Monday, August 11, 2008

உலகமயம்உண்மை முகம்!

தோஹாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு உண்மையில் யார் காரணம்?
வளர்ச்சியடைந்த நாடுகள் மானிய விஷயத்தில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தன. விவசாயம், உரம் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கக் கூடாது என வளரும் நாடுகளை, வளர்ச்சியடைந்த நாடுகள் வலியுறுத்தின. இதனால்தான் பேச்சு தோல்வியடைந்தது என்று இந்தியா சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் கூறுகிறார்.
மாறாக, தோஹா பேச்சு தோல்விக்கு இந்தியாவும், சீனாவுமே காரணம் என்று அமெரிக்க வர்த்தக சபை குற்றம் சாட்டியுள்ளது. வளர்ந்த நாடுகள் தங்கள் சந்தைப் பொருளாதாரத்தில் மேலும் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று இந்தியாவும் சீனாவும் கோருகின்றன. ஆனால், இந்தியாவும் மற்ற வளரும் நாடுகளும் தங்கள் உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றன என்பதுதான் அமெரிக்க வர்த்தக சபையின் குற்றச்சாட்டு.
உண்மை நிலை என்ன? வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது விவசாயிகளுக்கு மானியத்துக்குப் பதிலாக ஊக்கத்தொகை (இன்சென்டிவ்) அளிக்கின்றன. ஊக்கத்தொகை என்ற பெயரில் மிகப்பெரிய தொகைகள் வழங்கப்படுகின்றன.
இப்படி உற்பத்தியான பொருள்களை இந்தியச் சந்தையில் அனுமதிக்கும்முன் இந்திய விவசாயிகளைக் காப்பதற்கு உரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தான் வர்த்தக அமைச்சர் கமல்நாத் உலக வர்த்தக பேச்சுவார்த்தையில் கூறியுள்ளார். இதே நிலையைத் தான் சீனாவும் மேற்கொண்டது.
கிட்டத்தட்ட 40 நாடுகளைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், இந்தியாவுக்காக மட்டுமல்லாமல், 100 வளரும் நாடுகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியதாக இந்திய வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் இங்கே பளிச்சிடுகிறது.
இங்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டுவது பொருந்தும்.
இதே அமெரிக்காவும் கடந்த காலத்தில் ஒரு வளரும் நாடாகத்தான் இருந்தது. அப்போது அமெரிக்கா சர்வதேச வர்த்தக விஷயத்தில் எடுத்த நிலைப்பாடு என்ன?
18வது நூற்றாண்டில் இங்கிலாந்து மிகவும் வளர்ச்சியடைந்த நாடு. அமெரிக்கா அப்போது வளரும் நாடு. அதுசமயம் ஆடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்கார்டோ போன்ற பொருளாதார வல்லுநர்கள், நாடுகளுக்கிடையே, ""ப்ரீ டிரேட்'' என்னும் ""தடையில்லா வர்த்தகத்தை'' முன்னிலைப்படுத்தினார்கள். அமெரிக்கா அதனை ஏற்கவில்லை.
""பணக்கார நாடுகள் மேலும் பணக்காரர்கள் ஆவது எப்படி? ஏழை நாடுகள் ஏழை நாடுகளாகவே தொடர்வது ஏன்?'' என்னும் நூலில் அதன் ஆசிரியர் எரிக் ரிநெர்ட் என்ன சொல்லுகிறார் தெரியுமோ? 1820களில் அமெரிக்கர்களின் கோஷம் இதுதான்: ""ஆங்கிலேயர்கள் சொல்வதைச் செய்யாதே! அவர்கள் செய்வதையே நீங்களும் செய்யுங்கள்!''
ஆக, இப்போது இந்தியர்கள் கோஷம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
""அமெரிக்கர்கள் சொல்வதைச் செய்ய வேண்டாம்! அவர்கள் செய்வதையே நாமும் செய்வோமாக!''
தோஹா பேச்சுவார்த்தை 2001ம் ஆண்டு தொடங்கியது. அதாவது, அமெரிக்காவில் பயங்கரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தாக்கினார்களே, அதற்குப் பின்னர் தான் இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. உலகப் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கு இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம், தோஹா பேச்சுவார்த்தைதான், சர்வதேச வர்த்தகம் தொடர்பான, பன்முக வளர்ச்சி நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி எனலாம்.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், ஏழை நாடுகள் வளர்ந்த நாடுகளுடன் உலக வர்த்தகச் சந்தையில் சமவாய்ப்பு பெற இயலும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த ஏழு ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னரும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மாறாக, ஏழை நாடுகளின் வர்த்தக மேம்பாடு தொடர்பான இரண்டு முக்கியப் பிரச்னைகள், பேச்சுவார்த்தைகளில் பின்னுக்குத்தான் தள்ளப்பட்டன. அவை விவசாயம் சார்ந்த சந்தை மற்றும் விவசாயம் சாராத சந்தையில் பங்கேற்றல். இவ்விரண்டு முக்கியப் பிரச்னைகளும் ஆரம்பம் முதல் இன்று வரை தீர்க்கப்படாத பிரச்னைகளாகவே தொடர்கின்றன.
இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகள் அப்படி என்ன பெரிதாகக் கேட்கின்றன? தங்கள் நாடுகளில் ஏழ்மையில் வாடும் விவசாயிகளின் வயிற்றுப்பிழைப்புக்கான வருவாயை உறுதி செய்ய வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கை.
ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் கோருவது என்ன? உலக வர்த்தகத்தில் வணிக ரீதியிலான அதிகபட்ச லாபம்!
வளரும் நாடுகள் விவசாயத்துக்கு வழங்கும் மானியத்தைக் குறைக்க வேண்டும் என வளர்ந்த நாடுகள் வலியுறுத்துகின்றன. இதற்காக வளர்ந்த நாடுகள் வகுத்துள்ள சிறப்புப் பொருளாதாரப் பாதுகாப்பு உத்திகள், வளரும் நாடுகளுக்குச் சிறிதும் ஏற்புடையதாக இல்லை.
இது இந்திய விவசாயிகள் மட்டுமல்லாமல் 100க்கும் அதிகமான வளரும் நாடுகளைப் பாதிக்கும் என்பதாலேயே, இதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை.
அதேசமயம், வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து, இறக்குமதி கடந்த மூன்று ஆண்டுகளோடு ஒப்பிட்டு, அது 40 சதவீத அளவுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என்று வளரும் நாடுகள் வலியுறுத்தின. வளரும் நாடுகளில் விவசாயிகளைக் காப்பாற்றும் நோக்கில்தான் இந்த இறக்குமதிக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டது. இதே நடைமுறையைத்தான் 1995ம் ஆண்டு மேற்கொண்ட உருகுவே ஒப்பந்தத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் பின்பற்றின. ஆனால் இந்தப் பரிந்துரையை வளர்ந்த நாடுகள் இப்போது ஏற்க மறுக்கின்றன. இது என்ன நியாயமோ?
ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே அடங்கிய சிறிய குழுவில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்ததே தோல்விக்கான காரணமாக இருக்கக்கூடும் என்று சில நாடுகள் கருதுகின்றன. மேலும் பல நாடுகள் அடங்கிய குழுவில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று இருந்தால் ஒருவேளை முடிவு வித்தியாசமாக இருந்திருக்கலாம் என்பது அவர்கள் கருத்து.
வளர்ந்த நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதுபோலவே வளரும் நாடுகளுக்கிடையேயும் கருத்து வேறுபாடுகள் இருப்பது துரதிர்ஷ்டவசமானதே. இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக அறிவிக்க வேண்டாம் என்றும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
மேற்கத்திய நாடுகள் தத்தம் வர்த்தக நன்மைகளையும் உள்நாட்டுத் தொழில்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இன்னும் சில மாதங்களில் புதிய அதிபர் பொறுப்பேற்க உள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், அடுத்த சுற்றுப்பேச்சு வார்த்தை மிக விரைவில் நடைபெறுமா என்று சொல்வதற்கில்லை.
ஆனால், ஒரு விஷயத்தை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போது அரங்கேறியுள்ள உலகமயம் அனைத்து நாடுகளுக்கும் சம வாய்ப்பு அளிப்பதாக இல்லை. எனவே இந்தியா போன்ற வளரும் நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து கேட்பது யாசகம் அல்ல. சமநீதியே ஆகும்.
உலகமயமாக்கல் போர்வையில், வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவும், வளரும் நாடுகளுக்குப் பாதகமாகவும் உருவாகும் போக்குகள் நிச்சயமாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.
எஸ். கோபாலகிருஷ்ணன்
(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).
நன்றி : தினமணி

0 comments: