியல் தலைவர் என்ற புகழ் தனக்கே இருக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதிக்கு போய்விடக்கூடாது
இரண்டாவதாக, தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு குரல் கொடுத்தாலும், ஊடகங்கள் முக்கியத்துவம் தந்தாலும், தமிழ்நாட்டு மக்களிடையே 1980களில் நிலவிய உணர்ச்சிக் கொந்தளிப்பு காணப்படவில்லை.
அந்த கொந்தளிப்பை ஏற்படுத்தத்தான் தனித்தமிழ்நாடு பேச்சு, திரைத்துறை பேரணி, ரயில்எரிப்பு, ராஜீவ் சிலை உடைப்பு எல்லாமும். ஆனால் இவை தமிழக மக்களிடம் இலங்கைத் தமிழருக்கு ஆதரவான உணர்ச்சியைத் தூண்டுவதற்கு பதிலாக, எதிர்நிலை கருத்தையே உண்டாக்குகின்றன.
1980களில் இலங்கைத் தமிழருக்காக தமிழ்நாடு முழுவதும் கொதித்தெழுந்தது. ஆதரவு திரண்டது. நிதி திரண்டது. அவர்கள் சார்பில் நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சிகளில் புத்தகமும் கையேடும் வாங்காத தமிழரே இருக்க முடியாது. பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்காக மருந்துகளும், துணிகளும் மூட்டைமூட்டையாக எல்லா ஊர்களிலும் கொடுத்தார்கள்.
அன்றைய தினம் இலங்கைத் தமிழனை தமிழகத் தமிழன் பிரித்துப் பார்க்கவில்லை. பிரச்னையை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக காயமடைந்த, பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு தமிழக கல்லூரி மாணவர்கள்தான் தோழர்களாக நின்றனர். தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடைபெற்ற ஊர்வலங்களில் பங்குகொண்டோர் அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழர்கள்.
இலங்கை ராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அனைத்து தாக்குதல்களும் புறநானூற்று வீரமாகக் கருதப்பட்டன.
திரைப்படத்தில், ஒரு வில்லனை வீழ்த்த ஓர் அப்பாவி கதாநாயகன் தானும் துப்பாக்கியைக் கையில் எடுத்து, வில்லனை கதிகலங்கச் செய்கிறபோது ரசிகர்களுக்கு ஏற்படும் மனமகிழ்ச்சிக்கு ஒப்பாக, இலங்கை ராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அனைத்து தாக்குதல்களும் ஆனந்தத்தைத் தந்தன. புலிகளின் மரணங்கள் கண்ணீரை வரவழைத்தன.
ஆனால் தமிழக மக்கள் அனைவரும் நெருப்பைத் தொட்டவர்கள் போல சுருண்டுபோன சம்பவமாக அமைந்தது ராஜீவ் காந்தி படுகொலை. அந்தக் கொலையை விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், தமிழ் மண்ணில், இலங்கைத் தமிழ்ப் போராளிகளால் நடத்தப்பட்ட இந்த மனிதவெடிகுண்டு தாக்குதல், இதுநாள்வரை ஆதரித்த தமிழர்களை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ராஜீவ் கொலையை சிலர் மட்டும் நியாயப்படுத்திய போதிலும் பொதுவான தமிழர்களால் அந்த குற்றவுணர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை.
அதனால்தான் இன்று உணர்வு பூர்வமான கொந்தளிப்பு தமிழகத்தில் உருவாகவில்லை. அரசியல் கட்சியினரும், ஊடகங்களும் பேசிய போதிலும், இது ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் பேசுகிற, வேதனைப்படுகிற விஷயமாக மாறவில்லை.
இதற்கு ஓர் உதாரணம் இலங்கை அரசின் தாக்குதலை நிறுத்தக் கோரி மத்திய அரசுக்கு தந்தி கொடுக்கும்படி தமிழக முதல்வர் கருணாநிதி சொன்னார். எத்தனை தந்திகள் கொடுக்கப்பட்டன?.
இலங்கைத் தமிழர்வேறு விடுதலைப் புலிகள் வேறு என்று அரசியல் கட்சிகள் சொன்னாலும், அந்த சொல் தமிழக மக்களிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்த உண்மை புரிந்திருந்தும் புரியாததுபோல தமிழக அரசியல் தலைவர்கள் நடித்துக் கொண்டிருப்பதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான விஷயமாக இதை மாற்றுகிறது.
இலங்கைத் தமிழர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசை நிர்பந்திக்கும் தமிழக அரசியல் கட்சிகள், ஆயுதத்தைக் கைவிட்டு, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று விடுதலைப் புலிகளிடம் வலியுறுத்த தயங்குகிறார்கள். ஒரு சகோதர தமிழன் உலகின் 30 நாடுகளில் பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவது பெருமையாக இருக்க முடியுமா?
விடுதலைப் புலிகளுக்குத் தேவையான "அனைத்தும்' தமிழக கடல்எல்லை வழியாகத்தான் செல்கின்றன என்பது தெரிந்திருந்தும், தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் இந்திய அரசு மௌனமாக இருப்பதும்கூட இலங்கைத் தமிழர் மீதான அக்கறைதான் என்பதை ஏன் தமிழக அரசியல் கட்சிகள் நினைத்துப்பார்க்கவில்லை?.
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, விடுதலைப் புலிகள் ஆயுதத்தை ஏந்தி நடத்திய கெரில்லா யுத்தம் தமிழரின் வீரமாக, அறப்போராகப் பார்க்கப்பட்டது. அவர்களைப் போராளிகள் என்றுதான் அழைத்தோம்.
ஆனால், கால்நூற்றாண்டில் உலகத்தின் போக்கு மாறிவிட்டது. "உள்நாட்டுப் போர்' என்ற சொல்லாடல் மறைந்து, ஆயுதம் எடுக்கும் எந்த ஒரு குழுவைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் பயங்கரவாதி என்பதுதான் இன்றைய இன்றைய உலகத்தின் பார்வை. ஆகவே அரசியல் வழியில் தீர்வு காண்பது மட்டுமே இலங்கை தமிழர் பிரச்னைக்கு சரியானதாக வழிமுறையாக இருக்கும்.
இன்று இந்தியா தலையிட்டு இலங்கை அரசைப் போர்நிறுத்தம் செய்ய வைத்தாலும் எத்தனை நாளைக்கு நீடிக்கும்? கால நிபந்தனை உண்டா? மீண்டும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கியதும், மீண்டும் தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் போராட்டத்தை கையில் எடுப்பார்களா? இன்னும் எத்தனை காலத்துக்கு இது தொடரும்?
விடுதலைப் புலிகள் ஒரு மாபெரும் சக்தி என்பதை இலங்கை அரசுக்கும் உலகுக்கும் நிரூபித்தாகிவிட்டது. இனியும் ஆயுதம் தேவைதானா?
கொடுமையை எதிர்க்க, ஒரு மாணிக்கம் மாணிக்"பாட்சா'வாக மாறி வில்லனுக்குத் தான் யார் என்பதைக் காட்டிய பிறகு, மீண்டும் பழைய மாணிக்கமாக மாற வேண்டும். மாறினால்தான் சுபம்.
இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

1 comments:

said...

விடுதலைப் புலிகள் ஒரு மாபெரும் சக்தி என்பதை இலங்கை அரசுக்கும் உலகுக்கும் நிரூபித்தாகிவிட்டது. இனியும் ஆயுதம் தேவைதானா?
கொடுமையை எதிர்க்க, ஒரு மாணிக்கம் மாணிக்"பாட்சா'வாக மாறி வில்லனுக்குத் தான் யார் என்பதைக் காட்டிய பிறகு, மீண்டும் பழைய மாணிக்கமாக மாற வேண்டும். மாறினால்தான் சுபம்.//


அதுக்கு மார்க் ஆண்டனிகள் விட்டால் தானே... ஒன்றா இரண்டா எத்தனை ஆண்டனிகள்.. இன்னமும் மாணிக்கம் ஆகும் காலம் வரவில்லையோ?