Monday, August 11, 2008

வெறும் கனவாகிவிடக்கூடாது!

பாகிஸ்தானின் ஆளும் கூட்டணிக் கட்சிகள், அதிபர் பர்வீஸ் முஷாரபை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்று முடிவெடுத்திருக்கின்றன. ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆஸிப் அலி ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் நவாஸ் ஷெரீபும் ஒருவழியாக அதிபர் முஷாரபுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது என்பதிலும், முஷாரபால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்பதிலும் கைகோர்த்துச் செயல்பட இருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.
சொல்லப்போனால், அதிபர் முஷாரபை பதவி விலகச் செய்ய, தகுந்த காரணங்கள் பல இருக்கின்றன. தனது ஆதரவாளர்களின் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தபோதே அதிபர் முஷாரப் கெளரவமாகப் பதவி விலகி இருக்க வேண்டும். பாகிஸ்தான் அரசியல் சட்டப் பிரிவு 56ன்படி பிப்ரவரி மாதம் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்தபோது, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் தொடக்க உரை நிகழ்த்தி இருக்க வேண்டும். அதுவும் அவர் செய்யவில்லை.
அரசியல் சட்டத்தைத் திருத்தி இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, உச்ச நீதிமன்றத்துக்கு முஷாரப் ஓர் உத்தரவாதம் அளித்திருந்தார். அதன்படி, தேர்தல் நடத்தப்பட்டு முறையாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற மற்றும் பிராந்திய சட்டப்பேரவைகளின் அங்கீகாரத்தை அவர் பெற்றாக வேண்டும். அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து பார்த்தார் அதிபர் முஷாரப்.
ராணுவ ஆட்சியில் மக்கள் நலம் பேணப்படவில்லை என்பதற்குக் கடந்த எட்டாண்டு கால அதிபர் முஷாரபின் ஆட்சிதான் உதாரணம். பொருளாதாரம் முற்றிலுமாகச் சீர்குலைந்தது என்பது மட்டுமல்ல, மதத் தீவிரவாதம் கட்டுக்கடங்காத பயங்கரவாதமாக மாறியது, அதிபர் பர்வீஸ் முஷாரபின் ஆட்சியில்தான். மக்களின் தீர்ப்பு முஷாரபுக்கு எதிராக அமைந்ததில் யாருக்குமே ஆச்சரியம் ஏற்படாதது அதனால்தான்.
அதிபர் முஷாரபை பதவி இறக்குவதற்கு, முதல்கட்டமாக அத்தனை பிராந்திய சட்டப்பேரவைகளும், உச்ச நீதிமன்றத்தில் அவர் அளித்திருந்த வாக்குறுதிப்படி உடனடியாக நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற இருக்கின்றன. இந்த வாக்குகளின் அடிப்படையில் அதிபர் முஷாரபின் பதவி நீக்கத்துக்கு நாடாளுமன்றத்தில் கட்சிகள் எப்படி அணிசேரும் என்பது தெளிவாகிவிடும்.
அதிபர் முஷாரபை எப்படியும் பதவி நீக்கம் செய்துவிட முடியும் என்றும், தாங்கள் வெற்றிபெறப் போதுமான வாக்குகள் இருப்பதாகவும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் நம்புகின்றன. நாடாளுமன்றத்தில் இரு அரசியல் அணிகளுக்கும் சேர்த்து உள்ள மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 440. இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், அதாவது 295 வாக்குகள், ஆதரவாக இருந்தால் மட்டும்தான் ஆளும் கூட்டணியால் அதிபர் முஷாரபை பதவி நீக்கம் செய்ய முடியும். முஷாரபின் ஆதரவுக் கட்சியான கயூம் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீகிலிருந்து கணிசமான பலர் தங்களது அணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று ஆளும் கூட்டணியினர் நம்புகிறார்கள்.
அதிபர் முஷாரபை பதவி நீக்கம் செய்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. நாடாளுமன்றத்தைக் கலைத்து, அவசரநிலைச் சட்டத்தைப் பிரகடனம் செய்யும் அதிகாரம் இப்போதும் அதிபர் முஷாரபிடம் இருக்கிறது. ஒரு காபந்து அரசை நியமித்து அதிகாரத்தில் தானே தொடர அதிபர் முஷாரப் விரும்ப மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்யப் போகிறது என்பது அடுத்த கேள்வி. இத்தனை காலமும், சர்வ வல்லமையுடனும், அளவில்லாத அதிகாரத்துடனும் வலம் வந்த ராணுவம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அடிபணிந்து நடக்குமா என்பது சந்தேகம்தான். தங்களது ராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்வதை ராணுவம் வேடிக்கை பார்க்காது என்று நம்பலாம். யார் நம்புகிறார்களோ இல்லையோ, நிச்சயமாக அதிபர் முஷாரப் ராணுவத்தை நம்புகிறார்.
ஐ.எஸ்.ஐ. எனப்படும் பாகிஸ்தானின் உளவுத்துறைத் தலைவராக இருப்பவர் அதிபர் முஷாரபின் உறவினர். அதிபர் முஷாரபை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் தோல்வி அடைய நிச்சயமாக ஐ.எஸ்.ஐ. ஆவன செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியே அது சாத்தியமில்லாவிட்டால், உள்நாட்டுக் கலகத்தையோ, இந்திய எல்லையில் பிரச்னையையோ ஏற்படுத்திப் பதவி நீக்கத்தைத் தடுக்க ஐ.எஸ்.ஐ. முனையும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
பாகிஸ்தானில் மக்களாட்சி மலர வேண்டும். அமைதி நிலவ வேண்டும். இந்திய பாகிஸ்தான் உறவு வலுப்பட வேண்டும். தெற்காசிய நாடுகளிடையே ஒற்றுமை வலுப்பட வேண்டும். இவையெல்லாம் நமது பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவைகள். அதற்கு முதல்கட்டமாக, அதிபர் முஷாரப் பதவி விலக வேண்டும். அது நடக்காத வரையில், மேலே சொன்ன அனைத்தும் வெறும் பகல் கனவுகளாகத்தான் இருக்கும்!
நன்றி : தினமணி

0 comments: