Saturday, August 9, 2008

வாழ்க ஜனநாயகம், பாவம் மக்கள்!

பெட்ரோல், டீசல், காஸ் விலையேற்றம், உணவுப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம், உரத் தட்டுப்பாடு என சாமான்யனை வதைக்கும் பொருளாதாரச் சிக்கலில் நாடு அல்லாடிக் கொண்டிருக்கிறது.
நாட்டின் முதுகெலும்பு எனப்படும் விவசாயம், இன்று முதுகொடிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. "சுகபோகம் வேண்டாம், ஒரு போகமாவது நல்ல விளைச்சல் எடுக்க விடுங்கள்' என்னும் விவசாயிகளின் ஓலம் எந்தக் "கரைவேட்டிகள்' காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.
பொருளாதார சக்தியிடம் போட்டியிட முடியாமல் விவசாய நிலங்களை விற்றுவிட்டு குழந்தை குட்டிகளுடன் நகரங்களுக்கு குடிபெயர ஆரம்பித்துவிட்டனர் விவசாயிகள். விவசாயக் கூலிகள் அரை வயிற்றுக் கஞ்சியிலிருந்து கால் வயிற்றுக் கஞ்சிக்கு மாறி, பிழைப்புக்காக நகரங்களில் தஞ்சமடைய ஆரம்பித்துவிட்டனர்.
ஆக, கிராமங்கள் இன்று சப்தமில்லாமல் காலியாகிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இதுபோன்ற காரணங்களால் சுமை தாங்க முடியாமல் சிறு, பெரு நகரங்கள் திணறி வருகின்றன. தொலைநோக்குப் பார்வையில்லாத அரசு நிர்வாகத்தால் ஏற்படும் குழப்பங்களுக்கு விலை தான் இன்று நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது ஊரறிந்த உண்மை.
விவசாயம் குறைந்ததால் உணவுப் பொருளுக்காக வெளிநாடுகளில் கையேந்தி நிற்கும் தொடக்க நிலையிலேயே இவ்வளவு "சூடு' (விலையேற்றம்) என்றால் வருங்காலத்தில்? தூக்கத்தில்கூட கஞ்சித் தொட்டிகள் வந்து வந்து பயமுறுத்துகின்றன.
இப்படி, அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அல்லல்படும் சாமான்யனை புதிய பொருளாதாரக் கொள்கையும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும் என்ன செய்துவிட முடியும்? இந்நிலையில், அமெரிக்காவை நம்பி அணுசக்தி ஒப்பந்தம் செய்யப் போவதையும், அதற்கு எதிர்ப்புக் கிளம்புவது ஏன் என்றும் சிந்திக்கும் சக்தி சாதாரண மக்களுக்கு இல்லை. ஆனால், இப்பிரச்னையால் அரசு கவிழுமா, கவிழாதா என பத்திரிகைகள் வாரக்கணக்கில் பரபரப்புச் செய்தி வெளியிட்டதால் சாமான்யனும் காதைத் தீட்ட ஆரம்பித்தான்.
மத்திய அரசுக்கு ஆபத்து என்றதும் மும்முரமாக ஆரம்பித்தது ஆள்பிடிக்கும் படலமும், குதிரை பேரமும். எதிர்க்கட்சியினரும் அதற்கு சளைத்தவர்களா? அவர்களும் தங்களது "பங்கு'க்கு வலைவீசினர். ரூ.25 கோடியில் தொடங்கி ரூ. 100 கோடி வரை பேரம் நடந்தது.
கரன்சி விஷயத்தில் மட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரபட்சமில்லாமல் கட்சிகள் "ஒற்றுமையாய்' இருப்பது மக்களுக்கு தெரியாமல் இல்லை. என்றாலும், நம்பிக்கை வாக்கெடுப்பன்று, ஆளும்கட்சியினர் தங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக்கூறி கட்டுக்கட்டாகப் பணத்தை, பாஜகவினர் கொட்டிய காட்சி, கடல் கடந்து இந்திய மானத்தை கப்பலேற்றி விட்டது.
இந்திய அரசியல்வாதிகளிடம் ஜனநாயகம் படும்பாடு அண்டை தேசங்களுக்கும் அம்சமாய்ப் புரிந்திருக்கும். ஒருவழியாக வாக்கெடுப்பில் வென்று மத்திய அரசு தப்பித்தது. இனி எஞ்சியுள்ள நாள்களை இடதுசாரிகளின் இம்சை இல்லாமல் காங்கிரஸ் கழித்துவிடும்.
1987ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெ. மற்றும் ஜானகி அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. ஜானகி அணியைச் சேர்ந்த எம்பி தங்கராஜை தங்கள் பக்கம் இழுக்க, ஜெயலலிதா அணியினர் ரூ.5 லட்சம் கொடுத்ததாக நாடாளுமன்றத்தில் பிரச்னை கிளப்பப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற போலீஸ் ஸ்டேஷனில் புகார் பதிவாகியிருக்கிறது. அதன் பிறகு இந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
அப்போதைக்கும் இப்போதைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான், அப்போது ரூ.5 லட்சம், இப்போது கோடி.
வெற்றிலை, பாக்குக்கு 10 ரூபாய் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை "வேலூருக்கும்', "திஹாருக்கும்' அனுப்பி வைக்கும்போது, கோடிக்கணக்கில் விலை போனவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க எந்தச் சட்டம் குறுக்கே நிற்கிறது?
இதேநிலை நீடித்தால், "லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்' என்ற வாசகத்தை நாடாளுமன்ற வாசலிலும் எழுதிப் போடச் சொல்லி மக்கள் கேட்கும் காலம் விரைவில் வரும்.
எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுவது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் சந்திரதேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு விசாரணையைத் துவக்கியுள்ளது.
"லஞ்சம் கைமாறியபோது தனியார் தொலைக்காட்சி எடுத்ததாகக் கூறப்படும் வீடியோ டேப் தங்கள் வசம் உள்ளதாகவும், ஆனால், அதை ஒளிபரப்பும் முடிவை சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சிதான் எடுக்கவேண்டும்' எனவும் இக்குழு கூறியுள்ளது.
ஆனால், இப்பிரச்னையில் திடீர் திருப்பமாக "லஞ்ச வீடியோ பதிவை' ஒளிபரப்பத் தற்போது அந்தத் தொலைக்காட்சி மறுத்து வருகிறது. பரபரப்பு காட்டவா அதை படம் பிடித்தார்கள்?
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், தொடர்ந்து 10 முறை எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான மக்களவைத் தலைவர் சோம்நாத்தை அவர் சார்ந்த கட்சி "ஒத்துழைக்கவில்லை' என்று கூறி நீக்கியதுதான் பெரும் சோகம்.
அதுவும், அவரது பிறந்தநாள் நெருங்கி வந்த சமயத்தில் மார்க்சிஸ்ட் எடுத்த நடவடிக்கை, கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டது.

கோவை ஜீவா
நன்றி : தினமணி

0 comments: