Saturday, August 9, 2008

விஷத்தை இறக்க வேண்டும் அரசு!

சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் வசிப்பவர்கள் இப்போதெல்லாம் கவலையுடன் பேசுவது வீட்டுக் கடன் வட்டி வீதம் பற்றியும் வீட்டு வாடகையைப் பற்றியும்தான் என்றால் மிகையில்லை.
"எலி வளையானாலும் தனி வளை' வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்தமாக வீடு அல்லது அடுக்குமனை வாங்க வேண்டும் என்ற ஆசையில், கடன் வாங்கி வீடு கட்டியவர்கள் அனைவரும் இப்போது வலையில் சிக்கிய மான் போலத் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
அனைவருக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான குடியிருப்பு வசதிகளைச் செய்துதர வேண்டிய கட்டாயக் கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. ஆனால் வசதி படைத்தவர்களுக்குத்தான் இந்த வாழ்வுரிமை என்ற பாணியிலேயே இந்த அரசுகள் நடந்துகொள்கின்றன.
ஒரு புறம் ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே போய், வாங்கும் சக்தியை இழந்துகொண்டிருக்கிறது. மறுபுறம் மாதச் சம்பளக்காரர்கள் வாங்கிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி வீதம் விஷம்போல ஏறிக்கொண்டிருக்கிறது. இந்த இருமுனைத் தாக்குதல்களால் மன அமைதி இழந்து, இரவுகளில் தூக்கம் கெட்டு, உடல் நலனையும் கெடுத்துக் கொண்டிருப்பவர் எண்ணிக்கை பல லட்சம். "கடன்பட்டார் நெஞ்சம் போல' என்ற வாசகத்தில் "வீட்டுக்கடன்பட்டார் நெஞ்சம் போல' என்று இனி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டத் தரும் கடன்கள் மீது 7.5% வட்டிதான் வசூலித்தார்கள். இப்போது 11.5% ஆகிவிட்டது. சில அமைப்புகள் 12.25% கூட வசூலிக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கடனையும் அடைக்க முடியாமல், அந்த வீடுகளையும் விற்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
இந்த நிலை நீடித்தால் நடப்பு நிதியாண்டின் இறுதியில் வீட்டுக்கடன் இனத்தில் மட்டும் வாராக்கடனின் அளவு 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று "கிரிசில்' என்ற மதிப்பீட்டு அமைப்பு எச்சரிக்கிறது.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் வீட்டுக்கடன்கள் மீதான வட்டி குறைக்கப்பட்டதால், ஏராளமான பேர் சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்கிக்கொள்ள கடன் வாங்கத் தொடங்கினர். அப்போது வட்டி வீதமும் அவ்வப்போது குறைந்துகொண்டே வந்ததால், மாறுபடும் வட்டி வீதத்தையே 98% மனுதாரர்கள் தேர்வு செய்தனர்.
வீட்டுக் கடன் வாங்குவது என்று எடுத்த முடிவுக்காகவும், அதிலும் மாறுபடும் வட்டியைத் தேர்வு செய்ததற்காகவும் இப்போது அவர்கள் அனைவரும் தங்களுடைய விதியை நொந்துகொள்கின்றனர்.
நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டித்தர குடிசை மாற்று வாரியம் என்ற முன்னோடித் திட்டத்தை இந்தியாவுக்கே தந்தது தமிழகம். இப்போது தமிழக முதல்வர் என்ன காரணத்தாலோ நடுத்தர மக்களின் வேதனையை அறியாதவர் போல ஒதுங்கியிருக்கிறார்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில், இன்னும் குறிப்பாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள ஊர்களில் ஏழை, நடுத்தர மக்களுக்கு அடுக்குமனை வீடுகளை கட்டித்தர புதிய அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். அந்த வீடுகளில் வாடகை அடிப்படையில் மட்டும் மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும்.
அடி மனையும் வீடும் அரசுக்கே சொந்தமாக இருக்க வேண்டும். வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டப்படி நிர்ணயிக்கும் அடிப்படையிலேயே, சதுர அடிக்கு இத்தனை ரூபாய் என்று மிகக்குறைந்த வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், குறைந்த செலவில் தரமான பள்ளிக்கூடங்களில் மாணவர்களைச் சேர்க்க முடியாத நிலைமை, கட்டுபடியாகும் வாடகைக்குக்கூட வீடு கிடைக்காத அவலம் எல்லாம் மக்களை நரகத்தில் தள்ளி வருகின்றன. அடிப்படையான இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் இலவச கலர் டி.வி., சமையல் எரிவாயு, பிரஷர் குக்கர் என்ற இலவசங்களைத் தருவது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல.
நன்றி :தினமணி

2 comments:

Anonymous said...

மேலும் அதிக தமிழர்களை சென்றடைய உங்கள் பதிவுகளை http://www.tamilish.com இல் சமர்பிக்கவும்

said...

தமிழக அரசு பொறுப்பற்ற வாக்குறுதிகளை வாரி வழங்கி
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்திருக்கும் அரசு.
அவர்களிடம் பொறுப்பான சேவையை எதிர் பார்ப்பது
அறிவிலித்தனம். மக்கள் எப்போது பொறுப்புடன்
செயல் படுகிறார்களோ அப்போது தான் அவர்களுக்கு
விடிவு காலம். அவர்களின் தவறுகளுக்கு அவர்களேதான்
பொறுப்பேற்க வேண்டும்.

நடுத்தர மக்களின் இந்த பரிதாப நிலையை பயன் படுத்திக்
கொண்டு இன்றைய எதிர்க் கட்சிகள் வீட்டுக் கடனை ரத்து
செய்கிறேன், வட்டி விகிதத்தை குறைக்கிறேன் என்று அடுத்த
தேர்தலில் ஏமாற்ற முயல்வது நிச்சயம். மக்களும் ஏமாந்து
போவது நிச்சயம்.