Tuesday, August 12, 2008

இடியாப்பச் சிக்கலில்...

நாடு துண்டாடப்படுவதைப் பற்றியோ, சமுதாயம் பிளவுபடுவதைப் பற்றியோ நமது தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்தவிதக் கவலையும் கிடையாது. மக்களின் உணர்வுகளைத் தூண்டி, கலவரங்களை ஏற்படுத்தி, வன்முறைக்கு வித்திடுவதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதாக இல்லை. யார் எக்கேடு கெட்டாலும், நாடும் மக்களும் எப்பாடு பட்டாலும், தங்களது கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டும்தான் அவர்களுக்கு ஒரே குறிக்கோள். இந்த விஷயத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல.
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்புக்கு அடிப்படைக் காரணம் அமர்நாத் யாத்திரையோ, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே காணப்படும் கருத்து வேறுபாடோதான் என்று யாராவது நினைத்தால் தவறு. அது மேலெழுந்தவாரியாகக் காணப்படும், வேண்டுமென்றே கிளப்பி விடப்பட்ட காரணங்கள். உண்மையான காரணம், வரும் அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நடைபெற இருக்கும் தேர்தல்தான்!
பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமர்நாத் யாத்ரீகர்களுக்குத் தனி இடம் ஒதுக்கியதைக் காரணமாக்கிப் பெரும் போராட்டம் நடத்திய மக்கள் ஜனநாயகக் கட்சிதான் இந்தப் பிரச்னையின் சூத்திரதாரி. காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த அந்தக் கட்சியின் அமைச்சர் ஒருவர்தான், அன்றைய ஆளுநரின் சிபாரிசுப்படி, அமர்நாத் யாத்ரீகர்களுக்குத் தங்கும் வசதிகளை ஏற்படுத்த இடம் ஒதுக்கீடு செய்தவர்.
அந்த இடத்தையே காரணமாக்கிப் பிரிவினை சக்தியான ஹுரியத்துடன் கைகோர்த்து ஒரு போராட்டத்தை உருவாக்கி, கூட்டணியிலிருந்து வெளியேறியதும் அதே மக்கள் ஜனநாயகக் கட்சிதான். இதன் மூலம் தனது கட்சிதான் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்காகப் பாடுபடும் கட்சி என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி, தனது அரசியல் எதிரியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியைத் தேர்தலில் தோற்கடிப்பதுதான், அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான முப்தி முகமது சையதின் திட்டம்.
அமர்நாத் யாத்ரீகர்கள் பல்டாலில் தங்கப்போவது வருடத்தில் நான்கே மாதங்கள். ஆண்டுதோறும் எட்டு மாதங்கள் அந்த இடம் பனியால் மூடப்பட்டிருக்கும். மேலும் அமர்நாத் யாத்ரீகர்களான இந்துக்கள், அங்கே நிரந்தரமாகத் தங்குவதற்கான வாய்ப்பே கிடையாது. யாத்ரீகர்களுக்காக அமைக்கப்படும் தாற்காலிகக் கூடங்களால் அந்தப் பகுதியின் இயற்கைச் சூழல் பாதிக்கப்படும் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமல்ல. அழகான தல் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைவிடவா இந்தத் தாற்காலிகத் தங்குமிடங்களால் பாதிப்பு ஏற்பட்டுவிடும்?
இந்துக்களும், வேற்று மாநிலத்தவரும் குடியேறி சமுதாய அமைப்பு மாறிவிடும் என்பதும் தவறு. வெளியேற்றப்பட்டிருக்கும் 50,000க்கும் அதிகமான காஷ்மீரப் பண்டிட்டுகளைத் திருப்பி அழைத்து சமுதாய அமைப்பைப் பாதுகாக்கத் தவறியவர்களின் வறட்டு வாதம் இது, அவ்வளவே. பண்டிட்டுகள் தங்களது தாய்மண்ணுக்குத் திரும்பத் தயாராக இல்லாதபோது, அமர்நாத் யாத்ரீகர்கள் அங்கே குடியேறப் போகிறார்களா என்ன?
இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமை என்றால், ஜம்முவில் நடப்பதிலும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஜம்முவைப் பொருத்தவரை, அங்கே போட்டி, காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில்தான். இந்துக்களின் சார்பாக உரத்த குரலெழுப்பி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஆப்பிள் மற்றும் பொருள்கள் வெளிமாநிலங்களுக்குப் போகாமல் தடுக்க முற்பட்டிருக்கிறது பாஜக. அதேபோல, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு எந்தவிதப் பொருள்களும் செல்லாமல் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தவும் முற்பட்டிருக்கிறது.
வெளிப்படையாக பாஜக இதைச் செய்யாவிட்டாலும், ஜம்முவில் நடைபெறும் போராட்டத்திற்கு பாஜகவின் ஆதரவு இருப்பது உலகறிந்த உண்மை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஜம்மு பகுதியில் காங்கிரஸ் கணிசமான இடங்களை வென்றதால்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்க முடிந்தது. இந்த முறை கணிசமான இடங்களை இந்தப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற முடியும் என்பது பாஜகவின் கணக்கு.
ஜம்முவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடை, பிரிவினை சக்திகளையும், மக்கள் ஜனநாயகக் கட்சியையும் பாகிஸ்தான் வசமிருக்கும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரை நாடும்படி செய்திருக்கிறது. அங்கிருக்கும் முசாபராபாத்தை நோக்கி நடைப்பயணம் போகப் பள்ளத்தாக்கு மக்களைத் தூண்டுகிறார்கள் பிரிவினைவாதிகள். துணைக்கு முப்தி முகமது சையதும்.
இந்த விஷயத்தில் ஜம்முவில் அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைத்த காங்கிரஸ் இருதலைக் கொள்ளி எறும்பாகி இருக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சியின் நிலைமை அதைவிடப் பரிதாபம். மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. அரசியல் ஆதாயம் தேட முயன்று இப்போது இடியாப்பச் சிக்கலில் முடிந்திருக்கிறது விவகாரம்.
துணிவும், துப்பாக்கியும், தெளிவும் இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். அந்த தைரியம் நமது அரசுக்கு இல்லாமல் போனால், விளைவு விபரீதமாக இருக்கும்!
நன்றி : தினமணி

0 comments: