Monday, August 4, 2008

மானம் பறிபோகிறது...!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரும்போது நடந்த அவலங்களைப் பார்த்தபொழுது நாட்டில் நிலவுவது ஜனநாயகமா? பண நாயகமா? என்று வழக்காடுமன்றம் நடத்தலாம் போலிருக்கிறது. தான் வகிக்கும் உயர் பதவியின் மரியாதை கெடும் அளவில் பிரதமர் மன்மோகன் சிங்கின் நடவடிக்கை அமைந்துவிட்டது என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ. 25 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி.பரதன் குற்றம் சாட்டினார். பா.ஜ.க. உறுப்பினர்கள் தங்களுக்கு லஞ்சம் கொடுத்த கரன்சி நோட்டுகளைக் காட்டியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு தெளிவாகியது. இதுவரை நம்பிக்கை வாக்கு கோருவதில் இப்படிப்பட்ட குதிரை பேரங்கள் நடைபெறவில்லை. ஜனதா கட்சி, மொரார்ஜி அரசு கவிழும்பொழுது உறுப்பினர்களுக்கு ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டது என அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. நரசிம்ம ராவ் காலத்தில் ஜே.எம்.எம். கட்சி உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்கிய விவகாரம் பெரிதாக எழுந்தது.
வாஜ்பாய் அரசு 1998இல் நம்பிக்கை வாக்கு கோரும்பொழுது ஒரிசாவின் முன்னாள் முதல்வர் கிரிதர் கோமாங்கோ முதல்வர் பொறுப்பில் இருந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்வாக்கைப் பயன்படுத்தி, வாஜ்பாய் அரசைத் தோற்கடித்தார். அதைப் பார்த்த பலர் முகம் சுளித்தனர். ஒரு வாக்கில் ஆட்சியை இழந்த வாஜ்பாய் மீது அனுதாபம் ஏற்பட்டது. ஆனால், இப்போது பல வாக்குகள் வித்தியாசத்தில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் மீது மரியாதை ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.
மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, ""நான் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கட்டுப்பட்டவன் அல்ல. சபாநாயகராகத் தொடர்ந்து பதவியில் இருப்பேன்'' என்று முரண்டு பிடித்தது மட்டுமல்ல, வாக்கெடுப்புக்குப் பின்னும் பதவி விலகாமல் மக்களவைத் தலைவராகத் தொடர்வது அவர் மீதிருந்த மரியாதையையும் குலைத்திருக்கிறது.
குதிரை பேரத்திற்காக சூட்கேஸ்கள், தோல் பைகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பற்றாக்குறை என்று கேலிப்பேச்சுகள் தில்லியில் உலா வந்தன. இப்படிப்பட்ட காட்சிகள் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தபோதும், நரசிம்ம ராவ் காலத்திலும், தேவகெளடா பிரதமர் பதவியிலிருந்து இறங்கியபோதும் இதுபோன்ற விரும்பத்தகாத, ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளையும் மீறி இந்திய ஜனநாயகம் வலுவாக இருக்கிறது என்பதுதான் ஆறுதலான செய்தி.
நம்பிக்கை வாக்கு என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பிரிவு 75(3) அமைச்சரவையின் கூட்டு முடிவுகள் அவைக்குக் கட்டுப்பட்டது என மட்டுமே கூறுகிறது. அவையின் விதிகள் 182 லிருந்து 186 வரை மற்றும் 198 இம்மாதிரி வாக்கெடுப்புகள் குறித்து குறிப்பிடுகின்றன.
இதுவரை இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானம் எதிர்தரப்பினராலும், ஆளும் தரப்பினராலுமே பலமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
பண்டித நேரு ஆட்சியில் இருந்தபோது சீன எல்லையில் நடந்த சம்பவங்கள் குறித்து சோஷலிசத் தலைவர் லோகியா, 1962இல் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் பதவி விலக வேண்டிய சூழ்நிலை உருவாகியது. அதன்பின் 22.8.1963இல் ஜெ.பி. கிருபளானி தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது ஒரு தீர்மானமும், இந்திரா காந்தி காலத்தில் 3 தீர்மானங்களும் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டன. அவை யாவும் தோற்றுவிட்டன.
1979இல் மொரார்ஜி தலைமையில் இருந்த ஜனதா ஆட்சி வீழ்ந்தவுடன் நம்பிக்கை வாக்கு கோர வேண்டிய நேரத்தில் தனக்கு ஆதரவில்லை என்றவுடன் சரண்சிங் அவைக்கு வராமலேயே பதவி விலகினார். வி.பி. சிங் காலத்தில் 1989இல் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றாலும், 1990இல் வாக்கெடுப்பில் வி.பி.சிங் அரசு தோல்வி அடைந்து, சந்திரசேகர் பதவி ஏற்று, அவரும் 5 மாதங்களில் பதவி விலகினார்.
1991இல் நரசிம்ம ராவ் வெற்றிபெற்றாலும் ஜே.எம்.எம். கட்சி உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து தன் ஆட்சியைக் காப்பாற்றினார் என்கிற அவப்பெயர் இப்போதும் தொடர்கிறது.
1996இல் வாஜ்பாய் நம்பிக்கை வாக்கு கோரி ஆட்சிக்கு வரமுடியவில்லை. 1996இல் தேவகெளடா வாக்கெடுப்பில் வெற்றிபெற்று 1997இல் பதவி விலகி, குஜ்ரால் ஆட்சியைக் கைப்பற்றி அவரும் ஓராண்டுக்குப் பிறகு பதவி இழந்தார். அதன்பின் 1998 தேர்தலில் வாஜ்பாய் வெற்றிபெற்று அண்ணா திமுக ஆதரவை விலக்கிய பின் இதேபோல நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தித்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் பதவி விலக நேர்ந்தது. 50 மாதங்களுக்குப்பிறகு மன்மோகன் சிங் வாக்கெடுப்பு கோரி இப்போது முறைகேடான விதத்தில் வெற்றியும் பெற்று விட்டிருக்கிறார். இந்தியப் பிரதமர்கள் எவரும் நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பிலிருந்து தப்பமுடியவில்லை.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குக் களங்கம் ஏற்படும் வகையில் வாக்கெடுப்பு விவாதத்தின்போது தாங்கள் பெற்ற லஞ்சப் பணத்தை அவையில் உறுப்பினர் காட்டியதை உலகமே தொலைக்காட்சியில் பார்த்தது. இதுபோன்று ஒரு முறை தமிழகத்தைச் சார்ந்த பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தங்கராஜ், தனக்கு லஞ்சம் கொடுத்ததாக ரூ.5 லட்சம் கரன்சி நோட்டுகளை மக்களவைத் தலைவர் பல்ராம் ஜாக்கரிடம் காட்டியது உண்டு.
இதுபோன்ற லஞ்ச சம்பவங்கள் குறித்து இதுவரை யாரும் வழக்கு மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யாமல் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. மக்களவையின் முன்னாள் செயலரும், சட்ட நிபுணருமான சுபாஷ் சு. காஷ்யப், ""இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரில் ஒருவர், கோர்ட்டில் பொதுநல வழக்குத் தொடரலாம். அதன்பின் இந்த விவகாரம் தங்களின் விசாரணை வரம்புக்கு உட்பட்டதா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும்'' என்று கூறுகிறார். மூத்த வழக்கறிஞர் நாரிமன் இதை அவையின் நன்னடத்தைக் கமிட்டிக்குப் பரிந்துரை செய்து அதற்கு மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறுகிறார். ஆனால், இன்றுவரை இது குறித்து மேல் நடவடிக்கை பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை.
உலக அரங்கில் ஊழல் பட்டியல் வரிசையில் இந்தியா 150 நாடுகளுக்குள் 72வது இடத்தில் இருக்கிறது என்கிற வகையில் நம்மை ஆள்கின்ற ஆட்சியாளர்களும், நம்முடைய பிரதிநிதிகளும் எங்களுக்கும் பங்குண்டு என்கிற வகையில் ஊழல் புகாரில் தலைகாட்டுகின்றனர். டாக்டர் சாமுவேல் ஜான்சன் குறிப்பிட்டதைப்போல, துஷ்டர்கள், அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்று சொன்னது சரியாகிவிட்டது.
1947இல் இந்தியாவுக்கு விடுதலை வழங்கும் தருணத்தில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் பேசியபோது இந்தியாவில் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். ஏன் எதற்கு என்று ஆராய்ந்தால் அவர்கள் கீழ்த்தரமாகவும், அயோக்கியத்தனமாகவும் எதிர்காலத்தில் ஆவார்கள் என்று குறிப்பிட்டது வேதனையாகவும் கண்டிக்கக் கூடிய கருத்தாக இருப்பினும் இன்றைக்கு உண்மையாகிவிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறுகின்ற வசதிகளுக்கே அரசு பலகோடி ரூபாய்கள் செலவழிக்கிறது. இவர்களுக்கு இதற்கு மேலும் ஆசைகளும் சுயநலமும். உறுப்பினர்களுக்கு என்னென்ன சலுகைகள்? என்ன உரிமைகள்? என்று வரையறுக்க வேண்டுமென்று 50 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டும் நீதிமன்றங்களில் சர்ச்லைட் வழக்கிலிருந்து அறிவுறுத்தப்பட்டும் இதுவரை இவர்களது சலுகைகள், உரிமைகள் குறித்து சட்ட வடிவமாகவோ எழுத்து வடிவமாகவோ வரையறுக்கப்படவில்லை.
தற்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு என்ற கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவர்களைக் குறிப்பாக அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே அவர்களைத் திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் எனக் கருத்துக்கூறி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடத்திற்கு ரூ.24,500 செலவாகிறது. இது மேலும் 24,632 ஆக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 2008 அறிக்கையின்படி 20 சதவிகிதம் உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். அவையில் உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்புகள், வீணான கூச்சல்கள், சண்டைகள் போன்ற அழிவுப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வரை பலவகையான மதிப்பில் அரசு வழங்குகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
நாடாளுமன்றச் செயல்முறை, தேர்தல் சீர்திருத்தம் மற்றும் உறுப்பினர்களின் நடத்தை விதிகள், அவர்களின் தகுதி போன்றவை குறித்து அரோக்கியமான நல்ல மாற்றங்கள் காண வேண்டும். இவை நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் காரணிகள் என உச்ச நீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது.
ஆனால், இன்றைய மக்கள் பிரதிநிதிகள் மாண்புமிகு என்று அழைக்கிற பொறுப்பின் கண்ணியத்தைச் சீரழித்துவிட்டனர். இவர்களா மாண்புமிகுகள்? என்ற கேள்விக்கணையை எழுப்ப வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. கடந்த 1991இல் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபொழுது புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். அப்பொழுது "இந்தியா ஃபார் சேல்' என்று கேலியாகக் குறிப்பிட்டனர். அதே மன்மோகன் சிங் இப்போது பிரதமராக இருக்கும்போது எம்.பி. பதவிக்கு இன்னவிலை என்று குறிப்பிட வேண்டிய நிலையாகிவிட்டது என்பதுதான் நாட்டின் தலையெழுத்து.



கே.எஸ். இராதாகிருஷ்ணன்
கட்டுரையாளர்: வழக்கறிஞர்
நன்றி : தினமணி

0 comments: