Tuesday, August 5, 2008

வேலியே பயிரை மேய்வதா?

ஆட்சியாளர்கள் சுயநலவாதிகளாகச் செயல்படுகிறார்கள் என்பதும், மக்கள் நலனைவிடத் தங்களது நலனுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதும் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய மக்கள் புரிந்து கொண்டுவிட்ட விஷயம். ஆனால் சமீப காலமாக, அதிலும் உலகமயம், தனியார் மயம் போன்ற கோஷங்கள் எழுந்தது முதல், ஆட்சி, அதிகாரம், பதவி போன்றவை தங்களையும் தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களையும் பாதுகாப்பதற்கு மட்டும்தான் என்கிற மனோநிலை அமைச்சர்கள் பலரிடம் காணப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
உலக சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நிதியாண்டில் சர்க்கரை உற்பத்தி ஏற்பட்டிருப்பதாக சர்வதேச சர்க்கரை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. அதாவது உலக உற்பத்தி இந்த நிதியாண்டில் சுமார் 168.7 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் உபயோகம் போக சுமார் 8 மில்லியன் டன் உபரியாக சர்க்கரை இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் மட்டும் என்ன? இந்த ஆண்டு கரும்பு உற்பத்தியும் சரி, சர்க்கரை உற்பத்தியும் சரி, தேவைக்கு அதிகமாகவே தான் இருக்கிறது. நமது தேவைக்கு மேல் 120 லட்சம் டன் உபரியாகவே சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருந்தால் விலை குறைவதுதானே நியாயம்? ஆனால், அதுதான் இல்லை.
தாராளமயமாக்கல் என்கிற பெயரில் எதெல்லாம் தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்குமோ அதையெல்லாம் அனுமதிக்கும் நமது அரசு, எதெல்லாம் மக்களுக்குச் சாதகமாக இருக்குமோ அதை அனுமதிக்காது என்பதற்கு சர்க்கரை ஒரு நல்ல உதாரணம். இப்போதும், ஒவ்வொரு மாதமும் ஆலைகள் எவ்வளவு சர்க்கரையை சந்தை விற்பனைக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்கிற அளவை அரசுதான் நிர்ணயிக்கிறது. இதன்மூலம் சர்க்கரைக்கு தேவையை அதிகரிப்பதும், குறைப்பதும் அதன்மூலம் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்துவதும் அரசுதான்.
கடந்த நான்கு வாரங்களில் இந்தியா முழுவதுமாக சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.150 அதிகரித்திருக்கிறது. அதாவது ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.1.50 அதிகம். இந்த வருடக் கடைசிக்குள் சர்க்கரை விலை மேலும் 15 சதவிகிதம் அதிகரிக்கும் என்று சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம் வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் ஒரு மிகப்பெரிய லாபத்தை இந்த சர்க்கரை ஆலைகள் அடைய இருக்கின்றன. இத்தனையும், நமது மாண்புமிகு மத்திய உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் உதவியுடன் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
கடந்த ஒரு மாதமாக விலை உயர்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உணவுத்துறை அதிகாரிகள், பண்டிகைக் காலத்தில் இது மேலும் அதிகரித்தால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று பயந்தனர். உடனடியாக வெளி மார்க்கெட்டிற்கு ஆலைகளிலிருந்து அதிகமான சர்க்கரை வழங்கச் செய்வதன் மூலம் இந்த விலையேற்றத்தைத் தடுக்க முடியும் என்றும், அதனால் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டுமென்றும் அமைச்சருக்கு அதிகாரிகள் சிபாரிசு செய்திருக்கிறார்கள்.
என்ன காரணத்தாலோ தெரியவில்லை, நடப்பு மூன்று மாதப் பகுதியில் 37.50 லட்சம் டன் சர்க்கரை வெளிமார்க்கெட்டுக்கு ஆலைகள் வழங்கினால் போதும் என்று அமைச்சரிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது மொத்தத் தேவையில் வெறும் 70 சதவிகிதம் தான் என்பதும், இதன்மூலம் பண்டிகைக் காலங்களில் சர்க்கரை விலை அதிகரிக்கும் என்பதும் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மற்ற மாநிலங்களைப்போல அல்லாமல் மகாராஷ்டிரத்தில் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் கூட்டுறவு முறையில் நடத்தப்படுகின்றன. இந்த ஆலைகளில் விவசாயிகளுக்கும் பங்கு இருப்பதால், இந்த விலை உயர்வு அவர்களுக்கு சாதகமாக இருக்கும். அவர்களது ஆதரவு தனக்குத் தேர்தலில் தேவை என்பதாலும், இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நன்கொடைதான் சரத்பவாரின் அரசியலுக்கு ஆதாரம் என்பதாலும் அவர் அப்படி நடந்துகொண்டாரோ என்னவோ?
ஆனால், ஏனைய பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு இதனால் என்ன லாபம்? கரும்பின் கொள்முதல் விலை அதிகரிக்கப்படுகிறதா, இல்லை அவர்களுக்கு முறையாகப் பணப்பட்டுவாடாவாவது சர்க்கரை ஆலைகளில் செய்யப்படுகிறதா என்றால் கிடையாது. பொதுமக்களுக்கு இதனால் என்ன லாபம்? பண்டிகைக் காலங்களில் அதிகமான உற்பத்தி இருந்தும், செயற்கையான விலையேற்றத்தால் அவதிப்படுவதுதான் தலையெழுத்து போலும்.
வேலியே பயிரை மேய்கிறது. நாம் வேடிக்கை பார்ப்பதையும், அவதிப்படுவதையும் தவிர வேறு வழியில்லை.

நன்றி : தினமணி

0 comments: