Wednesday, October 22, 2008

சந்திரனுக்கு எதற்கு விண்கலம்?

அமெரிக்கா 1969ம் ஆண்டு தொடங்கி சந்திரனுக்கு அப்போலோ விண்கலங்கள் மூலம் 12 விண்வெளி வீரர்களை அனுப்பி சந்திரனை ஆராய்ந்தது. சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கிருந்து கல்லையும் மண்ணையும் அள்ளி வந்தனர். அவை விரிவாக ஆராயப்பட்டு விட்டன. ரஷ்யாவோ (அப்போதைய சோவியத் யூனியன்) சந்திரனுக்கு ரஷ்ய விண்வெளி வீர்ரகளை அனுப்பாமலேயே தானியங்கிக் கருவிகள் மூலம் சந்திரனிலிருந்து இதே போல கல்லையும் மண்ணையும் கொண்டு வந்தது. இதெல்லாம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.
இந்த நிலையில் 2007 செப்டம்பரில் ஜப்பான் ஆளில்லா விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்பியது. அது சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே ஆண்டு அக்டோபரில் சீனா இதே போல ஆளில்லா விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்ப அதுவும் சந்திரனை சுற்றிக் கொண்டிருக்கிறது. சந்திராயன்1 என்று பெயர் சூட்டப்பட்ட ஆளில்லா விண்கலத்தை இந்தியா இப்போது சந்திரனுக்கு அனுப்ப இருக்கிறது.
இந்தியா எதற்கு இப்போது சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப வேண்டும்? எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, இத் திட்டத்துக்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது? இதுவரை கண்டுபிடிக்காத விஷயங்களை இந்திய விண்கலம் போய் கண்டுபிடிக்கப் போகிறதா? எங்களாலும் சாதிக்க முடியும் என்ற வெறும் பெருமைக்காக இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? இப்படியெல்லாம் கேட்க முடியும்.
முதலாவதாக ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சந்திரனைப் பற்றி எல்லா விஷயங்களும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக நினைத்தால் அது தவறு. சந்திரனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. சொல்லப்போனால் சந்திரன் தோன்றியது எப்படி என்பதே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சந்திரனில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் இருக்கலாம் என்று அண்மைக்காலமாக ஒரு கருத்து இருந்தாலும் இதுவும் திட்டவட்டமாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. சந்திரனில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் இருக்கிறது என்று தெரிய வந்தால் விண்வெளி வீரர்களும் ஆராய்ச்சியாளர்களும் சந்திரனில் தளம் அமைத்துக் கொண்டு அங்கேயே தங்கி பல ஆய்வுகளை நடத்த முடியும்.
சந்திரனில் தண்ணீர் உள்ளதா என்று கண்டுபிடிப்பதில் இந்திய விண்கலம் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது. 2020ம் ஆண்டு வாக்கில் சந்திரனின் தென் துருவப் பகுதியில் ஒரு தளம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இப் பின்னணியில் இந்திய விண்கலம் செய்யும் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். இதிலிருந்து இந்தியாவின் விண்கல திட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
சந்திராயன் விண்கலத்தில் 11 ஆராய்ச்சிக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் படப்பிடிப்புக் கருவிகள் உள்பட ஐந்து கருவிகள் இந்தியா உருவாக்கியவை. அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா அனுப்பிய இரு கருவிகள், ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய மூன்று கருவிகள், ரஷ்யா அளித்துள்ள ஒரு கருவி என ஆறு கருவிகள் இந்த விண்கலத்தில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க நாஸா அமைப்பும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் ரஷ்யாவும் இந்தத் திட்டத்தை எந்த அளவுக்கு முக்கியமானதாகக் கருதுகிறது என்பதை இது காட்டுகிது.
இங்கு வேறு ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு செயற்கைக்கோளிலிருந்து நுட்பமான படங்களை எடுப்பது தொலையுணர்வு தொழில் நுட்பம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் பல செயற்கைக்கோள்கள் உயரே பறந்தபடி பூமியைப் படம் எடுப்பதில் ஈடுபட்டுள்ளன. இத் தொழில் நுட்பத்தில் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை வகிக்கிறது இந்தியா. இப்போது இந்தியாவின் விண்கலம் சந்திரனுக்கு மேலாகப் பறந்து சந்திரனைச் சுற்றிச் சுற்றி வரும்போது இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சந்திரனை முப்பரிமாணப் படங்களை எடுக்கப் போகிறது. சந்திரனில் மேடு, பள்ளம் எது, சமதரை எது என்பதை இப் படங்கள் விவரமாகக் காட்டும்.
இதுவரை சந்திரனின் மிகத் துல்லியமான முப்பரிமாணப் படங்கள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இது குறித்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளது என்றாலும் இதில் அமெரிக்காவை இந்தியா முந்திக்கொண்டுவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்க வீரர்கள் சந்திரனின் தென் துருவப் பகுதியில் போய் இறங்குவது என திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக தென் துருவப் பகுதியில் உள்ள நில அமைப்பு பற்றி அறிந்து கொள்ள பூமியிலிருந்தபடி ராடார் கருவிகள் மூலம் தென் துருவப் பகுதியின் முப்பரிமாணப் படங்களைத் தயாரிப்பதில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அப்படிப் பார்க்கும் போது சந்திரன் முழுவதுக்குமான விரிவான முப்பரிமாணப் படங்களை முதன் முதலாக எடுக்கப் போவது இந்திய விண்கலமாகவே இருக்கும்.
இந்தியா 2011ம் ஆண்டில் சந்திரனுக்கு சந்திராயன்2 என்னும் பெயர் கொண்ட இன்னொரு விண்கலத்தை அனுப்ப இருக்கிறது. அந்த விண்கலத்திலிருந்து ஓர் ஆய்வுக் கலமும் தானியங்கி வாகனமும் கீழே சந்திரனின் தரையில் இறங்கும். இவற்றை சந்திரனில் எங்கு இறக்குவது என்று முடிவு எடுப்பதில் இப்போது எடுக்கப்பட இருக்கும் முப்பரிமாணப் படங்கள் மிகவும் உதவியாக இருக்கும். சந்திரனில் சமதரை என்பது அபூர்வம். சந்திரனின் நிலப்பரப்பில் சிறியதும் பெரியதுமாக சுமார் 5 லட்சம் பள்ளங்கள் உள்ளன. சந்திரனில் இறக்கப்படும் ஆய்வுக் கலம் சரிவான இடத்தில் இறங்கினால் உருண்டு விழுந்து செயல்படாமல் போகலாம்.
இந்திய விண்கலம் சந்திரனில் இப்போது மேற்கொள்ள இருக்கும் இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் உள்ளதா என்பது தொடர்பானது. தண்ணீர் ஆராய்ச்சிக்கு மட்டும் சந்திராயன்1 விண்கலத்தில் நான்கு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்திய விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ள வேறு ஒரு கருவி சந்திரனின் நிலத்துக்கு அடியில் சில மீட்டர் ஆழம் வரை ஊடுருவி ஆராயும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரனின் நிலப்பரப்பில் யுரேனியம், தோரியம் போன்ற அணுசக்தி வளங்கள் உள்ளனவா என்று கண்டறிவதும் சந்திராயனின் ஆய்வுத் திட்டங்களில் அடங்கும்.
இந்தியா கடந்த பல ஆண்டுகளில் பூமியைச் சுற்றும் வகையில் எவ்வளவோ செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. ஆனால் சந்திரனைச் சுற்ற ஒரு விண்கலத்தை அனுப்புவது என்பது இதுவே முதல் தடவை.
சந்திராயன் விண்கலம் சென்னைக்கு வடக்கே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படும். அந்த விண்கலம் முதலில் பூமியை சில முறை சுற்றி வரும். அதன் பிறகு அது சந்திரனை நோக்கிக் கிளம்பும். பூமியிலிருந்து சந்திரன் 3 லட்சத்து 86 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சந்திராயன் விண்கலம் சந்திரனுக்குப் போய்ச்சேர ஐந்தரை நாட்கள் ஆகும். அதன் பின்னர் அது சந்திரனை சுற்றிவர ஆரம்பிக்கும். சந்திரனின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி அது சந்திரனைச் சுற்றும். சந்திரனை அது நிலையாக சுற்ற ஆரம்பித்த பிறகு 29 கிலோ எடையுள்ள ஆய்வுக்கலம் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சந்திரனை நோக்கி கீழே இறங்கி இறுதியில் தரையில் மோதி நொறுங்கும். சந்திரனுக்கு அடுத்த தடவை ஒரு விண்கலத்தை அனுப்பும் போது இறங்கு கலத்தை எப்படி கீழே இறக்குவது என்பதற்கு இப்போதைய பரிசோதனை உதவியாக இருக்கும்.
சந்திராயன் விண்கலம் சுமார் 2 ஆண்டுகள் சந்திரனை சுற்றிச் சுற்றி வந்து படங்களை எடுக்கும். பல ஆய்வுகளை நடத்தும்.
சந்திரனுக்கு விண்கலத்தை செலுத்த இருக்கும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டானது பிற நாடுகளின் ராக்கெட்டுகளுடன் ஒப்பிடுகையில் எடை அளவிலும் திறன் அளவிலும் சிறியதுதான். ஆனால் மூர்த்தி (உருவம்) சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்ற அளவில் அந்த ராக்கெட் தொடர்ந்து 12 தடவை வெற்றி கண்டுள்ளதாகும்.
இந்தியாவின் இப்போதைய திட்டம் எதிர்காலத்தில் சந்திரனில் ஆய்வுகளை நடத்துவதற்கும் அங்குள்ள கனி வளங்களை எடுத்து வருவதற்கும் இந்தியாவுக்கு உரிமை கிடைக்க வழி செய்யலாம்.
முன்னர் இந்தியா ஆழ்கடல்களில் தரையில் கிடைக்கின்ற விலை மதிப்பு கொண்ட உலோக உருண்டைகள் பற்றி விரிவாக ஆராய்ச்சி நடத்தியது. பின்னர் இவற்றை மேலே எடுப்பது குறித்து உலகின் பல நாடுகளும் மாநாடு நடத்தி உடன்பாட்டை உருவாக்கிய போது ஏற்கெனவே இத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்ட முன்னோடி நாடு என்ற முறையில் இந்துமாக்கடலின் தரையில் கிடக்கின்ற உலோகக் கட்டிகளை மேலே எடுப்பதற்கு இந்தியாவுக்கு தனி உரிமை வழங்கப்பட்டது. அதுபோல இந்தியா இப்போது சந்திரனில் மேற்கொள்கிற ஆய்வுகளின் பலனாக எதிர்காலத்தில் சந்திரனில் உள்ள அரிய கனி வளங்களை எடுப்பதற்கு இந்தியாவுக்கு உரிமை கிடைக்கலாம். அந்த அளவில் சந்திரனுக்கு இப்போது விண்கலத்தை அனுப்புவதை வீணான முயற்சி என்று கருதிவிடலாகாது.
என். ராமதுரை
நன்றி : தினமணி

0 comments: