Saturday, August 9, 2008

ஏது கல்வி வளர்ச்சி?

காமராஜர் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாளா'கக் கொண்டாட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அதற்காக அரசு நிதியிலிருந்து ரூ. ஒரு கோடியே ஏழு லட்சமும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து ரூ. இருபத்திநான்கு லட்சமும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் அனுமதித்துள்ளார்.
இதன்மூலம் காமராஜரின் தியாக வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படவும் வாய்ப்பாக அமையும். அமைய வேண்டும் என்பது அனைவரது விருப்பமும். ஆனால், கல்வித்துறையில் நடந்து கொண்டிருப்பது என்ன?
அனைவருக்கும் கல்வித் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவும், கிராமப்புறங்களில் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உதவுமாறு மத்திய அரசை, மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான திட்ட வரைவை மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கிடம் தமிழகக் கல்வியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ளார்.
இந்த நிதியைப் பயன்படுத்தி மாநிலத்தில் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி, 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நீண்டநாள் கனவையும் நனவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகக் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார், தெரிவித்துவிட்டால் போதுமா? செயல்படுத்த வேண்டாமா?
"அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலனை செய்ய' ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. அதற்காக 2006 செப்டம்பர் 8ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் முத்துக்குமரன் தலைமையில் தமிழக அரசின் உயர்நிலைக்குழுவும் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதுபற்றி எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கவே, முதலமைச்சரும், கல்வியமைச்சரும், "சமச்சீர் கல்வி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்' என்று அறிவித்தனர். ஆனால், இது அறிவிப்போடு நிற்கிறது. இந்தக் கல்வியாண்டிலும் செயல்படுத்தப்படவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பள்ளிக் கல்வித்துறை சார்ந்த கல்விச் சட்டங்களை ஒன்றாய் இணைத்து இக்காலச் சூழலுக்கு ஏற்றாற்போல "தமிழ்நாடு கல்விச் சட்டம்' கொண்டுவர வேண்டும்.
மாநில வாரியம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு கல்வி வாரியங்களை ஒன்றாய் இணைத்து ஒரே பள்ளிக் கல்வி வாரியமாக அமைக்க வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 க்கு மேல் போகக்கூடாது என கோத்தாரி குழு அறிக்கை சுட்டிக்காட்டியபடி இருக்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி முழுமையும் தாய்மொழி தமிழில் அளிக்கப்பட வேண்டும். மழலையர் கல்விப் பொறுப்பை அரசே ஏற்றுக்கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் மூன்று வயது நிரம்பிய குழந்தைகள் அனைவருக்கும் மழலையர் பிரிவு தொடங்க வேண்டும்.
பொது அறிவைப் பெறவும், நல்ல குடிமகனாக வாழவும் தேவையான அறிவைப் பெறும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். மாணவர்களின் பன்முகத் தன்மையை வளர்த்தெடுக்கும் வகையில் சுற்றுலா, நூலகம் மற்றும் உடற்பயிற்சி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு சமச்சீர் கல்விக்கான பரிந்துரைகளை முத்துக்குமரன் குழு முன் வைத்துள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவது கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சிக்கும் ஆக்கம் தரும். சமுதாய முன்னேற்றமே கல்வி முன்னேற்றத்தில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்தாமல் "கல்வி வளர்ச்சி நாள்' கொண்டாடுவதால் என்ன பயன்?
கும்பகோணம் பள்ளி தீவிபத்தும், அதில் 94 குழந்தைகள் இறந்ததும், நமது கல்வி முறையின் அவலத்தையும், அலங்கோலத்தையும் படம் பிடித்துக்காட்டின. அதனை எதிர்த்து மாணவர் அமைப்புகளும், கல்வியாளர்களும் தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் சமச்சீர் கல்வியின் தேவையை வலியுறுத்தின. இதனால் இது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் தேர்தல் வாக்குறுதியாகக் கூறப்பட்டது.
நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் தேவையான "சமச்சீர் கல்வி'யை நடைமுறைப்படுத்தாமல் தமிழ்நாடு கல்வித்துறை புதிய குழப்பத்தைப் புகுத்திக் கொண்டுள்ளது. அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் "செயல்வழிக் கற்றல்' (அஆக) என்பதே அது. கூறுபட்டும், வேறுபட்டும் கிடக்கிற கல்வி முறைகளை ஒருமுகப்படுத்த வேண்டிய நேரத்தில் எதிர்பாராமல் இன்னொரு புதிய முறையைப் புகுத்துவது கல்வித்துறையில் மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தாதா?
ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை புத்தகம் இல்லை; தேர்வு இல்லை; எழுத்துப்பயிற்சி இல்லை; வகுப்பு மாற்றம் இல்லை; அட்டைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒரே வகுப்பறையில் மாற்றமில்லாமல் அமர்ந்து படிப்பது மாணவர் இடையே மனச்சோர்வை ஏற்படுத்தாதா? அரசு பாடநூல் நிறுவனம் வெளியிடும் பாடநூல்களை என்ன செய்வது?
பாடப் புத்தகங்களைக் கொண்டு பாடம் நடத்துகிற நடைமுறையை இத்திட்டத்தின் மூலம் கைவிட்டதால் படிக்கும் திறன், எழுத்துப்பயிற்சி, நூலறிவு, மனப்பாடப் பயிற்சி மாணவர் மத்தியில் இல்லாமல் போய்விட்டது. சென்னை மாநகராட்சியில் மட்டுமே இருந்து வந்த இந்தத் திட்டம், இப்போது தமிழகம் எங்கும் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் இப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து வருகிறது. இருக்கும் மாணவர்களையும் பெற்றோர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கி, இந்தத் திட்டத்தை அமல்படுத்தாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் ஏழை எளிய மாணவர்களுக்குப் புகலிடமாக இருந்துவரும் அரசு மற்றும் ஒன்றியப் பள்ளிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இப்படியொரு பாடமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று எந்தக் கல்விக்குழு பரிந்துரை செய்தது? இது நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு முடிவடைந்து விட்டது. இந்த ஓராண்டின் முடிவில் இதன் நிறைகுறைகளை ஆய்வு செய்து இரண்டாம் ஆண்டு தொடங்கியிருக்க வேண்டும். குறைபாடுகளைக் களையாமல் இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் பணியைக் கல்வித்துறை செய்து வருகிறது.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது எனப் பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். மாணவர் சேர்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது என்று ஆசிரியர்கள் கவலைப்படுகின்றனர். சமச்சீர் கல்விக்கு இது தடையாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர். இதனைத் தமிழகக் கல்வித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் இயக்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
முன்பே, "அரசுப் பள்ளிகளில் தரமில்லை' என்ற கருத்து பொதுமக்களிடம் இருக்கிறது. இதனைப் பயன்படுத்தியே பணம் பண்ணும் பள்ளிகள் புற்றீசல்கள் போல் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தப் புதிய கல்வி முறையில் தனியார் பள்ளிகள் காட்டில் மழை பெய்தது போல ஆகிவிட்டது. இதனால்தான் இந்தத் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தமிழகத் கல்வித்துறை மறைமுகமாகத் துணை போகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தச் "செயல்வழிக் கற்றல்' பற்றி "அனைவருக்கும் கல்வி'த் திட்ட இயக்ககம் இடைவிடாமல் விளம்பரம் செய்கிறது. இதற்குச் சில மாணவர்களும், சில ஆசிரியர்களும், சில அதிகாரிகளும் பயன்படுத்தப்படுகின்றனர். இவர்களில் விவரம் புரிந்தவர்களும் மேல் அதிகாரிகளுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறுவதில்லை. அவர்களைத் திருப்திப்படுத்துவதும், அதன் மூலம் பலனடைவதுமே அவர்கள் நோக்கம்.
"ஒரு தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது' என்றது கோத்தாரி கல்விக்குழு. இந்தியாவின் எதிர்காலம் என்பது மாணவர்களின் எதிர்காலம். அவர்களின் வாழ்க்கையோடு விளையாடக் கூடாது.
ஊதயை மு. வீரையன்

நன்றி : தினமணி

2 comments:

said...

வருத்தமான உண்மை..!
எந்த ஒரு தொலை நோக்கும் இல்லாமல் கல்வித் துறை இவ்வாறு அலட்சியமாக இருந்தால் என்னதான் நடக்கும் என்றே தெரியாது...
உடனடியாக கவனிக்கவேண்டியது இது...

said...

சிவாஜி வருகைக்கு நன்றி