Friday, August 8, 2008

மனக்கவலைக்கு மருந்து

சென்னையில் ஒரு தனியார் பள்ளியிலும், ஓர் அரசு நிதியுதவி பெறும் பள்ளியிலும் நடத்திய கருத்தெடுப்பில், "90 சதவீத மாணவர்கள் மனக்கவலையில் இருக்கின்றனர்' என்கிறது ஆய்வின் முடிவு. இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், குறிப்பாக பிளஸ் 1 மாணவர்களின் கவலைகள் அதிகம்.
கற்றலில் சிரமம், மனச்சோர்வு, தாங்கள் பயனற்றவர்கள் என்ற எண்ணம், தாழ்வு மனப்பான்மை போன்றவைதான் இந்த மனக்கவலைக்குக் காரணங்கள்.
பிளஸ் 2 தேர்ச்சி, வாழ்க்கையின் திருப்புமுனையாக இருக்கிறது. பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த வளர்இளம் பருவ மாணவர்களின் மீது இனம் புரியாத மனச்சுமையாக அழுந்துகிறது.
எந்தத் துறையாக இருந்தாலும், திறமை இருந்தால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையையும் வழிகாட்டுதலையும் அவர்களுக்குக் கல்வியோடு கலந்து அளிக்கும் பள்ளிச்சூழல் இன்று தமிழகத்தில் இல்லை. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மனக்கவலை தருவதாகும்.
மேலும், நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கின்ற கற்றல் முறைகளும், கற்பித்தலும், உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களும் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு மேலும் அருகிப்போகிறது.
கல்விக்கூடத்துக்கு வெளியே விரிந்து கிடக்கும் வாய்ப்புகள் பற்றிய புரிதலையும், அவரவர் திறமைக்கு ஏற்ப வாழ்க்கைப் பாதை விரிந்து செல்வதையும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விளக்கிச் சொல்வதும் ஆலோசனை வழங்குவதும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வியோடு இணைந்த நடைமுறையாக மாறுவதுதான் இத்தகைய மனக்கவலையை மாற்றும்.
நுழைவுத் தேர்வு இல்லை என்பதால் அரசுப் பள்ளிகள் எந்தக் கவலையும் கொள்ளவில்லை. ஆனால், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களை அகில இந்திய நுழைவுத் தேர்வில் பங்கேற்கத் தூண்டின. நிகழாண்டில் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் 99 சதவீதம் பேர் தனியார் பள்ளி மாணவர்களாகவே இருப்பார்கள். இந்திய அளவிலும், பிற மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டிலும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பெற்று சிறகுகளை விரிக்க இந்த கிராமப்புற மாணவர்களாலும் முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் சொல்லப்படாமலேயே முடிந்து போயின.
அண்ணா பல்கலைக்கழக தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு வருவோரில், சரிபாதிப் பேர் கிராமப்புற ஏழை மாணவர்கள் என்பதைப் பார்க்கிறபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், "கட்ஆப்' மதிப்பெண் அதிகம் பெற்றிருந்தும்கூட, அரசு பொறியியல் கல்லூரிகளில் குறைந்த இடங்களே இருப்பதால், வேறுவழியின்றி சுயநிதிக் கல்லூரிக்குச் சேர்க்கை ஆணை பெற்று விழிபிதுங்குவதைப் காண வேதனையாக இருக்கிறது. இந்த ஏழை மாணவர்களுக்கு, அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு வழிகாட்டியிருந்தால், இந்தியா முழுவதிலும் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் நேரடியாகவும், மாநில ஒதுக்கீட்டிலும் இடம்பெற்று, குறைந்த கட்டணத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்திருப்பார்கள்.
நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண் பெற வைப்பது மட்டுமே ஒரு மேல்நிலைப் பள்ளியின் கடமையாக இருக்க முடியாது. அந்த மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் காட்டி, அவர்களே தங்களை அடையாளம் காண உதவும் கூடுதல் பொறுப்பும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உள்ளது. தற்போது இந்தப் பொறுப்பு ஒரு சில ஆசிரியர்களின் தனிப்பட்ட அக்கறையாக இருந்து வருகிறது. இதை நிறுவனத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாக மாற்ற வேண்டிய அவசியம் உருவாகி வருகிறது.
கிராமப்புற மாணவர்களும் உயர்கல்வியை அடைய வேண்டும் என்ற நோக்கில் "எஸ்எஸ்எல்சி பியுசி' இரண்டும் ஒன்றாக்கப்பட்டதே பிளஸ் 2 கல்விமுறை. சில மாநிலங்களில் இதற்கு "ஜூனியர் காலேஜ்' என்றும் பெயர். ஆனால் தமிழ்நாட்டில் 90 சதவீத மேல்நிலைப் பள்ளிகள் இன்னமும் வெறும் பள்ளிகளாகவே உள்ளன. ஆகவேதான் 90 சதவீத மாணவர்கள் மனக்கவலையில் ஆழ்கின்றனர்.


நன்றி : தினமணி

0 comments: