Friday, August 8, 2008

தோல்வியே தொடர்கதையா?

உலகின் நாடி நரம்பைப் பிடித்துப் பார்க்கும் அங்கே, வெட்டிப் பேச்சுப் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிப்பவர்களுக்கு சிறிதும் இடமில்லை. டன் கணக்கில் தியாகம் செய்து நேரம் பார்க்காமல், கண் துஞ்சாமல் தான் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்கிற உயர்ந்த வைராக்கியத்துடன் ஆண்டுக் கணக்கில் பயிற்சிகள் மேற்கொண்ட திறமைசாலிகள் கூடும் களம்தான் ஒலிம்பிக்.
அதில் இந்தியாவின் "பேலன்ஸ் ஷூட்' 8 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம். அதாவது ஆடவர் ஹாக்கி குழு, நார்மன் பிரிட்சார்டு (தடகளம்), கசபா தாதா சாஹேப் யாதவ் (மல்யுத்தம்), லியாண்டர் பயஸ் (டென்னிஸ்), கர்ணம் மல்லேஸ்வரி (பளு தூக்குதல்), ராஜ்யவர்தன் சிங் ரதோட் (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர்தான் இந்திய சாம்ராஜ்யத்தின் ஒலிம்பிக் வலிமைக்கு இதுவரை கட்டியம் கூறியவர்கள்.
தற்போது 29வது ஒலிம்பிக் போட்டி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தியாவிலிருந்து இம்முறை 56 வீரர், வீராங்கனைகளும் அவர்களுக்கு உறுதுணையாக பயிற்சியாளர் உள்ளிட்ட 42 உதவியாளர் குழுவும் 12 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கிறது. ஆனால் ஒன்றில்கூட பதக்கம் உறுதி எனக் கூறமுடியாத அவலம்தான் உள்ளது.
1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த போட்டியில் ஜெய்பால் சிங் தலைமையில் பங்கேற்ற இந்திய ஹாக்கி குழு தங்கப் பதக்கத்துடன் தாயகம் திரும்பியது. ஆடவர் ஹாக்கி விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் ஐரோப்பா அல்லாத நாடாக அப்போது இந்தியா திகழ்ந்தது. அதுமுதல் 1956ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த போட்டிவரை இந்திய ஹாக்கி குழுவை யாரும் அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கடைசியாக 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வி.பாஸ்கரன் தலைமையில் சென்ற குழு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஹாக்கி குழு, இம்முறை அதற்கான தகுதிப் போட்டியிலேயே தேறாமல் போனது, உச்சகட்ட ஏமாற்றத்தை அளித்துள்ளது. பத்தாண்டுகள் அல்ல, இருபது ஆண்டுகள் அல்ல, 84 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பை இந்திய ஹாக்கி அணி இழந்துள்ளது.
1900ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த போட்டி முதல் நூறாண்டுகளைக் கடந்து ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறோம். ஆனால் இந்தியாவின் கஜானாவில் வெறும் 17 பதக்கங்கள்தான். அதற்காக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாமானியனும் வருத்தப்பட்டிருப்பானோ, இல்லையோ தெரியவில்லை, நிச்சயம் நவீன ஒலிம்பிக் விளையாட்டைத் தோற்றுவித்த பியாரே டி கூபர்டின் இருந்திருந்தால் கண் கலங்கியிருப்பார்.
இந்தியாவில் அரசியல்வாதிகள் ஒலிம்பிக் போட்டியை தாங்கள் ஆட்சிசெய்வது மாதிரியே பார்க்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேஷம் கலைப்பது போல, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்கையும் பார்க்கிறார்கள். போட்டி நடைபெறும் சமயத்தில் மட்டும் கவலை கொள்கிறார்கள். ஆனால், எந்த அரசியல்வாதியும் தனது ஆட்சிக் காலத்தில் ஜாம்பவான்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் களத்துக்கு வலிமையான வீரரையோ, வீராங்கனையையோ தயார் செய்யும் நீண்டகாலத் திட்டத்தின் அவசியத்தை ஆணித்தரமாக வலியுறுத்தியது கிடையாது. அப்படியொரு மகான் கிடைக்கும்வரை, ஒலிம்பிக் என்பது இந்தியாவுக்கு வெறும் சடங்காகவே இருக்கும்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், போட்டிக்காக நாம் திட்டமிடுவது மிகவும் மோசம். அப்படியிருந்தும் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதைபோல யாராவது ஒருவர் கடந்த சில போட்டிகளில் ஏதாவது ஒரு பிரிவில் பதக்கம் வென்று நாட்டின் கதாநாயகனாக ஆகிவிடுகிறார். அதைத் தொடர்ந்து போட்டிக்கான ஒட்டுமொத்தத் தோல்வி குறித்து விசாரணை நடத்தப்படும் என்ற பேச்சு, போட்டி முடிந்ததும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியாகும். இது தொன்றுதொட்டு இருந்துவரும் கதை.
அணுகுண்டு வெடித்து அறிவியல் முன்னேற்றத்தில் புரட்சி செய்துவரும் இந்தியா, தனது விளையாட்டு வலிமையை உலகுக்கு வெளிக்காட்டுவதில் சுணக்கம் காட்டிவருவது வேதனையான விஷயம். வெறும் 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நாடுகூட பதக்கத்தைக் கைப்பற்றும்போது, 115 கோடிக்கும் மேலான மக்கள் தொகையை உள்ளடக்கிய இந்தியா ஒரு பதக்கத்துக்காகப் போராடும் நிலைதான் உள்ளது.
அடுத்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, உலக ஹாக்கி சாம்பியன் போட்டி ஆகியவற்றைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக்கையும் நடத்த மேன்மை தாங்கிய இந்திய விளையாட்டு அமைப்பு தயாராகியுள்ளது. ஆதலால் ஆட்சி செய்யும் அதிகாரிகள் அதையும் மனதில் கொண்டு தங்களது வேலைப்பளுவில் ஒரு சிறிய சதவீதத்தை இந்த பாழாய்ப்போன விளையாட்டுக்காக இப்போதிலிருந்தே ஒதுக்கி முன்னேறப் பாடுபடவேண்டும். இல்லையேல் பங்கேற்புதான் முக்கியம்; பதக்கம் வெல்வது இரண்டாம்பட்சம் என்ற தத்துவத்துக்கு கிடைத்த வெற்றியுடன் திருப்தியடைவோம்!
வி. துரைப்பாண்டி
நன்றி : தினமணி

0 comments: