Thursday, October 23, 2008

மறையும் வயல்கள்

நன்செய் நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக, "நன்செய் நிலம் என்பதில் எதனையெல்லாம் சேர்க்கலாம்' என்று ஆலோசனை வழங்கும்படி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒவ்வொரு மாநிலத்தையும் கேட்டுக்கொண்டது. இதில், கேரள மாநில பல்லுயிர்பெருக்க வாரியம் (Biodiversity Board) ஒரு ஆலோசனையை கூறியுள்ளது. அதாவது, நெல்வயலுடன் தொடர்புள்ள ஏரி, குளம், ஓடை, வாய்க்கால் மற்றும் பாசன கட்டுமானம் போன்ற அனைத்தையும் நன்செய் நிலவரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்பதுதான் அந்த யோசனை.
கேரளத்தைக் காட்டிலும் அதிக நெல் உற்பத்தி செய்வது தமிழகம்தான். நாம்தான் இத்தகைய ஆலோசனையை வலியுறுத்தி, சட்டவரம்பை விரிவு செய்து, நெல்வயல்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அத்தகைய முயற்சி நடந்ததற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழகத்தின் எந்த நகருக்குப் பயணம் செய்தாலும், சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு, பச்சை வயல் பின்நகர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் இப்போது மாநிலச் சாலை, தேசியச் சாலை எதுவாக இருந்தாலும், இரு மருங்கிலும் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு, விவசாயத்தைக் கொன்றதன் அடையாளமாக "நடுகல்' நடப்பட்டு (வீட்டுமனைகளாக) இருப்பதைக் காணலாம்.
விளைநிலத்தை வீட்டுமனையாக மாற்ற வேண்டும் என்றால், அந்த நிலத்தில் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து விவசாயம் நடைபெறவில்லை என்பதற்கான சான்று முக்கியம். இதற்காகவே பல ஆயிரம் ஏக்கர் வயல்களில் பயிர் செய்யாமல், நடுகல் நடுவதற்கான காலத்தை நோக்கி, கறம்பாக விட்டுவைத்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை குத்தகை வயல்கள்.
தமிழகத்தின் சாலையோரம் வீட்டுமனை வாங்குவோர், ஒரு முதலீடாகவும், பின்னாளில் மனைவிலை கூடும் என்றும் வாங்கிப்போடுகின்றனர். இந்த நிலங்களில் குத்தகைக்குப் பயிர்செய்து கொண்டிருந்த விவசாயிகள் வேறுவழியின்றி, கிராமத்தைவிட்டு வெளியேறியதைத் தவிர வேறு ஒரு பயனும் இல்லை.
ஒரு நீர்நிலை அதிகபட்சமாக நிரம்பும்போது, எந்த எல்லை வரை தண்ணீர் பரவி நிற்குமோ, அதிலிருந்து 100 மீட்டருக்குள் எந்தவிதமான நிரந்தர கட்டடங்களையும் கட்டக்கூடாது என்று ஏற்கெனவே சட்டம் உள்ளது. ஆனாலும் அதையெல்லாம் மறைத்து, வீட்டுமனைகளாக மாற்றும் மோசடி தமிழகத்தில் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
கிராமத்தைவிட்டு வெளியேறும் விவசாயத் தொழிலாளர்கள் இரண்டு வகையாகப் பிரிந்து கிடக்கின்றனர். ஆரம்பப்பள்ளியைத் தாண்டாதவர்கள் கட்டட வேலைகளுக்கும், கடின உழைப்புக்கும் செல்கின்றனர். எஸ்எஸ்எல்சி, அல்லது பிளஸ்2 வரை படித்த இளைஞர்கள் கட்டட வேலை செய்யத் தயங்கி, நகரங்களில் கடைகளுக்கும் அலுவலகங்களுக்கும் குறைந்த மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்கின்றனர். இந்த புதிய சூழ்நிலையை புரிந்துகொண்ட ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநில பண்ணையாளர்கள், படித்த இளைஞர்களுக்கு ரூ.3,000 வரை மாதச் சம்பளம் கொடுத்து பணியமர்த்தும் புதிய கலாசாரம் அங்கே உருவாகி வருகிறது. இந்தப் பண்ணைகளில் நவீன வேளாண் கருவிகள் இருப்பதால் கடின உழைப்புக்கான தேவை இல்லை.
ஆனால் பருவமழை பொய்க்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ள தமிழகத்தில், விளைச்சலில் பங்கு என்கிற நல்ல வழக்கம் முன்பு இருந்தது. அதனால், நிலத்திலேயே தங்கி விவசாயம் செய்த குடும்பங்கள் இருந்தன. ஆனால் சில பண்ணையாளர்கள் இவர்களுக்கு முறையாகப் பணம் தராமலும், தந்த பணத்தைக் கடனாக எழுதிக்கொண்டதாலும், ஒரு கட்டத்தில் "எங்களை கொத்தடிமையாக வைத்திருந்தனர்' என்று புகார் கொடுத்துவிட்டு, நகர நெரிசலில் கலந்துபோன விவசாயக் குடும்பங்கள் பல.
காலங்காலமாக இருந்துவந்த நல்ல விதைகள், நல்ல விவசாய முறைகள், நல்ல கூலிப்பகிர்வுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இப்போது நல்ல விளைநிலங்களையும் இழந்துகொண்டிருக்கிறோம்.
இன்று தமிழகத்தின் முன் இரு பெரிய பிரச்னைகளில் முதலாவது, விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவதைத் தடுப்பது; இரண்டாவதாக, கல்வியறிவு பெற்ற கிராம இளைஞர்களை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, ஊக்கம் தருவது.
தமிழகத்திற்கு உணவுப் பஞ்சம் வருமா வராதா என்பது, இந்த இரு பிரச்னைகளை தமிழக அரசு எவ்வளவு வேகமாக, விவேகமாக கையாளப் போகிறது என்பதில்தான் இருக்கிறது.
நன்றி : தினமணி

0 comments: