Wednesday, November 5, 2008

மாணவர் வி(டு)தி!

அரசுக் கல்லூரி மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்று பல ஊர்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் ஆட்சியர் உத்தரவின்பேரில் ஆய்வுக் குழு நேரில் சென்று விசாரணை நடத்தி, மாணவர்களைச் சமாதானம் செய்தனர். ஆனால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை.
இந்நிலையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர் விடுதிகள் அனைத்திலும் உணவும் உறைவிடமும் எந்த அளவுக்குத் தரமானதாக உள்ளன என்று பதில் அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்காக அரசு பல நூறு கோடி ரூபாயை ஒதுக்கிய போதிலும், இந்த மாணவர்களுக்கு தரமான உணவு, உறைவிடம், கழிப்பிட வசதிகள், சுகாதாரமான குடிநீர்கூட கிடைக்கவில்லை என்று அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தொடுத்த பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதியரசர்கள் பி. சத்யசிவம், ஆப்தாப் ஹாலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.
அரசுக் கல்லூரி மாணவர் விடுதிகளைப் பொருத்தவரை, தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதி மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் உள்ள பொது விடுதிகளில்கூட தரமான உணவு கிடைப்பதில்லை என்பதே உண்மை நிலை.
அரசின் இலவச மாணவர் விடுதிகளில் ஒவ்வொருவருக்கும் உணவுக்காக மாதம் ரூ. 550 வரை அரசு செலவிடப்படுகிறது. இது மிகக் குறைவான தொகை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் இந்தத் தொகையிலும்கூட, முறைகேடு இல்லாமல் இருக்கும்பட்சத்தில், தரமான உணவு அளிக்க முடியும் என்பதே மாணவர்களின் போராட்டத்துக்கு அடிப்படைக் காரணம்.
அரசுக் கல்லூரி மாணவர் விடுதிகள் எந்த ஊரில் இருந்தாலும், அவை மிகவும் மோசமான நிலையில், சிதிலமாகியும், கழிப்பறைகள் பராமரிப்பு இல்லாமலும், சில ஆண்டுகளே ஆனபோதிலும் மழைக்கு ஒழுகும் கூரைகளுமாகவே இருக்கின்றன. இந்த மாணவர்கள் படிக்க வேண்டுமே என்ற ஒரே காரணத்துக்காக இத்தனை அசௌகரியங்களையும் சகித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அரசு மாணவர் விடுதிகளைப் பொருத்தவரை பணம் போதவில்லை என்று சொல்லிக்கொண்டே முறைகேடு நடக்கிறது என்றால், தனியார் கல்லூரிகளின் முறைகேடு இதற்கு நேர்எதிரானது. அவர்கள் அதிகமான பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில்லை.
தேர்ச்சி வரிசையில் முன்னிலை வகிக்கும் சில கல்லூரிகளைத் தவிர்த்து, பெரும்பாலான கல்லூரிகளில் பெற்றோர் கொடுக்கும் பணத்துக்கும், மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவு, வசதிகளுக்கும் இடைவெளி அதிகம்.
விடுதிக் கட்டணங்களை மாதம்தோறும் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மிக அரிது. ஒரு ஆண்டுக்கான முழுக் கட்டணத்தையும் (ரூ. 30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை) தொடக்கத்திலேயே வசூலித்து விடுகிறார்கள். இடையில் விலகினால், ஒரு செமஸ்ட்டருக்கான கட்டணம் முழுவதையும் பிடித்துக்கொண்டு மிச்சம் (இருந்தால்) கொடுக்கிற புதிய வழக்கத்துக்கு மாறியுள்ளன இக்கல்லூரிகள்.
இவ்வளவு கட்டணம் வாங்கும் இவர்கள் அளிக்கும் உணவு, அரசுக் கல்லூரி விடுதிகளைவிட பரவாயில்லை என்று சமாதானம் அடையலாமே தவிர, தரமானது என்று சொல்ல முடியாது. கல்லூரி நிர்வாகமே கட்டிய கட்டடம் உறுதியாக இருந்தாலும், கழிப்பிட, இருப்பிட வசதிகள் அங்கு தங்கியுள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் இருப்பதில்லை.
அண்மைக் காலமாக நிலவும் மின்தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, "தண்ணி காட்டிய' விடுதிகள் பற்றிய நிறைய கதைகள் மாணவர்களிடம் உள்ளன. துணியைத் துவைக்காமல் லாண்டரிக்குப் போடத் தூண்டுவதும், அதற்கும் "ஒப்பந்தம்' போட்டு காசு பார்ப்பதும் தனிக்கதை.
அரசுக் கல்லூரி விடுதிகளிலும் "சாப்பிடுகிறார்கள்'. கேட்கிற பணத்தை பெற்றோர் கொட்டியழும் விடுதிகளிலும் "சாப்பிடுகிறார்கள்' மாணவர்களைத் தவிர!
நன்றி : தினமணி

0 comments: