Tuesday, August 12, 2008

அன்றும் இன்றும்

அண்மையில் ஒரு வார இதழில் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர், நடத்துநர், தரகர், பெட்டிக் கடைக்காரர் எனப் பல கீழ்நிலைச் சாமானியர்கள், அரசியல் கட்சிகளில் சேர்ந்து இன்று பல கோடீஸ்வரர்களாகப் பரிணமித்துவிட்ட வரலாறு விவரிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் எல்லாரிடமும் தென்பட்ட ஒரு பொது அம்சம், அவர்கள் பல கல்விச்சாலைகளின் உரிமையாளர்களாக இருப்பது. அதைப் படித்ததும் என் மனம் பின்னோக்கிப் பயணித்தது.
1970களில் தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன், பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கப்பட்ட விதத்தை ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதினார்.
அதற்காக அவர் பல மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளை ஆராய்ந்தார். அவருடன் தஞ்சை மாவட்டத்திலுள்ள சில கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் சென்று பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
கல்லூரிகளில் புகுமுக வகுப்பு இருந்தபோது, அறிவியல் செய்முறை வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு மூன்று ஆசிரியர்களும், இரண்டு அலுவலக உதவியாளர்களும் பணியாற்றினர். ஆய்வகங்கள் விசாலமாயும், பெரிய பெரிய மேஜைகளுடனும் இருந்தன.
ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் 80 மாணவர்களுக்கு ஒரு சிறிய ஆய்வகமும், ஒரே ஓர் ஆசிரியர் மட்டுமே இருந்தனர். பல பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் இல்லை. ஒவ்வொரு சோதனைக்கும் ஒரே ஒரு உபகரணம் மட்டுமே இருந்தது. ஆசிரியர் சோதனையைச் செய்து காட்டுவார். மாணவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். கைடு நூல்களைப் பார்த்து ரிக்கார்டுகளை எழுதுவார்கள்.
ஏதாவது கருவி காணாமல் போனாலும், பழுதுபட்டாலும், உடைந்தாலும் அதற்கு ஆசிரியர் தான் ஈடுசெய்ய வேண்டியிருந்தது. அதனால், பல ஆசிரியர்கள், கருவிகளை கையால் தொட்டுப் பார்க்கக்கூட மாணவர்களை அனுமதிக்கவில்லை.
சிவராமன் கட்டுரைகள் அரசாங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அப்போது ஆண்ட கட்சியின் முக்கியபுள்ளி சிவராமனைப் பார்த்து, ""உங்களால் எங்கள் தூக்கம் கெட்டுவிட்டது'' என்றுகூடப் புலம்பினார்.
கல்லூரிகளிலேயே பிளஸ் 2 வகுப்புகளை வைத்திருந்தால் இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது என்று சிவராமன் அவரிடம் கூறினார். கல்வி அமைச்சர், பள்ளி ஆசிரியராக இருந்தவர். அதனால், அவர் பள்ளிகளில் தான் பிளஸ் 2 வகுப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்ததாக அந்த முக்கியபுள்ளி அலுத்துக் கொண்டார்.
போதனை மற்றும் உள் கட்டமைப்புக் குறைபாடுகள் காரணமாக மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியுற்று மனமுடைந்து போகாமலிருப்பதற்காக தேர்வுத்தாள்களைத் திருத்துகிறவர்கள் கொஞ்சம் தாராளமாக இருக்குமாறு ஆலோசனை கூறப்படிருப்பதாக அந்த முக்கியபுள்ளி கூறினார்.
கிள்ளிக் கிள்ளி மதிப்பெண் போடும் தமிழாசிரியர்கள்கூட அள்ளி அள்ளி மதிப்பெண்களை வாரி வழங்கத் தொடங்கியதால் தமிழிலும் ஆங்கிலத்திலும்கூட 100 க்கு 100 மதிப்பெண்கள் தரும் போக்கு இன்று வரை நீடிக்கிறது.
அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகளைக் கட்டவும், உபகரணங்களை வாங்கவும் அரசு நிறையப் பணம் ஒதுக்கியிருப்பதாக அந்த முக்கியபுள்ளி சொன்னார்.
தனியார் பள்ளிகள் பழைய மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றை அமைத்து, நன்கொடைகள் வசூலிக்க ஆலோசனை கூறப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
அதைக் கேட்டதும், சிவராமன் அதிர்ச்சியடைந்தார். நன்கொடை என்ற பெயரில் கட்டாய நிதிவசூல் நடக்கலாம் என்று அவர் எச்சரித்தார். ஆனால், அந்த முக்கியபுள்ளி, அப்படியெல்லாம் நடக்காமல் அரசு கண்காணிக்கும் என்று ஜம்பமாகச் சொன்னார். அதைச் சிவராமன் ஏற்காமல் கல்வி ஒரு வியாபாரப் பொருளாக மாறுவதற்கே அரசு வழிகோலி விட்டதாகக் கருத்துத் தெரிவித்தார்.
அவர் அஞ்சியபடியே தனியார் பள்ளிகள், மாணவர்களை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கக்கூட நன்கொடை என்ற பெயரில் பணம் குவிப்பதை இன்று நாம் காண்கிறோம்.
அப்படி மாணவர்களிடம் பிடுங்கிய பணத்தின் மூலம் கட்டப்பட்ட கட்டடங்கள் கல்வி முதலாளிகளின் தனிச் சொத்தாக ஆகி இன்று பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளாய் ஆகி இருக்கின்றன.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் வேந்தர், இணை வேந்தர், துணை வேந்தர் போன்ற பதவிகளில் அப்பா, அம்மா, பிள்ளை, பேரன் ஆகியோரே அமர்கிறார்கள்.
அவர்களுடைய போக்குவரத்து, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றுக்குக் கல்விச்சாலை பணமே செலவழிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், அரசுக் கல்விச் சாலைகள் அவல நிலையிலுள்ளன. கிராமப்புறப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கூரையில்லை, கரும்பலகை இல்லை, சாக்பீஸ் இல்லை, கழிப்பறை இல்லை, ஆசிரியர் இல்லை என இல்லைப்பட்டியல் நீள்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன் நான் பணியாற்றிய ஒரு கிராமப்புறக் கல்லூரியில் பேராசிரியர்கள் கூட வேலியோரம் போய் மரங்களுக்குப் பின்னால் நின்று சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது. அரசுத்துறையில் கட்டடங்களும், ஆய்வகங்களும், சாதனங்களும், வசதிகளும் கிடைக்கப் பல ஆண்டுகள் ஆகும்.
மாணவர்களின் எண்ணிக்கை வெகுவேகமாகப் பெருகும்போது, அதற்கேற்ற வேகத்தில் ஆசிரியர்களின் நியமனமும் நடைபெறாது.
நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மிக விரைவாகக் கட்டடங்களையும் மற்ற வசதிகளையும் பெருக்கிக் கொண்டு, அதைக் காட்டியே கல்விக் கட்டணங்களை அதிகமாக்கிச் சிறப்பு நன்கொடைகளையும் வசூலிக்கின்றன.
நிதி வசதியில்லாதவர்கள் அரசுக் கல்வி நிலையங்களில் மட்டுமே சேர முடியும்.
ஆடம்பர ஹோட்டல்களைப் போலவே ஐந்து நட்சத்திரக் கல்வி நிலையங்கள் உருவாகியுள்ளன. காசுக்கேற்ற தோசை என்பதைப்போல அவற்றில் தரமான கல்வி வழங்கப்பட்டு, படிப்பு முடிவதற்கு முன்பே மாணவர்களுக்கு வேலைகூட பெற்றுத் தரப்பட்டு விடுகிறது.
கல்லூரி நிர்வாகிகள் ஒரு சில சிறந்த மாணவர்களுக்கு இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ கல்வியளித்துக் கல்வி வள்ளல்கள் என்ற விருதைப் பெற்று விடுகின்றனர்.
கே.என்.ராமச்சந்திரன்
நன்றி : தினமணி

0 comments: