Wednesday, October 22, 2008

பின்தங்குகிறோமே, ஏன்?

அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்கள் சில வெளியாகி இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்திய அரசுப் பணியில் தொடங்கி, எல்லா அகில இந்திய ரீதியிலான தேர்வுகளிலும் தமிழகம் முதலிடம் வகித்ததுபோக, இப்போது அறிஞர் அண்ணா எழுதியதுபோல "ஏ, தாழ்ந்த தமிழகமே....' என்று நாமெல்லாம் அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை போலிருக்கிறது. அதற்குக் காரணம், நமது தவறான கல்விக் கொள்கையும், தவறான அணுகுமுறையும்தான்!
இந்த ஆண்டு நடந்து முடிந்திருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மிக அதிகமான இடங்களில் ஆந்திரப் பிரதேசம், புது தில்லி, மகாராஷ்டிரம், பிகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்திருக்கும்போது, தமிழகம் எங்கோ பின்னணியில் பரிதாபமாக இருக்கும் நிலைமை. வெற்றி பெற்று இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் படிக்க நுழைவு பெற்றவர்களில் 1,697 பேர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 202 பேர்தான். மிகவும் பின்தங்கிய, சிறிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 236 பேர் நுழைவு பெற்றிருக்கும்போது, அந்த அளவுக்குக் கூடத் தமிழக மாணவர்களால் நுழைவுத் தேர்வில் மதிப்பெண்கள் பெற முடியவில்லையே, ஏன்?
இந்தியத் தொழில்நுட்பக் கழக நுழைவுத் தேர்வுகளில் மட்டுமல்ல, எல்லா அகில இந்திய ரீதியிலான தேர்வுகளிலும் நமது தமிழக பாடத்திட்ட முறையில் படிக்கும் மாணவர்கள், ஏனைய மாநிலத்தைச் சேர்ந்தவர்களுடன் போட்டி போட முடியாத நிலைமை காணப்படுகிறது.
நமது மாநிலக் கல்வித் திட்டத்தில், பழைய "மெக்காலே' கல்வி முறையின் மனப்பாடம் செய்யும் அடிப்படை தொடர்கிறது. ஆனால், மத்திய பள்ளிக் கல்வி ஆணையம் என்று சொல்லப்படும் சி.பி.எஸ்.சி. முறையில் செய்முறை அடிப்படையில் கல்வி அளிக்கப்படுகிறது. அகில இந்திய ரீதியிலான எல்லாத் தேர்வுகளும் இந்த செய்முறை அடிப்படையிலான கல்வியை ஆதாரமாகக் கொண்டவை என்பதால் நமது மாணவர்களால், அந்த தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றிபெற முடிவதில்லை.
மதிப்பெண்கள் பெறுவதிலும் சரி, நமது மாநிலத் தேர்வு முறை மாணவர்களுக்கு பாதகமாக இருக்கிறது. "சி.பி.எஸ்.இ.' முறையில் ஒரு தேர்வுக்கும் அடுத்த தேர்வுக்கும் இடையில் மாணவர்களுக்குப் படித்ததை மறு ஆய்வு செய்ய வசதியாக நான்கைந்து நாள்கள் இடைவெளி தரப்படுகிறது. மாநிலத் தேர்வு முறையில் அதற்கு வாய்ப்பளிப்பதில்லை. கேட்டால், கேள்வித் தாள் வெளியாகிவிடும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள். பத்திரமாகக் கேள்வித் தாளை பாதுகாக்கக்கூட கையாலாகாத நிலையில் நமது மாநிலத் தேர்வு ஆணையம் செயல்படுகிறது என்றால், அதைவிட வெட்கக்கேடான விஷயம் இருக்க முடியுமா?
திருச்சியில் பிராந்திய பொறியியற் கல்லூரி என்று இருந்ததை இப்போது தேசிய தொழில்நுட்பக் கழகம் என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள். அங்கே போய்ப் பார்த்தால், படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் வெளிமாநிலத்தவர். ஆனால், ஆசிரியர்கள் நம்மவர்கள். மாநிலத்துக்கு முன்பு தரப்பட்ட ஒதுக்கீடு இப்போது தேசிய தொழில்நுட்பக் கழகமானபோது ரத்து செய்யப்பட்டு விட்டது. தேசிய அளவிலான தேர்வில் தமிழக மாணவர்களால் பெருமளவில் வெற்றி பெற முடியவில்லை என்பதால், பெருவாரியான இடங்கள் அகில இந்திய ரீதியில் வெற்றி பெற்ற வெளிமாநில மாணவர்களுக்குப் போய்விடுகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இல்லாத பாதுகாப்பான சூழ்நிலையில் அமைந்த தென்னிந்தியாவிலுள்ள மூன்று தேசிய தொழில்நுட்பக் கழகங்களை வடநாட்டு மாணவர்கள் விரும்பித் தேர்வு செய்வதில் ஆச்சரியமில்லை. பாதுகாப்புக்குப் பாதுகாப்பும், படிக்க வசதியான சூழலும், சிறந்த தென்னிந்திய ஆசிரியர்களும் அமைந்திருக்கும்போது, அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்!
கேந்த்ரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள், மத்திய பள்ளிக் கல்வி ஆணையம் போன்றவை நமது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், அகில இந்திய ரீதியில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் மாற்றங்களுக்கும் தயாராக இருந்தும் நமது மாநில ஆட்சியாளர்கள் அதற்குத் தடையாய் இருப்பதுதான், உயர்கல்வியில் தமிழகம் பின்னடைவை சந்திப்பதற்குக் காரணம். தமிழகத்தில் தமிழும் ஒரு கட்டாயப் பாடமாக சேர்க்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனையுடன், தேசிய அளவிலான கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் இதற்குத் தீர்வு!
நன்றி : தினமணி

0 comments: