Monday, August 4, 2008

அமைச்சர் தம் பெருமை...

மத்தியதர வகுப்பினரிடையில் தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருக்கும் கட்சிகள் மீது மரியாதை காணப்படுகிறது. கட்டுப்பாடான இயக்கம் என்றும், கொள்கைப் பிடிப்புள்ள கட்சி என்றும் அதுபோன்ற கட்சிகளை சிலாகித்துப் பேசுவது படித்த, பட்டணத்து மத்தியதர, உயர்பிரிவு மக்களின் மனோபாவமாகத் தொடர்கிறது.
ஒரு கட்சி கட்டுக்கோப்பாக இருப்பதில் தவறில்லை. கட்சித் தொண்டர்கள் கட்டுப்பாடாக இருப்பதிலும் தவறில்லை. ஆனால், கட்சித் தொண்டர்களுக்காக மட்டும் கட்சித் தலைமை செயல்படுவது என்பதுதான் தவறு. ஹிட்லரில் தொடங்கி, கட்சியின் தொண்டர்களை நம்பிச் செயல்படும் அனைத்துக் கட்சிகளுமே, கடைசியில் வெகுஜன விரோதக் கட்சிகளாக மாறிவிடுகின்றன என்பதுதான் உண்மை.
மக்களின் பேராதரவுடன் அமையும் ஆட்சிக்கும், கட்சித் தொண்டர்களின் உதவியாலும், அந்த நேரத்திலிருக்கும் பரவலான அதிருப்தி, கூட்டணி பலம் போன்ற காரணங்களால் அமையும் ஆட்சிக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. வெகுஜன ஆதரவுடன் அமையும் ஆட்சிகள், தங்களது கட்சியின் உறுப்பினர்களைவிட, மக்களின் நலனைத்தான் கருத்தில் கொண்டு செயல்படுவது வழக்கம். கட்சித் தொண்டர்கள் தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள்.
தொண்டர்களின் இயக்கம் என்கிற பெயரில், இந்தத் தொண்டர்கள் மூலம் நிதி வசூல் செய்வது, அவர்களின் உதவியுடன் கள்ள ஓட்டுப் போடுவது, எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டங்கள் நடத்துவது, வன்முறையைத் தூண்டுவது என்று எதற்கெடுத்தாலும் அவர்களை நம்பியே அமைப்பை நடத்தும் கட்டுக்கோப்பான கட்சித் தலைமை, அந்தத் தொண்டர்களைப் பகைத்துக் கொள்ள முடியாத நிலைமை காலப்போக்கில் ஏற்பட்டு விடுகிறது.
தலைவன் என்பவன், தொண்டன் தவறு செய்தாலும் காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கையை அடிமட்டத் தொண்டன்வரை ஏற்படுத்துவதில்தான் தங்கள் பலமே இருக்கிறது என்பதுதான் இந்தக் "கட்டுக்கோப்பான' கட்சித் தலைமைகளின் கருத்து. இப்படியொரு தொண்டர் படையை உருவாக்க, ஹிட்லர், முசோலினி போன்ற ஃபாசிஸ்டுகள் செய்ததைப்போல, இந்தக் "கட்டுக்கோப்பான' கட்சிகள் தத்துவம், கொள்கை என்கிற பெயரில் விஷவிதைகளைத் தூவி, தங்களது தொண்டர்களை மூளைச்சலவை செய்து விடுவது முதல் கட்டம்.
கடந்த பத்து நாள்களாகத் தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் மனவருத்தமளிக்கிறது. சரியோ, தவறோ, உண்மையோ, பொய்யோ ஒரு அமைச்சரின் அதிருப்திக்கு ஆளான அதிகாரி ஒருவர், ஏப்ரல் மாதத்தில் தன்னை அமைச்சரும் அவரது அடியாள்களும் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கடிதம் கொடுக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஒரு வழக்குப் பதிவு செய்ய 3 மாதத்திற்கு மேல் ஆகிறது. காரணம்? குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் ஒரு அமைச்சர். கட்சியின் தொண்டர்!
இதையாவது பொய்க்குற்றம் சாட்டுகிறார் என்று சொல்லித் தப்பிக்கலாம். இன்னொரு அமைச்சர் நிலம் அபகரிப்பு சம்பந்தமாக ஒரு குடும்பத்தையே கடத்தி, கொன்று விடுவதாக மிரட்டினார் என்பது குற்றச்சாட்டு. காவல்துறை, மாவட்ட ஆட்சியர் என்று யாருமே புகாருக்கு செவிசாய்க்கத் தயாராக இல்லாத நிலையில், விஷயம் சென்னை உயர் நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டு, சமீபத்தில்தான் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
"கட்டப் பஞ்சாயத்துக்கு வருமாறு அமைச்சர் தங்களை வற்புறுத்துவதாகவும், தங்களது சொத்துகள் சிலவற்றை ஏற்கெனவே அமைச்சர் அபகரித்து விட்டதாகவும், தங்களை மிரட்டிக் கையெழுத்து வாங்கிவிடுவார் என்று பயப்படுவதாகவும்' அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டுப் பாதுகாப்பு கோரியிருக்கிறார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு. இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கப் பொதுச் செயலர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த மனுவில் ஏழை மக்களின் நிலம் அபகரிப்பு மற்றும் ஆட்சியர் அலுவலகத்தை இடிப்பது ஆகியவற்றை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது அமைச்சர் பொய்வழக்குப் போடக் காவல்துறையை நிர்பந்தித்திருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டிருப்பது அமைச்சர்கள் மீது. உண்மையோ பொய்யோ, குற்றச்சாட்டு தவறு என்று தெளிவாவதுவரை சம்பந்தப்பட்டவர்களை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதுதானே முறை? அப்போதுதானே, விசாரணை முறையாக நடக்கும்? சிபாரிசுக்குப் போன அமைச்சர் பூங்கோதை பதவி விலகலாமானால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களும் பதவி விலக்கப்படுவது தானே நியாயம்?
இந்த நியாயம் எல்லோருக்கும் தெரிகிறது. முதல்வருக்கு மட்டும் ஏன் புலப்படவில்லை என்று கேட்டால், அதுதான் கட்டுக்கோப்பான, தொண்டர்கள் பலத்தில் அமைந்த கட்சிகளின் பலவீனம். இவர்கள் மக்களைப் பகைத்துக் கொள்வார்களே தவிர தொண்டர்களைப் பகைத்துக் கொள்ள மாட்டார்கள்.



நன்றி: தினமணி

0 comments: