Thursday, October 23, 2008

இருண்ட தமிழகமா? மாற்று மின்திட்டமா?

வளர்ச்சியை நோக்கி வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது மனித வாழ்க்கையில் மின்சாரம் அத்தியாவசியமாகிறது. மின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்கும்போது அதற்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்க அரசு கவனம் செலுத்தவில்லை.
தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருள் உற்பத்தி 3ல் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது. இதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கப் போகிறது.
முந்தைய ஆட்சியினரை ஒப்பிட்டு குறை கூறுவதை விடுத்து மின் உற்பத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தமிழக அரசு தொழில்கள் தொடங்கியது வரவேற்கத்தக்கதுதான். இந்த நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.60 வீதம் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தொழில் தொடங்க அந்த பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.85 வீதம் செலுத்த வேண்டியது உள்ளது.
மேலும் சென்னை தவிர மற்ற நகரங்களில் தினசரி 9 மணி முதல் 10 மணி நேரம் மின் தடையை சந்திக்க வேண்டியது உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் நசித்து வருகின்றன.
அதிக மின் தடையினால் இந்த நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு பொருள்களே உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளுக்குத் தொடர்ந்து மின் விநியோகம் கிடைத்தால்தான் உற்பத்தியைத் தடையின்றி செய்ய முடியும்.
தற்போதைய தமிழக அரசின் மின் விநியோகக் கொள்கை விருந்தாளியை உபசரித்து, நமது குடும்பத்தில் உள்ளவர்களைப் பட்டினி போடுவதற்கு ஒப்பாகும்.
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை நசிய விட்டுவிட்டு, பன்னாட்டு தொழில்களுக்கு சலுகை அளிப்பதால் தமிழகம் எந்தவித லாபமும் அடையப் போவதில்லை.
மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடாமல் இலவச கலர் டிவி பல லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதால் வீடுகளில் வழக்கமான மின் செலவைவிட தற்போது கூடுதல் மின்சாரத் தேவை அவசியமாகிவிட்டது. அதைச் சமாளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தினால் உடனடியாக மின் உற்பத்திக்கு வழி ஏற்படாது. இதனால் தனியார் துறைகளுக்கு அதிக மானியம், சலுகை அளித்து மின் உற்பத்திக்கு அரசு வழிவகுக்க வேண்டும்.
மேலும் உணவுத் தட்டுப்பாட்டின்போது வாரத்திற்கு ஒரு நாள் உபவாசம் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டதுபோல, ஆடம்பர மின் உபயோகம், தெரு விளக்குகள் உள்ளிட்ட மின் விளக்குகளின் உபயோகத்தைக் குறைப்பது, மின் பயன்பாட்டை குறைப்பவர்களுக்கு கட்டணத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள அரசு முனைப்போடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பைக் கழிவுகள் உள்ளிட்ட பிற மாற்று மின் திட்டங்கள் மூலம் மின்சாரம் தயாரித்து வழங்கும்போது அதற்கான மின் கட்டணம் சற்று கூடுதல் தொகையாக இருந்தாலும் அதைச் செலுத்த தொழிற்சாலை நடத்துவோர் தயக்கம் காட்டமாட்டார்கள்.
ஏனெனில், தற்போதுள்ள மின் தட்டுப்பாடு தொடர்ந்தால் அது அவர்களைப் பாதிப்பிற்குள்ளாக்கும். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற மின்சாரம், மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ.1 சலுகை என்பது அவர்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும். அதேவேளை, இங்குள்ள தொழிற்சாலைகள் மின் தட்டுப்பட்டால் பாதிக்கப்படுவதும், பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்பதும் எவ்விதத்திலும் நியாயமில்லை.
ரூ. 7 ஆயிரம் கோடியில் புதிய மின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது வரவேற்புக்குரியதே. எனினும், அவற்றால் பலன் கிடைப்பதற்கு காலதாமதமாகும்.
குப்பைக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். தில்லியிலும், கர்நாடகத்திலும் குப்பைக் கழிவிலிருந்தும், ஆந்திர மாநிலத்தில் உமியிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுச்சேரியில் இதேபோன்றதொரு திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
மயிலாடுதுறையில் கரும்புச் சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அந்த ஆலையின் மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
தற்போதைய மின் பற்றாக்குறையை தீர்ப்பது மட்டுமன்றி எதிர்கால மின்தேவையைக் கருத்தில் கொண்டும் இதுபோன்ற மாற்றுவழி மின் திட்டங்களை ஊக்குவிக்கவும், தொடங்கவும் தமிழக அரசு ஏன் முன்வரவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.
மேலும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இயங்கிவரும் "பயோமாஸ்' துறைகளில் உரிய ஆராய்ச்சிமேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி ஊக்குவிக்க வேண்டும்.
தமிழகத்தின் பெரிய நகரங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து வருகின்றன. இதன்மூலம் குப்பையில் இருந்தும், மனித கழிவுகளில் இருந்தும் மின் உற்பத்தி செய்யும் மாற்று வழித் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மின் தட்டுப்பாடு பிரச்னை இப்போதைக்கு தீராது என்ற நிலையில், மாற்றுவழி மின் உற்பத்தித் திட்டங்களை மேற்கொள்ளவும், அது தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களை ஊக்குவிக்கவும் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்களாட்சியில், அரசு என்பது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும், மக்களின் நம்பிக்கையையும், நல்லுணர்வையும் பெற்றதாக இருப்பது என்பதுதான் எதிர்பார்ப்பு. மின்பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி, அன்னிய ஆக்கிரமிப்பு, இயற்கைச் சீற்றங்கள் போன்ற வேளைகளில் அரசு மக்களுடன் கைகோர்த்துச் செயல்பட்டால் ஒழிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது.
பொதுமக்கள் மத்தியில் மின்சாரச் சிக்கனம் தங்களது சமூகக் கடமை என்கிற சிந்தனையை ஏற்படுத்த அரசு தவறி விட்டதால்தான், மின்வெட்டு அரசின் மீதான அதிருப்தியை அதிகரித்திருக்கிறது.
அதேபோல, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கிறோம் என்கிற பெயரில், பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் முடக்கப்படுவதும், மின்வெட்டால் பாதிக்கப்படுவதும் எந்தவிதத்தில் நியாயம்?
சொல்லப்போனால், தமிழகத்தின் தொழில் வளத்துக்கு அடித்தளமாக இருப்பதும், எந்தவித வரிச்சலுகையும் பெறாமல் அரசுக்கு வருமானம் தருவதும் நமது சிறுதொழில்கள்தான். அவைகள் பாதிக்கப்பட்டால், செயல்படுவது தடைபட்டால் அதன் விளைவு, வேலையில்லாத் திண்டாட்டமாக இருக்கும் என்பதை அரசு ஏனோ உணரத் தவறுகிறது.
இலவச மின்சாரம் என்பதால் கணக்கு வழக்கில்லாமல் பம்ப் செட்டுகளை ஓட்டவிடும் விவசாயிகளுக்கு மின் சிக்கனம் பற்றி யாராவது அறிவுறுத்தி இருக்கிறார்களா? ஒருபுறம் மின்வெட்டி, மறுபுறம் எந்தவிதத் தடையுமில்லாமல் இலவச மின்சாரம் என்பது நியாயமாகப்படவில்லையே!
சுபாஷ் சந்திரபோஸ்
(கட்டுரையாளர்: செயலர், தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம்)
நன்றி : தினமணி

0 comments: