Thursday, August 7, 2008

மீண்டும் வெண்மைப் புரட்சிக்கு வித்திடுவோம்!

மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் மிகவும் அத்தியாவசியப் பொருள்களில் முக்கியமாக இருப்பது பத்திரிகையும் (செய்தித்தாள்), பாலும்.
பால்காரர் அல்லது பத்திரிகை போடும் பையன் இவர்களில் யாராவது ஒருவர் நம்வீட்டுக்கு வராமல் ஒருநாள் "ஆப்சென்ட்' ஆனால் அன்றைய தினம்... வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
எனவேதான், மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம், மறியலின்போது கூட பால், பத்திரிகை வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
கிராமங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது பால் உற்பத்தி. அவர்கள் வீட்டில் ஓரிரு மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துகின்றனர். மழையாலும், வறட்சியாலும், விளைபொருள்களுக்கு ஏற்ற விலை கிடைக்காமல் விவசாயம் பொய்த்துப் போகும்போது அவர்களுக்கு கைகொடுப்பது அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம்தான்.
உலகில் உள்ள மொத்தக் கால்நடைகளில் 15 சதவீதம் இந்தியாவில் உள்ளன. பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்தாலும் உயர்ரக கறவை மாடுகள் வளர்ப்பதில் விழிப்புணர்வு ஏற்படவில்லை.
சமன்படுத்தப்பட்டது, கலோரி அதிகம் உள்ளது என பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பால் தற்போது லிட்டருக்கு ரூ. 20, ரூ. 22 வரை விற்கப்படுகிறது.
ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு உயர்த்திய பால் விலை உயர்வு, இன்று வரை கிராமங்களில் அமலாக்கப்படவில்லை. சில பகுதிகளில் ஒரு ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டு தற்போது ரூ. 10, 11க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
கிராமங்களில் 11 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் பால், நகரங்களில் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பால் விலையை அரசு உயர்த்தியது பால் உற்பத்தியாளர்களைவிட, விற்பனையாளர்களுக்கே அதிகமாக பயன்கொடுத்துள்ளது.
தேசிய அளவில் குஜராத்தை அடுத்து தமிழகத்தில் நாள்தோறும் 47 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் மொத்த பால் கொள்முதலில் ஆவின் நிறுவனம் 47 சதவீதமும், தனியார் நிறுவனங்கள் 53 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு அரசு சார்பு நிறுவனமான ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து நகர்ப் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
பருவ காலங்களிலும், விற்பனை இலக்கைவிட பால் கொள்முதல் அளவு அதிகரிக்கும்போதும் குறிப்பிட்ட அளவு பால் பவுடராக மாற்றப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமும் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் பணம் பட்டுவாடா செய்துவந்தது. மேலும், ஒவ்வொரு சங்கத்துக்கும் தனித்தனியாக குறிப்பிட்ட அளவு லாபத் தொகை வங்கிகளில் இருப்பு இருந்தது. ஆனால், இந்த கூட்டுறவு சங்கங்களில் பொறுப்பில் இருந்தவர்கள் "கைவைத்ததால்' பெரும்பாலான பால் உற்பத்தியாளர் சங்கங்களும் முடங்கி செயல்படமுடியாத அளவுக்குச் சென்றன. இதனால், கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்காமல் தனியார் பால் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பால் வழங்குவதில் ஆர்வம் காட்டினர்.
கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் அதே விலை, தேவையான நேரத்தில் முன் பணம், மற்றும் பிற சலுகைகளையும் தனியார் பால் நிறுவனங்கள் வாரி வழங்கியதால் பால் கொள்முதலில் குறுகிய காலத்தில் தனியார் பால் நிறுவனங்கள் வெற்றிபெற்றன.
சில இடங்களில் பால் கெட்டுப்போகாமல் இருக்க உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை பாலில் கலப்படம் செய்து சில தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. இதைத் தடுக்கவும், ஆவின் விற்பனையை அதிகரிக்கவும் தமிழகம் முழுவதும் தனியார் பால் விற்பனை நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தி கலப்படப் பாலை பறிமுதல் செய்து அழித்தனர்.
வெளிநாடுகளில் விவசாயிகள் வளர்க்கும் மாடுகளுக்கு பராமரிப்பிற்காக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் உயர் ரக மாடுகள் வளர்ப்பது அபூர்வமாக உள்ளது. இரண்டு முதல் அதிகபட்சம் 4 லிட்டர் வரை பால் கொடுக்கும் மாடுகளைத்தான் வளர்க்கின்றனர். இதனால், தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு ஆகியவற்றைக் கணக்கிடும்போது விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பது அரிதாக உள்ளது.
எனவே, அதிக அளவில் பால் சுரக்கும் உயர் ரக மாடுகளை விவசாயிகளுக்கு வழங்கி, புதிய தொழில்நுட்பங்களையும், ஆலோசனைகளையும் அரசு வழங்கினால், தமிழகத்தை அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக மாற்றமுடியும்.
இதன் மூலம் மற்றொரு வெண்மைப் புரட்சிக்கு வித்திட வேண்டும்.
சி.வேழவேந்தன்
நன்றி : தினமணி

2 comments:

said...

வெண்மைப் புரட்சி செய்ய வேண்டிய தருணம்

பால் தட்டுப்பாடு நீக்க உற்பத்தியை பெருக்க வேறு வழியில்லை

said...

கோவை விஜய் வருகைக்கு நன்றி