Tuesday, August 12, 2008

"உளி' இல்லாத நவீன சிற்பிகள்!

மாதா, பிதா, குரு தெய்வம்' என்பது முதுமொழி. பெற்றோருக்கு அடுத்து பிள்ளைகள் வணங்கும் தெய்வமாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. எனவேதான் "எழுத்தறிவித்தவன் இறைவன்' என நமது முன்னோர் முன்மொழிந்தனர்.
ஆனால் தற்போது குழந்தைகளும் பெற்றோரும் ஆசிரியர்களை நண்பர்களாகக் கூட பார்ப்பது இல்லை என்பதே துரதிருஷ்டமான உண்மை.
பெருகிவிட்ட தனியார் பள்ளிகளால் வர்த்தகமாகிவிட்ட கல்வி; எதார்த்தத்தை இழந்துவிட்ட பள்ளிக்கூடச் சூழல்; ஊதியத்தை மையமாக்கி உழைக்கும் ஆசிரியர் என்ற சூழல்களே கற்பிப்போர் மீதான சமூகப் பார்வையை மாற்றிவிட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மாணவ, மாணவியருக்கு ஏற்படும் தனிப்பட்ட பாதிப்புக்கெல்லாம் ஆசிரியர்களது முரட்டுத்தனமான அணுகுமுறையே காரணம் என்பது போல அதிக அளவில் செய்திகள் வெளியாகின்றன. இதனால் இப்போது கற்பித்தல் என்பது "கம்பி மீது நடக்கும் வித்தை' போலாகிவிட்டது என ஆதங்கப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.
பள்ளிக்கூடம் என்பது வெறும் மொழி, கருத்துகளை மட்டும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் கூடமல்ல. சமூகத்தில் மேம்பட்ட நாகரிக மனிதனை உருவாக்கும் "பட்டறை' என்பது அறிஞர்களின் கருத்து.
எனவே "அறுக்கி வளர்க்காத மரம் உத்தரத்துக்கு ஆகாது; அடித்து வளர்க்காத பிள்ளை வாழ்க்கையில் உருப்படாது' என்ற பழமொழியை நினைவில் கொள்வது நல்லது.
ஆனால் கண்டிப்பு என்ற பெயரில் ஆசிரியர் சிலர் அத்துமீறுவதால் மாணவர்கள் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படுவதை மறுக்க முடியாது. சிற்பத்தை உருவாக்கும் உளியால் கற்களுக்கு சேதம் ஏற்படுவது சரியல்ல என்பது சமூகவியலாளர்கள் கருத்து.
சிற்பிகளான ஆசிரியர்களுக்கு நாவன்மை என்ற கூர்மையே முக்கியம். ஆனால் இன்றோ பேச இயலாதவர் கூட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி சான்று வைத்திருந்தால் பாடம் நடத்தலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.
வாக்கு வன்மையால் மாணவர்களைத் தன்பால் ஈர்க்கும் திறமைமிக்க ஆசிரியர்களை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம். திறமையற்றவர்களே மிரட்டல், உருட்டல் வழிமுறை மூலம் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். இதனால்தான் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியரின் திறமை குறித்து பணி ஓய்வு பெறும் வயதிலும் ஒருவரால் நினைவு கூர்ந்து பேச முடிந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஊதியம் ஈட்டலுக்கான தொழிலாகவே பெரும்பாலானோர் இதைக் கருதுகின்றனர்.
அத்துடன் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைப்போரே சிறந்த ஆசிரியர் என்ற கருத்தும் பரவலாக ஏற்கப்படுவதால் மாணவர்களை மனப்பாட எந்திரமாக்குவதிலே ஆசிரியர் கவனம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.
பெற்றோரும் தமது பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறுவதே முக்கியம் என எண்ணுவதால், ஒழுக்க நிலைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இல்லாத நிலையில், கண்டிப்பதால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தாலும் பலர் பிள்ளைகளது ஒழுக்கமீறல்களைக் கண்டுகொள்வதில்லை.
அம்மாக்கள் பலர் தொலைக்காட்சித் தொடர் மோகத்தில், பிள்ளைகளின் நடமாட்டத்தைக்கூட தொல்லையாகக் கருதுகின்றனர். இதனால் மாலை நேரத்தில் பிள்ளைகள் டியூஷன் நேரக் கைதிகளாகவோ, வழிகாட்டுதல் இல்லாத நிலையிலோ நேரத்தைக் கழிக்கின்றனர்.
மொத்தத்தில் கண்டிப்பு என்பது வீட்டிலும், வெளியிலும் இல்லாத சூழல் இளைய தலைமுறைக்கு ஏற்பட்டிருப்பது நல்லதல்ல.
மாணவர்கள் மதிக்கத்தக்க தனித்திறமைகளை ஆசிரியர் கொண்டிருப்பது அவசியம். ஆனால் தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தங்களது திறன்களை ஆசிரியர் மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகமே!
இதற்கிடையே மாணவர்களை அடிக்காமல் படிக்க வைப்பது குறித்து யுனிசெஃப் அமைப்பும், தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநரகமும் ஆசிரியர் கருத்தை அறியும் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளன.
அதில் பங்கேற்றவர்கள் கரடுமுரடான கற்களைப் போன்ற மனநிலையில் வரும் மாணவர்களைத் தண்டனை என்ற "உளி'யால் செதுக்கி ஒழுக்கமுள்ள சிற்பங்களாக்குவது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், டாக்டர்களைப் போல தங்களுக்கும் மாணவர்கள் தரப்பு புகாரிலிருந்து பாதுகாக்க தனிச் சட்டம் தேவை எனவும் வாதிடத் தொடங்கியுள்ளனர். ஆக, தவறுகளைத் திருத்த வேண்டியவர்களே தங்களைச் சட்டத்தின் மூலம் பாதுகாக்க முயற்சிப்பது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
மொத்தத்தில், நல்ல சிந்தனை; அதை எடுத்துக்கூறும் நாவன்மை என்ற உளிகள் இல்லாமல் நாகரிக சமுதாயச் சிற்பங்களை ஒருபோதும் உருவாக்க முடியாது என்ற உண்மையை இந்த நவீன காலச் சிற்பிகள் எப்போதுதான் உணரப்போகிறார்களோ?
வ. ஜெயபாண்டி

நன்றி : தினமணி

0 comments: