Saturday, August 2, 2008

தேவை முறையான விநியோகம்!

இந்தியா சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆகப் போகிறது. இன்னும்கூட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மட்டுமல்ல, பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நம்மால் செய்துதர முடியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளைப் போலல்லாமல், சராசரி இந்தியனின் தேவையெல்லாம் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், குடிக்கத் தண்ணீர், செய்யத் தொழில், ஆரம்பப் பள்ளி மற்றும் சுகாதார நிலையம், கிராமப்புறச் சாலைகள், மின்சாரம், போக்குவரத்து போன்றவைதான். இவைகளை பிரஜைகளுக்கு வழங்குவதுதான் ஓர் அரசின் அடிப்படைக் கடமையே. அதைக்கூட நம்மால் செய்து கொடுக்க முடியவில்லை என்றால், தவறு எங்கே இருக்கிறது?
61 ஆண்டுகளில், இத்தனை லட்சம் கோடிகளைச் சம்பளமாகத் தாரை வார்த்து ஒரு மிகப்பெரிய நிர்வாக இயந்திரத்தை வைத்துக் கொண்டிருக்கிறோமே, அதுவாவது சரியாக இயங்குகிறதா என்றால் இல்லை. இன்னும் முறையான நிர்வாகம் நிலைநிறுத்தப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் முறைகேடாகச் செயல்படும் பொது விநியோக முறை!
இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. ஆனால் இன்னும்கூட இங்கே வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் எத்தனைபேர், யார் எவர் என்ற புள்ளிவிவரக் கணக்கு சரியாக இல்லை. 61 ஆண்டுகளாகியும், இத்தனை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஆட்சி செய்தும் இதைக்கூட முறைப்படுத்த முடியாதது ஏன் என்பதற்கு சரியான பதில்கூடக் கிடைப்பதில்லை.
அதுபோகட்டும். அத்தனை மாநிலங்களிலும் பொது விநியோக முறை சரியாக நடைபெறுகிறதா என்றால் அதுவும் கிடையாது. இன்றும்கூடப் பல மாநிலங்களில் எல்லா இடங்களிலும் ரேஷன் கடைகள் கிடையாது. அப்படியே ரேஷன் கடைகள் இருந்தாலும் அங்கே பொருள்கள் இருக்காது. ஐந்து பெருநகரங்களிலும், தென் மாநிலங்களிலும்தான் முறையான பொது விநியோக அமைப்பு செயல்படுகிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மத்திய உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் மக்களவையில் தெரிவித்த விவரம் திடுக்கிட வைக்கிறது. இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் என்று கணக்கெடுக்கப்பட்டிருப்பவர்களில் 3.7 கோடிப்பேர், அதாவது 35 சதவிகிதம் பேர் போலி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் என்று அமைச்சரே தெரிவிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
திட்டக் கமிஷன் அறிக்கைப்படி இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை 6.52 கோடி குடும்பங்கள். ஆனால் விநியோகிக்கப்பட்டிருக்கும் ரேஷன் அட்டைகளோ 10.28 கோடி வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள குடும்பத்தினருக்கு. இதனால் உணவுப் பொருள்கள் வழங்குவது மட்டுமல்ல, ஏனைய மத்திய, மாநில அரசுகளின் வறுமை ஒழிப்புத் திட்டங்களும் முறைகேடாக அந்த 35 சதவிகித போலிகளால் பயன்படுத்தப்படுகின்றன.
பொது விநியோகம் ஓரளவுக்கு முறையாக நடைபெறும் மாநிலம் என்று பெயரெடுத்திருக்கும் தமிழகத்திலும் சரி, மொத்தமுள்ள 2 கோடி ரேஷன் அட்டைகளில் சுமார் 30 லட்சம் அட்டைகள் போலி அட்டைகள் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சுமார் ஒரு லட்சம் அட்டைகள் பறிமுதலும் செய்யப்பட்டிருக்கின்றன.
ஆண்டொன்றுக்கு உணவு வழங்கும் துறை மூலம் மாநில அரசு செலவிடும் தொகை ஏறத்தாழ ரூ. 1,900 கோடி. அதில் ரூ. 300 கோடி போலி ரேஷன் அட்டைகள் மூலம் பொது விநியோகத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் துணையோடு பொது விநியோகத்துக்காக அனுப்பப்படும் உணவுப் பொருள்கள், போலி ரேஷன் அட்டைகள் மூலம் தனியார் வசம் கைமாறுகிறது என்பது உலகறிந்த உண்மை. இதைத் தடுப்பாரோ, தடுக்க நினைப்பாரோகூட இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.
வறுமைக்கோடு, ரேஷன் அட்டை போன்ற எந்தவித வரைமுறைக்குள்ளும் வராத வீடும், தொழிலும் இல்லாத தெருவோரவாசிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. விலைவாசி உயர்வால் கீழ் மத்தியதர வகுப்பினர் ஏறத்தாழ வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள பிரிவினராய் மாறி வருகின்ற அபாயம் வேறு தொடர்கிறது.
முறையான பொது விநியோகமும், முறைப்படுத்தப்பட்ட ரேஷன் அட்டைகளும் நல்ல நிர்வாகத்துக்கு அடையாளமல்லவா?

நன்றி : தினமணி

1 comments:

said...

அடடா, நான் இதனை மிஸ் பண்ணிவிட்டேனே :(:(:(
ரொம்ப நன்றிங்க யோசிப்பவர்