Wednesday, November 5, 2008

மத முலாம் பூசாதீர்கள்!

மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றதன் பிறகு எப்போதாவது எங்கோ ஓரிடத்தில் நடந்து வந்த குண்டுவெடிப்புச் சம்பவம், அவ்வப்போது அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தத் தொடங்கி இருக்கிறது என்பதை ஊரறியும்.
கடந்த வாரத்தில் அசாம் மாநிலத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் பல உயிர்களைப் பலி வாங்கி இருப்பதுடன் நூற்றுக்கணக்கானவர்களைப் படுகாயப்படுத்தி இருக்கின்றன. இதுவரை இதுபோன்ற குண்டுவெடிப்புகள் மாநிலத் தலைநகரங்களில்தான் நடந்தன. இப்போது, அசாம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே வெடித்து புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. எந்த அளவுக்கு நமது பாதுகாப்புத் துறை எச்சரிக்கையாக இருக்கிறது என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு!
இந்தப் பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் ஹர்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி என்கிற தீவிரவாத அமைப்புதான் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலும், வங்க தேசத்திலும் இதுபோன்ற பல பயங்கரவாதச் செயல்களில் இந்த அமைப்பு கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருவதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் இந்த அமைப்புதான் காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் நாம் சில கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது. இந்திய அரசு அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டது முதல், இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியது என்பதுதான் அந்த உண்மை. அமெரிக்காவின் மீதான தங்களது கோபத்தைக் காட்ட முடியாத பயங்கரவாத அமைப்புகள், அந்த நாட்டிடம் நட்புறவு நாடும் இந்தியாவின் மீது காட்டித் தணித்துக் கொள்கின்றனவோ என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது.
அது போகட்டும். நாங்கள் பயங்கரவாதத்தைச் சகித்துக்கொள்ள மாட்டோம், தக்க நடவடிக்கை எடுப்போம் என்று வாய்ப்பந்தலிடும் மத்திய அரசு, இதுவரை பாதுகாப்பை அதிகரிக்கவும், உளவுத் துறையை முடுக்கிவிடவும், கடுமையான சட்டங்களை இயற்றி காவல்துறையைப் பலப்படுத்தவும் என்ன செய்திருக்கிறது? பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும், ஈடுபட்டவர்களையும் தண்டித்தால் தனது வாக்கு வங்கிக்குச் சேதம் ஏற்பட்டு விடுமோ என்று பயப்படும் அரசு இது என்பதுதானே நிஜம்?
பயங்கரவாதச் செயல்களை எந்தவொரு மதமும் அங்கீகரிப்பதில்லை. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதால் ஒரு மதத்தினரின் மனம் புண்படும் என்று இந்த அரசு நினைக்குமேயானால், அது அந்த மதத்தினரையே கேவலப்படுத்துகிறது என்றுதான் அர்த்தம். பயங்கரவாதிகளுக்கு ஜாதி மற்றும் மத முலாம் பூச முற்படுவது இந்த அரசின் மிகப்பெரிய அரசியல் மோசடி!
அசாமில் நூற்றுக்கணக்கில் தொடங்கி அது ஆயிரம், லட்சம் என்று நாளும் பொழுதும் அகதிகளின் ஊடுருவல் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. இதுவரை சுமார் 5 கோடி பேர் இந்தியாவுக்குள் நுழைந்திருப்பார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. நமது மேற்கு எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணித்ததுபோல நாம் கிழக்கு எல்லையில் கடந்த 30 ஆண்டுகளாக வங்கதேச அகதிகளைத் தடுக்காமல் இருக்கிறோமே, ஏன்?
அசாமில் இந்த அகதிகளை இந்தியப் பிரஜைகளாக்குகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார் முதல்வர் தருண் கோகோய். அகதிகளுக்குக் குடியுரிமை அளிக்கும் அதிகாரத்தை முதல்வர்களுக்கு அளித்தது யார்? சுமார் 35 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முடிவை நிர்ணயிக்கும் வங்கதேச அகதிகள் அசாமில் இருப்பதால், அந்த மாநிலத்தின் தலையெழுத்தே அன்னிய நாட்டு அகதிகள் கையில் இருப்பதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படுவதில்லை என்பதுதானே உண்மை?
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுத்தால், வீட்டு உடைமையாளிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்தியா முழுவதும், எந்தவொரு மாநிலமும் விதிவிலக்கில்லாமல், இப்போது வங்கதேச அகதிகள் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்கள் மூலம், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யும் இந்தியாவின் ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் சீர்குலைக்க எண்ணும் அன்னிய சக்திகளும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன. வங்கதேச அகதிகளை உடனடியாகக் கணக்கெடுத்து, களையெடுக்கத் தவறினால், அதன் விளைவுகள் மாவட்டம்தோறும் வெடிகுண்டுகளாக வெடித்துச் சிதறும் என்று மன்மோகன் சிங் அரசுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக எத்தனையோ எச்சரிக்கைகள் செய்யப்பட்டும், அரசு அசைந்து கொடுக்கவில்லையே, ஏன்?
பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் சக்தி இல்லாவிட்டால்கூடத் தவறில்லை. இந்த அரசுக்கு அதற்கான மனத்துணிவுகூட இல்லை. இதையும் அமெரிக்காவும், உலக வங்கியும் பார்த்துக் கொள்ள ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தலாம் என்று பிரதமர் நினைக்கிறாரோ என்னவோ?
நன்றி : தினமணி

0 comments: