Tuesday, August 5, 2008

திசை திருப்பும் முயற்சி!

ஒருபுறம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்பு, சதி வேலைகள் என்று தொடர்கின்றன. இந்தச் சம்பவங்கள் நம்மை எல்லைப்புறப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த முடியாமலும், அதைப் பற்றிய செய்திகள் நம்மைப் பாதிக்காமலும் இருக்கிறதோ என்கிற அச்சம் எழுகிறது.
கடந்த சில நாள்களாகவே இந்திய பாகிஸ்தானிய எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஈகிள் போஸ்ட் எனப்படும் எல்லையோரத்து ராணுவ முகாமைச் சேர்ந்த குமார் என்ற சிப்பாய் தேசத்துக்காகத் தனது உயிரைப் பலி கொடுத்திருக்கிறார். அதேபோல, ஒரு பாகிஸ்தானிய சிப்பாயின் உடலும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் எல்லையோரப் பதற்றம் தணிந்தபாடில்லை என்றுதான் செய்திகள் தெரிவிக்கின்றன.
வேண்டுமென்றே எல்லையோரக் காவலில் இருக்கும் இந்திய ராணுவத்தினரை பாகிஸ்தானியத் தரப்பு வம்புக்கிழுக்க முயற்சிக்கிறது என்று தெரிகிறது.
ஈகிள் போஸ்ட் பகுதியில் இந்திய எல்லைக்குள் ஒரு பாதுகாப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. இது தங்களது நாட்டின் எல்லைக்குள் அமைக்கப்பட்டிருப்பதாகக்கூறி, பாகிஸ்தானிய ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதே போலத்தான் நெளகம் பகுதியிலும், பாகிஸ்தானிய ராணுவம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதிகமான ஊடுருவல் இந்தப் பகுதியில்தான் நடைபெறுகிறது என்பதால் அமைக்கப்பட்ட எல்லையோரக் காவல் முகாம்தான் நெளகம் பகுதியிலுள்ள கெர்யான் போஸ்ட் என்பது. இங்கே சில நாள்களுக்கு முன்னால் சுமார் 16 மணி நேரம் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்திருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 19 முறை பாகிஸ்தானிய ராணுவம் சமாதான ஒப்பந்தத்தை மீறி இருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்திருக்கிறார். அது மட்டுமா? பாகிஸ்தானைச் சேர்ந்த ஜிகாதிகள் 60 தடவை இந்தியாவில் ஊடுருவ முயற்சித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதத்தில் 40 தடவைக்கு மேல் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகத் தமக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன என்கிறார் அமைச்சர் அந்தோனி. இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியான 742 கி.மீ. தூரத்தையும் கண்காணிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்கிற அமைச்சரின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.
இந்திய பாகிஸ்தான படைகளுக்கிடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு கடந்த நான்காண்டுகளாக அமைதி காத்த எல்லைப் பகுதியில் இந்த ஆண்டு திடீரென பதற்றம் நிலவுவதன் காரணம் என்ன? இந்திய எல்லைக்குள் ஜிகாதிகள் ஊடுருவுவதற்கு உதவத்தான் பாகிஸ்தானிய ராணுவத்தினர் வலிய துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரு புறம் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடக்கும்போது, நமது எல்லையோரக் காவலர்களின் கவனம் திசைதிருப்பப்படுகிறது.
பாகிஸ்தானில் அமைந்திருக்கும் மக்கள் ஆட்சி பலவீனமாக இருப்பதும், எல்லையோரப் பகுதிகளில் பதற்றம் அதிகரிப்பதற்குத் காரணமாக இருக்கலாம். ஜிகாதிகள் மற்றும் பயங்கரவாதக் கும்பல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளைத் தொடரும் தைரியமும், பலமும், பலவீனமான பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசுக்கு இல்லாமல் இருப்பது ஒரு முக்கியமான காரணம்.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜிகாதிகள் தங்களது பயங்கரவாதச் செயல்களுக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பது, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலிருந்து நன்கொடை வசூலிப்பது போன்ற செயல்களில் எந்தவிதத் தலையீடும் இல்லாமல் செயல்பட முடிகிறது என்பது உலகறிந்த ரகசியம். அதேபோல, இந்த பயங்கரவாதக் குழுக்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன்தான் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறார்கள் என்பதை கார்கில் ஏற்கெனவே தெளிவாக்கியும் இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானிய தரப்பினர் பொறுப்பான, பயன்பாடுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது ஒருபுறம் இருந்தாலும், இந்திய அரசு மெத்தனமாக இல்லாமல் எல்லைப் பகுதியிலான பாதுகாப்பை அதிகப்படுத்துவது நல்லது. ஆங்காங்கே வெடிக்கும் குண்டுகளும், அதனால் உருவாகும் பீதியும் அரசின் கவனத்தை எல்லையோரப் பாதுகாப்பிலிருந்து திசைதிருப்பிவிடக் கூடாது, ஜாக்கிரதை!
நன்றி : தினமணி

0 comments: