Monday, August 11, 2008

கம்ப்யூட்டருக்குள் ஒரு குட்டிச் சாத்தான்

சமீபத்திய குஜராத் குண்டுகளில் சில குண்டுகள் வெடித்தன, சில பிசுபிசுத்தன. ஆனால் சத்தமே இல்லாமல் பலமாக வெடித்த குண்டு ஒன்றைச் சிலர்தான் கவனித்தார்கள். அதுதான் இ மெயில் குண்டு! திரியில் நெருப்பு வைத்த கையோடு தீவிரவாதிகள் ஒரு மின் அஞ்சல் அனுப்பி ""பார்த்தாயா எங்கள் சாதனையை'' என்று கொக்கரித்தார்கள். ஒரு மின் அஞ்சல் எந்த முகவரியிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிப்பது சுலபம்.
எனவே போலீசார் எல்லா சைரன்களையும் ஒலித்துக் கொண்டு விரைந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட வீட்டில் போய்ப் பார்த்தால் அப்பாவி அமெரிக்கர் ஒருவர் திருதிருவென்று விழித்துக் கொண்டு நிற்கிறார். அவருடைய கம்ப்யூட்டரை அல்லது நெட் இணைப்பைப் பயன்படுத்தி வேறு யாரோ மெயில் அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும் அவரிடம் தீவிர விசாரணை செய்து லேப்டாப்பைப் பிடுங்கி வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலெல்லாம் உருப்படியாக எதுவும் சிக்குவது சந்தேகம்தான்.

கணிப் பொறி கிரிமினல்களால் நம்முடைய கம்ப்யூட்டரை உபயோகித்து நமக்குத் தெரியாமலே என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்; மெயில் அனுப்புவது உள்பட. கம்ப்யூட்டர் வைரஸ்கள் பற்றி எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். இன்னும் கணினிப் புழு, ட்ரோஜன் குதிரை என்று பல வடிவங்களில் போக்கிரி மென்பொருட்கள் வருகின்றன. இவை எழுதப்படும் விதத்தில்தான் வித்தியாசமே தவிர, செய்யும் வேலை ஒன்றுதான்: நாசவேலை! உதாரணமாக, ஈஞந தாக்குதல் என்று இருக்கிறது.
தங்களுக்கு வேண்டாதவர்களின் வலை மனைக்கு சரமாரியாக ஆயிரக்கணக்கான கோரிக்கைகளை அனுப்பித் தாக்கினால் அவர்களுடைய சர்வர் எனப்படும் தாய்க் கம்ப்யூட்டர் சமாளிக்க முடியாமல் மடங்கி விழுந்துவிடும். ஏகப்பட்ட குழந்தைகள் பெற்றுவிட்ட தாயாரை அத்தனையும் ஒரே சமயத்தில் "சாப்பாடு, பாத்ரூம், குச்சி மிட்டாய்' என்று பிடுங்கி எடுத்தால் அவள் ஆயாசப்பட்டுப் போவதில்லையா, அதுபோல்தான்.
பாட்கள் ( bots) என்பவை மென்பொருளால் செய்த தானியங்கி ரோபாட்கள். குட்டிச் சாத்தான் மாதிரி நம் கம்ப்யூட்டருக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, எங்கோ தூரத்திலிருக்கும் தன் எஜமானனின் ஏவல்களை நிறைவேற்றும். அப்படியே மலையாள மாந்திரீகம்தான்! சில பாட்கள் நம் கம்ப்யூட்டரைக் குடாய்ந்து பார்த்து ஏதாவது பாஸ் வேர்டு, கிரெடிட் கார்டு எண் அகப்படுகிறதா என்று தேடும். வேறு சில, நம் மின் அஞ்சல் முகவரிப் புத்தகத்தை அனுமதியில்லாமல் திறந்து பார்த்து அவர்களுக்கெல்லாம் ஏதாவது நய வஞ்சக மெயில் அனுப்பும்.
பாட்களை ஏவி விடும் திருடர்கள், பல்கலைக் கழகங்களிலும் அசட்டு அரசாங்க அலுவலகங்களிலும் நூற்றுக்கணக்கான கணினிகள் இருப்பதால் அவற்றைக் குறிவைத்துத் தாக்குவார்கள். பாட் ஒன்று ஒரு தடவை உள்ளே நுழைந்துவிட்டால் போதும்; தானாகவே அத்தனை கம்ப்யூட்டரிலும் தன்னுடைய ஜெராக்ஸ் காப்பிகளை அனுப்பி ஆக்கிரமித்துவிடும். ஹாலந்து நாட்டில் பொல்லாத பாட் ஒன்று ஒரே நேரத்தில் பதினைந்து லட்சம் கம்ப்யூட்டர்களைப் பிடித்துக் கொண்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்.
பாட்களை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள்? நிறைய அக்கிரமங்கள். ""வயாகரா மாத்திரையை வாங்குங்கள், வாங்குங்கள்'' என்று வலியுறுத்தும் விளம்பரங்கள் அடிக்கடி உங்கள் மின் அஞ்சல் பெட்டியை நிரப்புவதைப் பார்த்து நொந்திருப்பீர்கள். இந்த மாதிரி ஹோல்சேலில் அனுப்பப்படும் அஞ்சல்கள் அநேகமாக பாட்களின் வேலையாக இருக்கலாம். பாட்டை ஏவிவிட்ட அந்த... (ஸாரி... கதிரின் கௌரவமான வாசக சபை முன் வைக்கலாகாத கெட்ட வார்த்தையை நானே எடிட் செய்து விடுகிறேன்) , தானே இத்தனை மெயிலும் அனுப்பினால் செலவாகும் என்பதால் "ஊரான் வீட்டு நெய்யே' என்று உங்கள் கம்ப்யூட்டரை உபயோகித்துக் கொள்கிறான். வெடிகுண்டு புரளிகள், ஜார்ஜ் புஷ்ஷுக்கு கொலை மிரட்டல் என்பது போன்ற சட்ட விரோத மெயில்களுக்கும் "பாட்'கள் மூலம் அப்பாவிகளின் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்திக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. நம் கம்ப்யூட்டரிலிருந்து கெட்ட மெயில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால் சந்தேக ஊசி முதலில் நம்மைத்தான் காட்டும். "நான் அதை அனுப்பவே இல்லை' என்று நிரூபித்து வெளியே வருவதற்குள் எத்தனை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்குமோ.
திருடர்களாலும் தீவிரவாதிகளாலும் நம் கம்ப்யூட்டர் ஹைஜாக் செய்யப்படாமல் காப்பாற்றுவது எப்படி? முதலாவதாக, நமக்கு வேண்டிய எல்லா மென் பொருள்களையும் முறையாகக் காசு கொடுத்து வாங்குவதே உத்தமம். (ஆம். விண்டோஸ் உட்பட) திருட்டுக் கூடாது என்று மகாத்மா காந்தி அறிவுரை கூறிச் சென்றது ஒரு புறமிருக்க, திருட்டு சாப்ட்வேரில்தான் வைரஸ்கள் வசிப்பதற்கு வாய்ப்பு அதிகம். கம்ப்யூட்டரை லோடு செய்யும் போது ஃபயர் வால் எனப்படும் தீச்சுவர்களை எழுப்பிப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு பட்டனை அமுக்க வேண்டியதுதான். அந்தப் பட்டன் எங்கே என்று கண்டுபிடிப்பதுதான் பெரும்பாடு.

கம்ப்யூட்டரையும் நாய்க்குட்டி போல் அவ்வப்போது அதன் வெட்னரி டாக்டரிடம் காட்டித் தடுப்பூசி போட்டு வர வேண்டும். நார்ட்டன், மக்கஃபே போன்ற வைரஸ் தடுப்பு மென்பொருள்கள் எப்போதும் கைவசம் இருக்கட்டும். உங்கள் கம்ப்யூட்டர் வழக்கத்தைவிட மசமசவென்று வேலை செய்தாலோ, திடீர் திடீரென்று காரணமில்லாமல் மண்டையைப் போட்டாலோ வைரஸ் தாக்குதல் காரணமாக இருக்கலாம். சில சமயம் கீ போர்டு, மவுஸ் எதற்கும் பதில் இருக்காது. பின்னணியில் வைரஸ் உக்கிரமாக வேலை செய்யும் போது மொத்த கம்ப்யூட்டரும் எதிர்பாராதவிதமாக நமீதாவை நேரில் கண்ட ரசிகன் போல் செயலிழந்து திகைத்து நின்றுவிடும். கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டாலும் உடனே ஸ்கான் செய்ய வேண்டும்.

இப்போதெல்லாம் பாட்களைக் கண்டுபிடித்து அழிக்கும் மென்பொருள் ஒன்று ஆண்டிபாட் என்று தனியாகவே கிடைக்கிறது. நியாயமாகப் பார்த்தால் அவர்கள் ஆண்ட்டி வைரஸுடன் இதையும்தான் சேர்த்துத் தரவேண்டும். ஆனால் இட்லிக்கு எக்ஸ்ட்ரா சாம்பார் கேட்டால் அதற்குச் சிலர் தனியாகக் காசு பிடுங்குவதுபோல் பாட் எதிர்ப்பு மென்பொருள்களையும் உபரியாக விற்கிறார்கள். இவர்களெல்லாம் கூடிய விரைவில் தொழில் போட்டி தாங்காமல் எல்லாவற்றையும் இலவசமாகவே கொடுத்துவிட்டு அண்டர்வேருடன் ஓடக் கடவதாக.
வைஃபை ( Wi-fi) என்ற ஒயர்லெஸ் தொழில் நுட்பத்தில் கம்பியில்லாமல் கணினியை நெட்டில் இணைத்துக் கொள்ள முடியும். மடிக் கணினியை எடுத்துக் கொண்டு வீடு பூரா சுற்றலாம், தோட்டத்தில் மாமரத்தடியில் உட்கார்ந்து மெயில் அனுப்பலாம். சுகமான விடுதலை! ஆனால் இதன் ரேடியோ அலைகள் நூறு மீட்டருக்கு மேல் பரவுவதால் பக்கத்து வீட்டுக்காரர்களும் உங்கள் செலவில் மெயில் அனுப்ப முடியும். நம் வீட்டு வாசலில் ஒரு ஓரமாக காரைப் பார்க் செய்துவிட்டு அதற்குள் உட்கார்ந்து கொண்டு தீவிரவாதிகளும் மெயில் அனுப்பலாம். நாளைக்கு ஏதாவது வில்லங்கம் என்றால் முதல் விலங்கு நமக்குத்தான்.
உங்களிடம் வைஃபை மோடம் இருந்தால் அதை ஜன்னல் ஓரமாக வைக்காதீர்கள். வீட்டின் நடுவே பொருத்திக் கொண்டால்தான் சற்று பாதுகாப்பு. ரேடியோ அலைகளின் சக்தியைக் குறைத்துத் தேவையான அளவுக்கு மட்டுமே வைத்துக் கொள்ளவும். இருப்பதிலேயே நீளமான பாஸ் வேர்டு போட்டு வையுங்கள். எங்கள் கட்டிடத்திலேயே பல அப்பாவிகள், பாஸ் வேர்ட் இல்லாமலேயே வைஃபை உபயோகிப்பது கண்டு பதறி ஓடிப் போய் எச்சரித்திருக்கிறேன். இன்னும் ஈஏஇடயை அணைத்து ரடஅ வை ஏற்ற வேண்டும் என்றெல்லாம் சொல்ல முற்பட்டால் அடிக்க வருவீர்கள். அக்கம்பக்கத்தில் மோட்டார் பைக் வைத்திருக்கும் இளைஞர்களிடம் கேட்டால் சொல்லித் தருவார்கள். நல்லவேளையாக இதெல்லாம் ஒருமுறை செய்தால் போதும்.
குண்டு வெடிப்பு மெயில் விவகாரத்தில் சிக்கியவர் அமெரிக்கராக இருந்ததால் அடி வாங்காமல் தப்பித்தார். நீங்களும் நானும் மாட்டியிருந்தால் லத்திக் குச்சியில் மிளகாய்ப் பொடியைத் தடவிக் கொண்டுதான் விசாரணையையே துவக்கியிருப்பார்கள். எனவே சற்றே கவனமாக நம் கம்ப்யூட்டரைப் பாதுகாப்போம்.

ராமன்ராஜா

நன்றி : தினமணி

2 comments:

said...

அருமையான கட்டுரை. எழுதியவர் பெயரையும் போடலாமே?
சில ஆங்கில சொற்களின் எழுத்துக்கள் (D.O.S - denial of service போல) தமிழில் வந்து விட்டது. அதை ஆங்கிலத்தில் மாற்றிவிடுங்கள்.

said...

Indian வருகைக்கு நன்றி
குறைகள் சரி செய்யப்பட்டது