Saturday, August 2, 2008

குதிரை வியாபாரம்சட்டம் தேவை

சட்டத்தைப் பிறப்பிக்கச் செய்வதும் பின்னர் அதனை நிறைவேற்றப் போராடுவதுமாக ஜனநாயக வாழ்க்கை அமைந்து போனது. நாடாளுமன்றத்தில் அரங்கேறி இன்று தேசத்தையே வெட்கித் தலைகுனிய வைத்துக் கொண்டிருக்கும், குதிரை வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதும், அதனை நிறைவேற்றப் பாடுபடுவதும் இன்றைய ஜனநாயகக் கடமைகளில் முக்கியமானதாகத் தோன்றுகிறது. இந்தப் போராட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்புகளே முற்றாக மறைந்து போனது என்ற உணர்வுகள் பரவலாகத் தோற்றுவிக்கப்படுகின்றன.
அவநம்பிக்கைகளை முறியடித்துத்தான் சமூகம் தனது முன்னேற்றப் பயணத்தை அமைத்துக் கொண்டுள்ளது என்பதையும் நாம் மறந்துவிட இயலாது. பெரிதும் பாதிக்கப்பட்ட நமது உடலை நாமே ஆரோக்கியப்படுத்திக் கொள்வதைப் போல, எப்படியும் நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையான நாடாளுமன்றத்தைத் தூய்மைப்படுத்தும் போராட்டத்தை நாம் தொடங்கித்தான் ஆக வேண்டும்.
ஊழல், லஞ்சம் ஆகியவற்றை ஏணிப்படிகளாகக் கொண்டு இன்றைய சமூகத்தின் ஆதிக்கப்பகுதி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. நாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இன்றைய நாடாளுமன்றம்தான் அடிப்படையாகச் செயல்படுகிறது. ஆளும் கட்சிக்கு உயிரளிப்பதும், அதன் ஆயுளை முடிவுக்குக் கொண்டு வருவதும் நாடாளுமன்றத்தின் பொறுப்பில்தான் இருக்கிறது. பேராசையால் எதையும், சட்டத்திற்குப் புறம்பாக என்ன விலை கொடுத்தும் வாங்குவதைப் போன்றது தான், ஆட்சியைக் காப்பாற்ற நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எந்த விலையையும் கொடுப்பதும், சுதந்திர இந்தியாவில் வெற்றியைத் தவறான வழிமுறைகளின் மூலம் பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் கடந்த காலத்தில் சில நடைமுறைகள் உருவாகியிருந்தன.
ஒருகாலத்தில் கட்சி தாவல் என்பது முக்கியமான பிரச்னையாக வடிவமெடுத்தது. கீழ்த்தரமான சுயஆதாயங்களுக்காக கட்சி மாறும் நடவடிக்கைகளால் இந்திய நாடாளுமன்றம் அடிக்கடி கொந்தளித்தது. இதன் உச்சமாக ஒரே நாளில் ஒருவர் பல கட்சிகளுக்கு மாறுவதற்கான வாய்ப்பு அன்றைய நாடாளுமன்றத்தில் இருந்தது. இதில் லஞ்சம் "பெரும் தொகையாக' சம்பந்தப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில்தான், ஆயாராம் கயாராம் என்ற புதிய சொல்வழக்கும் பிறந்தது. காலையில் தான், ராம் நாடாளுமன்ற ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்தார். மாலையில் வேறு கட்சிக்குப் போய்விட்டார் என்று, நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கிண்டல் செய்யும் வழக்காக இது பரிணாமம் பெற்றது. கட்சி தாவல் சட்டம் இதன் பின்னர்தான் பிறப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் ஒருபகுதி எப்பொழுதும் ஒரு நிழல் உலகத்தோடு தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. இந்த நிழல் உலகம் கட்சி தாவல் சட்டத்தைப் பார்த்துப் பயப்படுவதாக இல்லை. இதற்கு மாறாக, மாற்றுவழியில் யோசிக்கத் தொடங்கியது. நாடாளுமன்றத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள புதிய குதிரை வியாபார முறையை உருவாக்கிக் கொண்டது.
கட்சி தாவல் சட்டம் பிறந்த பின்னர் முதன்முதலில் குதிரைபேரத்தில் இறங்கியவர் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்தான். 1993இல் நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்குகளைப் பெறும் அவசியம் அவருக்கு எழுந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் உறுப்பினர்களான சைலேந்திர மகாதோ, சிபு சோரன், சைமன் மாரண்டி ஆகிய மூவரும் கட்சி மாறி நரசிம்ம ராவுக்கு வாக்களித்தார்கள். ஆட்சி மாறிய பின்னர், மத்திய புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையில் தாங்கள் ஒவ்வொருவரும் ரூ. 50 லட்சம் பெற்றுக் கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்கள். இதற்கு முக்கியத் தரகராகச் செயல்பட்டவர் இன்றைய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் வீரப்ப மொய்லிதான். இதுகுறித்த பல்வேறு மர்மத் தகவல்கள் அன்றைய ஊடகங்களில் வெளிவந்தன. சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வழக்கும் நடந்தது. நரசிம்ம ராவுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இங்கு ஆராய்ச்சிக்கு உரியவை, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் நடத்தப்பட்ட வாதங்களும் நீதிபதிகளால் அளிக்கப்பட்ட தீர்ப்புகளும்தான். உச்ச நீதிமன்ற வழக்கை ஐந்து நீதிபதிகள் விசாரித்தார்கள். இதில் நரசிம்ம ராவ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதம், என்னதான் ஊழல் செய்தாலும் தேசத் துரோகமே செய்தாலும் இது நாடாளுமன்றத்திற்குள் நடைபெற்ற நிகழ்வு. இதனைத் தண்டிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதுதான். தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதிகளால் ஒருமித்த தீர்ப்பை வழங்க இயலவில்லை. மூன்று நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், நாடாளுமன்றத்திற்குத் தான் அதிகாரம் இருக்கிறது என்றும் தங்கள் தீர்ப்புரையை எழுதியிருந்தார்கள். இரண்டு பேர் இதற்கு மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார்கள். நரசிம்ம ராவ் உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
நாடாளுமன்றமும் நீதித்துறையும் தனித்தனியான அதிகாரங்களுடன் செயல்படுவதன் மூலம் தான் மக்களாட்சிக்கு வலிமை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு குற்றம் நாடாளுமன்றத்திற்குள் நடந்தாலும் வெளியில் நடந்தாலும் குற்றம் குற்றம்தான். இதில் இருவேறு கருத்துகள் எழுவதற்கு வாய்ப்பு இல்லை. தேசத்திற்குப் பெருத்த அவமானத்தை உருவாக்கிக் கொடுத்த, ஒரு தீய செயலை நாடாளுமன்றம், நீதிமன்றம் இரண்டிலும் தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றால், யார் தான் அவர்களுக்குத் தண்டனை வழங்குவது?
ஒருகாலத்தில் தேசத்திற்குத் துரோகம் செய்தவர்களை நடுத்தெருவில் வைத்து மக்களே கல்லால் அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். கோபத்தில் மக்களே இவ்வாறு நேரடியாகத் தீர்ப்பு வழங்குவதில் மனித உரிமைகளை முற்றாக மறுத்து, பெரும் பாதிப்புகள் நிகழ்ந்து விடுகின்றன. குற்றவாளி என்ன சொல்கிறான் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமலேயே அவன் கொல்லப்பட்டுவிடுகிறான்.
இந்த நடைமுறை தவறானது என்றாலும் இப்பொழுது மக்களால் நேரடியாகவும் தண்டிக்க முடியவில்லை. மக்களாட்சியின் மனசாட்சியாக இருக்கும் சட்டத்தாலும் இதனைத் தண்டிக்க முடியவில்லை என்றால் நீதி சார்ந்த சமூகம் என்பதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? குற்றமற்றவர் என்று நரசிம்ம ராவ் விடுவிக்கப்பட்டார். இதே தவறு மன்மோகன் சிங் ஆட்சியிலும் தொடர்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெறிமுறைகளை மீறுதல், இன்று மிகவும் சாதாரணமான நடவடிக்கைகளாக மாறிவிட்டன. கொலை, கொள்ளை குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்க முடிகிறது. சிறைச்சாலையில் கைதியாகவும் இருக்க முடிகிறது. மனைவி என்று பொய் சொல்லி, பெண்களை வெளிநாடுகளுக்குக் கடத்திச் சென்று விற்க முடிகிறது. லஞ்சத்திற்காக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கவும் முடிகிறது. இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்ன என்று கேட்ட காலம் ஒன்றிருந்தது. இன்று விடியோ பதிவுகள் தொலைக்காட்சிகளின் மூலம் மக்களுக்கு நேரடியாகக் காட்டப்படுகிறது. இதில் எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளிவந்த பரபரப்புடன் அனைத்தையும் நீர்த்துப்போக வைத்து விடுகிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் தீர்வு என்ன என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வி?
அதிகாரம் எப்பொழுதும் மக்களை ஊழலில் மூழ்கடிக்கவே முயற்சிக்கும். எத்தனைதான் உறுதியையும் மனவலிமையையும் பெற்றிருந்த போதிலும், அவர்களையும் ஒரு நொடி மூச்சுத் திணற வைத்துவிடும் வலிமை, அதிகாரம் பெற்றெடுத்த ஊழலுக்கு இருக்கிறது. அதிகாரத்தால் கட்டியமைக்கப்பட்ட ஊழலையும் லஞ்சத்தையும் எதிர்த்து சமரசமற்று போராடுதல், உண்மையான மக்களாட்சியின் அடிப்படையான கடமையாகும். இந்த அநீதியைக் கண்டு பொங்கி எழும் மக்களின் போர்க்குணத்தை ஒழுங்கமைத்து, சமூக மாற்றத்திற்குப் பயன்படுத்துவது உண்மையான அரசியல் கட்சிகளின் முதல் கடமையாகும். மக்களின் விழிப்புணர்வில் பிறக்கும் போர்க்குணம் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தும் சிறப்பைக் கொண்டவை. இதில் நாடாளுமன்றத்தைக் கண்காணித்தலுக்கு முதலிடம் தர வேண்டும். இதனை வளர்த்தெடுக்கும் முயற்சிக்கு சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.
நாடாளுமன்றம் பற்றி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 105வது பிரிவில் சில குறிப்பு கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்குள் நடைபெறும் தவறுகளுக்காக உறுப்பினர்கள் தண்டிக்கப்படுவதை இந்தச் சட்டம் தடுத்துவிடுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் இந்தப் பிரிவின் நோக்கம் மிகவும் தெளிவானது. எதிர்க்கட்சியோ அல்லது ஆளும் கட்சிக்குள்ளோ ஒருவர் மீது மற்றவர் பகைமை கொண்டு பழிவாங்கும் வாய்ப்புகள் அதிகார அரசியலில் அதிகமாகவே இருக்கிறது. சட்டத்தைப் பயன்படுத்தி, செல்வாக்கு மிக்கவர்கள் நீதிமன்றத்தின் வழியாகப் பழி தீர்த்துக் கொள்ளக்கூடாது என்ற இதன் நோக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களில் சில அதற்கு நேர்மாறான தீமைகளைத் தரக்கூடியவையாக அமைந்துவிடுகின்றன. இதைப்போலத்தான் இந்த சட்டப்பிரிவும் குதிரை வியாபாரத்தை ஊக்கப்படுத்தும் சட்டமாக மாறிவிட்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 105வது பிரிவை இன்றைய தேவைக்கேற்ப திருத்தி அமைப்பது காலத்தின் தேவையாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெருகி வரும் குற்றங்களைத் தடுக்கக் கூடிய வலிமை கொண்ட சட்டம் இன்று தேவை. சட்டத்தைவிட மேலானவர்கள் அல்லது புனிதமானவர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் இதன் இறுதி முடிவு நீதிமன்றத்தால் வழங்கக்கூடியதாக இருக்கக் கூடாது. நாடாளுமன்றமே இறுதி முடிவை எடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இன்றைய சூழலில் நாடாளுமன்றம் தங்களுக்குள் பல்வேறு காரணங்களால் சமரசம் செய்து கொள்கிறது. அண்மையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சியின் வெற்றியை எதிர்க்கட்சியின் மறைமுக வாக்குகள் தீர்மானித்துள்ளன. இந்தப் பின்னணியில் மறைவிடங்கள் எதுவும் இல்லாமல் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேரடிக் கண்காணிப்பில், நாட்டு மக்களுக்கு முழுவதும் தெரிவிக்கும் வகையில் வெளிப்படைத்தன்மை கொண்ட சட்டங்கள் தேவைப்படுகின்றன. இன்றைய குதிரை வியாபாரங்களை இதனால் மட்டும்தான் தடுத்து நிறுத்த முடியும்.
சி . மகேந்திரன்

நன்றி : தினமணி

0 comments: