Friday, August 8, 2008

நூற்றுக்கு நூறு வேட்டை!

குழந்தைக்கு வாய்க்கு ருசியாய் உணவூட்டுகிறோம். பழமும், பாலும் தந்து உரமூட்டுகிறோம். ஏன், குழந்தை பசியாற வேண்டும், தேக ஆரோக்கியத்துடன் வளர வேண்டும் என்ற ஆசையில். அதற்காகத்தான் நாள்தோறும் நாம் பாடாய்ப்படுகிறோம். ஆனால், அப்படி நாம் பிரயாசைப்பட்டு வளர்க்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை முறையாகப் பாதுகாக்கிறோமா என்றால், இல்லை. ஆரோக்கியத்தை மட்டுமல்ல. குழந்தையின் சுதந்திரத்தை, உணர்ச்சியை, மகிழ்ச்சியை அனைத்தையும் செல்லாக் காசாய் சீர்குலைத்து விடுகிறோம். எதனால் இந்த முரண்பாடு? ஒரே ஒரு காரணம்தான். அதுதான் நூற்றுக்கு நூறு வேட்டை.
ஆமாம், இன்றைய தினம் இளம் பெற்றோரை துரத்திக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பூதம் இந்தக் "கனவு' தான். கல்வியாண்டு தொடங்கிவிட்டால் போதும். நூறு மதிப்பெண்ணைத் தேடி மூலைக்கு மூலை ஓடும் பதற்றம் என்ன? வராந்தாக்களில் தவம் இருக்கும் பரிதாபம் என்ன? அத்தோடு ஆயிற்றா, அவர்களின் ஆசைக்குத் தூபமிடும் போட்டா போட்டி விளம்பரங்கள்.
"உங்கள் குழந்தை நூற்றுக்கு நூறு வாங்க வேண்டுமா? அதற்கு உத்தரவாதம் எங்கள் பள்ளிக்கூடம்தான்'
"உங்கள் செல்லம் சாதனை படைக்க நீங்கள் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டிய இடம் எங்கள் பள்ளிக்கூட வாசல்படிதான்'
இவற்றைப் படித்ததும் அலாவுதீனின் அற்புத விளக்குக் கிடைத்த மாதிரி பூரித்துப் போய்விடுகிறார்கள் பெற்றோர்கள்.
"அப்படியா... இதோ என் பிள்ளை. எத்தனை ஆயிரம் வேண்டும். பிடியுங்கள். எப்படியாவது நூற்றுக்கு நூறு வேண்டும். அதற்கு வழி செய்யுங்கள். பிளீஸ்...'
இது போன்ற காட்சிகள்தான் நடுத்தட்டுக்கு மேலே அத்தனை குடும்பங்களிலும் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அன்றாடக் காலட்சேபத் தேவைகள், குடும்ப விஷயங்கள் அத்தனையும் புறம்தள்ளிவிட்டு குழந்தைகளின் கல்விப் பிரச்னையில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் இளம் பெற்றோர்கள்.
சற்று நிதானமாக யோசித்தால் இது தேவையற்ற வலுவில் தேடிக்கொள்ளும் அர்த்தமற்ற தடுமாற்றம் என்பது தெளிவாகப் புரியும்.
கல்வி என்பது மனித அறிவை வெளிக்கொண்டு வரும் ஒரு கருவி. அரிச்சுவடிதான் ஆரம்பம் என்றாலும், முடிவு என்பது முடிவில்லாதது. கல்வியால் கண்டு உணரப்படும் அறிவு விலைமதிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு செல்வம். அச் செல்வத்தைக் கொண்டு பண்டமாற்றுப்போல் பணம் தேடிக் கொள்வதுதான் வாழ்க்கை.
சுருங்கச் சொல்வதானால் கல்வியின் மூலமாக அறிவைப் பெறலாம். அறிவைக்கொண்டு சன்மானம் (ஊதியம்) பெறலாம். இந்த சுழற்சி விதிதான் இயல்பானது. ஏற்புடையது. எப்போதும் சிக்கலற்ற திசையில் செல்லக்கூடியது.
ஆனால், இச் சுழற்சி விதி தற்போது தடம்புரண்டுவிட்டது. கல்வியின் நோக்கமே பணம் பண்ணுவதுதான் என்ற தடாலடிக்கு வந்துவிட்டார்கள் மக்கள். அறிவுக்குப் பதிலாகப் பணத்தைக் குறிவைக்கும் அம்பாகிவிட்டது கல்வி.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று முதற்குரல் கொடுத்தவன் தமிழன்தான். "ஒற்றுமையை' தமிழன் வலியுறுத்தியது போல் உலகில் வேறு எந்த நாட்டுக்காரனும் வலியுறுத்துவது என்ன? நினைக்கக்கூட இல்லை.
மனித ஒற்றுமைக்கான சிந்தனை இது. அன்புக்கும் சமாதானத்துக்குமான இந்த அறைகூவலை "உலகமயமாக்கல்' என்ற ஜிகினாத்தனம் மாற்றிவிட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது. இந்த "உலகமயமாக்கல்' கொள்கையால் நம் பாரம்பரியப் பண்பு நலன்களையும், கலாசார நுட்பங்களையும் ஏற்கெனவே காற்றில் பறக்க விட்டுவிட்டோம். அந்தத் தாக்கம் இப்போது கல்வியிலும் பரவத் தொடங்கிவிட்டது.
நம் குழந்தைகள் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டாம் என்பதல்ல. நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும்; வளர வேண்டும்; வாழ வேண்டும். ஆனால், அது இயல்பாகப் பெற வேண்டும்.
நம் குழந்தைகளிடம் உள்ள இயற்கை அறிவு, இலக்கியமாக, கலையாக, அறிவியலாக, பொறியியலாக, மருத்துவமாக ஏதோ ஒன்றைச் சார்ந்திருக்கலாம். அதைப் புரிந்து அதற்கேற்ப குழந்தைகளைப் பெற்றோர்கள் வழிநடத்திச் செல்ல வேண்டும். மாறாக குழந்தைகளுக்குள்ளே நாம் புகுந்து கொண்டு நமது ஆசைகளைக் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. இந்தத் தவறான முயற்சிகூட சில வேளைகளில் பலன் தரலாம். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது எதிர்மறை விளைவுகளையே உண்டாக்குகிறது. கலிலியோவை மருத்துவம்தான் படிக்கவைத்தார்கள். ஆனால் அவருக்கு அதில் நாட்டமில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம், மருத்துவம் ஒரு அனுமானமே தவிர, தீர்வல்ல. சிகிச்சைக்கென்று போனால் டாக்டர் ல ஒரு மருந்து சொல்வார். டாக்டர் வ வேறொரு மருந்து சொல்வார். அந்த வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் சிகிச்சை செய்து கொண்டாலும் "நோய்' குணமாவது உறுதி இல்லை. ஆனால், நான்கையும் மூன்றையும் கூட்டினால் ஏழு என்பது உறுதி. இந்தத் தீர்வு நான் சொன்னாலும் ஒன்றுதான். நீங்கள் சொன்னாலும் ஒன்றுதான். இது யாராலும் மாற்ற முடியாத தீர்வு என்று கணிதத்துக்கு மாறினார், கலிலியோ.
அவ்விதம் மாறக்கூடிய வசதியும், தைரியமும் கலிலியோவுக்கு இருந்ததைப் போல் நம் குழந்தைகளுக்கு இல்லாமல் இருக்கலாம். பெற்றோர்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், பெற்றோர்கள் பெரும்பாலும் அப்படி இல்லையே. பிள்ளைகளை பள்ளிக் காம்பவுண்டுக்குள் விட்டுவிட்டு அங்குள்ள மரத்தடியில் கூடுவார்கள். ஒரு குட்டி மாநாடு நடக்கும். "என் பிள்ளை இப்படி... உன் பிள்ளை எப்படி' என்று கருத்துக் கணிப்பார்கள். அடுத்த குழந்தை தனது குழந்தையைவிட ஒரு மதிப்பெண் அதிகம் என்பது தெரிந்ததோ, கெட்டது கதை. குழந்தையின்பாடு. தாளம்படாது, தறிபடாது. "நீயும் தானே அவனை(ளை)ப் போல தின்றே. அவளைப் போல டிரஸ் பண்றே... வாரத்துக்கு ஒரு வாட்டர் பாட்டில்... மாதத்துக்கொரு ஸ்கூல் பேக்.. இத்தனை வாங்கிக் கொடுத்தும் என்ன பிரயோஜனம். மதிப்பெண் குறைஞ்சுட்டியே. உனக்கு வெட்கமா இல்லை. அறிவில்லை..' இப்படிக் குழந்தையை வசைமாரிப் பொழிவார்கள். கழி எடுத்தும் அடிப்பார்கள்.
இது ஒரு சராசரி மனதின் அவசர வெளிப்பாடு. தன் குழந்தையால் தனக்கு ஏதோ அவமானம் நேர்ந்ததாய்க் கருதும் ஆத்திரம்.
ஆனால், ஒன்றைச் சிந்திக்க வேண்டும். இயற்கை என்னும் விசித்திர தேவதை ஒவ்வொரு குழந்தையின் அழகை வித்தியாசப்படுத்தியுள்ளது. அதை நாம் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்.
படைப்பின் ரகசியம் என்று பிரம்மாவுக்கு நன்றி சொல்கிறோம். ஆனால், அதே படைப்பின் ரகசியம் குழந்தைகளின் அறிவையும் வித்தியாசப்படுத்தியுள்ளது. அதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?
இன்னொன்று தெரியுமா? இக்கால எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு நுண்மான் நுழைபுலம் ( ள்ங்ய்ள்ண்ற்ண்ஸ்ங்) நம்மைக் காட்டிலும் அதிகம். பக்கத்து குழந்தையைவிட ஒரு மதிப்பெண் குறைந்த வருத்தம் நமக்கு முன்பே நமது குழந்தைகளின் மனதை கீறி விட்டிருக்கும். அதே சமயம் அடுத்த தேர்வில் பக்கத்து சீட்டை மிஞ்ச வேண்டும் என்ற சவாலும் குழந்தை மனதில் துளிர்விட்டிருக்கும். அது புரியாமல், புரிந்து கொள்ளப் பொறுமை இல்லாமல் நாம் வேறு தாக்கினால் அப்பிஞ்சு மனம் என்ன பாடுபடும்?
"அப்படியா... அதனால் என்ன... அடுத்த தடவை உனக்கு அதிக மதிப்பெண் வரும் பாரேன்...' என்று குழந்தையின் கன்னத்தில் ஒரு செல்லத் தட்டு தட்டுங்கள். அது பாரத ரத்னா விருது மாதிரி. குழந்தையின் அறிவை, ஆற்றலை, திறமையை உயர்த்திப் பிடித்துவிடும்.
குழந்தையிடம் காட்டும் கோபம், மற்ற குழந்தையுடன் ஒப்பிடும் போக்கு, இவற்றால் நம் குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மையும், மன அழுத்தமும் உண்டாகிறது. கொஞ்சம் பொறுமை காட்டினால் இவற்றைத் தவிர்த்து விடலாமே!
குழந்தைகளின் மனசுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது போலவே, அவர்கள் மனம்போல் விளையாடவும் அனுமதிக்க வேண்டும். விளையாட்டின் மூலம் ஆக்கப்பூர்வமான சிந்தனை, அனுசரித்துப்போகும் தன்மை, ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் உத்தி, குழந்தைக்குத் தானாகவே உண்டாகி விடுகிறது என்கிறார் பிகெட்( டண்ஹஞ்ங்ற்) என்ற உளவியல் அறிஞர்.
மனம்போல் விளையாட வேண்டும் என்றால் மணிக் கணக்கில் குழந்தை விளையாட வேண்டும் என்பதல்ல. ஊழ்ங்ங்க்ர்ம் ற்ர் ச்ங்ங்ப் என்பது ஊழ்ங்ங்க்ர்ம் ற்ர் ஹஸ்ரீற் என்பதாகாது. உரிய நேரம் வந்ததும் "கண்ணா... உன் விளையாட்டு நேரம் முடிந்தது' என்று மென்மையாக "கோடி' காட்டினால் போதும். குழந்தை புரிந்து கொள்ளும். எனவே, எல்லாக் குழந்தைகளும் அறிவுள்ள குழந்தைகள் என்று நம்புவோம். அறிவுக்கேற்ப அவர்கள் மதிப்பெண்கள் பெறுவார்கள். முன்னேற்றம் காண்பார்கள் என்பதில் உறுதியாக இருப்போம்.

தமிழினியன்

நன்றி : தினமணி

0 comments: