Thursday, August 7, 2008

காலத்தின் கட்டாயம்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 49 லிருந்து 60 ஆக அதிகரிப்பதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. தமிழக அரசின் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் விரைவில் பரிசீலனை செய்து நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஆணையைப் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
லட்சக் கணக்கில் இந்தியா முழுவதும் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. நமது மக்கள் தொகைக்கு ஏற்ற அளவு, நீதிமன்றங்களும், நீதிபதிகளும் கீழமை நீதிமன்றங்களில் தொடங்கி உயர் நீதிமன்றம் வரை இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை. இப்படி நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் பலருடைய வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, விரைவாக முடிவுகள் எடுக்கப்படாததால் ஏற்படும் தாமதங்கள் தேசத்தின் வளர்ச்சியையும் தாமதப்படுத்துகிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது.
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, இந்தியாவிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 876. ஆனால், நீதிபதிகள் நியமிக்கப்படாமல் 282 இடங்கள் காலியாக இருக்கின்றன. அதாவது, செயல்படும் நீதிபதிகள் 594 பேர்தான். ஏனைய நீதிபதிகள் ஏன் நியமிக்கப்படவில்லை என்பது அதைவிட வேடிக்கையான விஷயம்.
உயர் நீதிமன்றக் குழு பரிந்துரைக்கும் நீதிபதி தேர்வுக்கான பட்டியல், சில மாநில அரசுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போனால், நீதிபதிகள் நியமிக்கப்படாமலே தொடரும். அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தனது சம்மதத்தைத் தராமல் இழுத்தடிக்கும். ஆட்சியாளர்களின் பார்வையில் எல்லா ஜாதியினருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறதா, தங்களது கட்சிக்கோ, கூட்டணிக்கோ ஏற்புடைய நபர்கள் தானா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள் போன்ற விஷயங்கள் ஒத்துப்போனால்தான் அந்தப் பட்டியலை ஏற்றுக் கொள்வார்கள். அங்கே தகுதி, திறமை, நேர்மை போன்ற விஷயங்கள் எப்போதுமே இரண்டாம் பட்சம்தான்.
தீர்ப்புகள் பாரபட்சமற்ற முறையிலும், சட்டத்தின் அடிப்படையிலும், விரைவாகவும் வழங்கப்படாமல் போனால் அதன் விளைவுகள் தனிநபர் பாதிப்பாக மட்டுமல்லாமல், சமூக பாதிப்பாகவும் மாறிவிடும் அபாயம் இருக்கிறது. ஜாதிக்கும், கட்சிக்கும் முக்கியத்துவம் அதிகரிக்கும்போது, ஏனைய ஜாதியைச் சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் பாதிக்கப்படுகின்றனர். இதன் எதிரொலி முதலில் நீதித் துறையின் மீதும் அதைத் தொடர்ந்து மக்களாட்சியின் மீதும் ஏற்படும் என்பதை நமது ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் 31, 2007 புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் 37,43,060. இங்கே இப்படி என்றால், கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகள் முப்பது கோடியை எட்டும். உச்ச நீதிமன்றத்தில் மட்டும் ஏறத்தாழ அரை லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
1984 முதலே, நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நீதிமன்றங்கள் "ஷிஃப்ட்' முறையில் செயல்பட்டு அதிகமான வழக்குகளை விசாரித்துப் பைசல் செய்வது, தேவையில்லாமல் "வாய்தா' வழங்குவதைக் குறைத்து வழக்குகளை விரைவில் முடிக்க முயல்வது என்று பல்வேறு சிபாரிசுகள் செய்யப்பட்டு வருகின்றன. 1988ல் சமர்ப்பிக்கப்பட்ட சட்டக் கமிஷனின் 125 வது பரிந்துரையும், 2003ல் வெளிவந்த நீதிபதி மலிமத் கமிட்டியின் குற்றவியல் சீர்த்திருத்தப் பரிந்துரையும் முறையாகவும், முழுமையாகவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்த விஷயத்தில் தமிழகம் எவ்வளவோ மேல். ஆட்சிகள் மாறினாலும், அரசின் உதவியுடன் உயர் நீதிமன்றம் பல புதிய நடைமுறைகள் மூலம் வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க முயன்று வருகிறது. கடந்த வருடம் நடைமுறைக்கு வந்திருக்கும் மாலை நேர நீதிமன்றங்கள் ஒரு புதிய முயற்சி. அப்படி இருந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 4,28,832 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
விரைவான நீதி கிடைக்காமல் போனால் அது மறுக்கப்பட்ட நீதி என்று தான் கொள்ளல் வேண்டும். இந்த விஷயத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன் நின்று விடாமல், தரமான நீதியும், விரைவான நீதியும் கீழமை நீதிமன்ற அளவில் கிடைப்பதற்கு அரசு வழிகோல வேண்டியது அவசியம். அது காலத்தின் கட்டாயமும் கூட!


நன்றி : தினமணி

0 comments: