Tuesday, August 5, 2008

'அனைத்தையும்' உள்ளடக்கிய வளர்ச்சி-என்.விட்டல்

"அது பொற்காலமாகவும் இருந்தது; மோசமான காலமாகவும் இருந்தது'. சார்லஸ் டிக்கின்ஸின் "இரு நகரங்களின் கதை' என்ற நாவல் இப்படித்தான் தொடங்கும். இந்தியா விடுதலையடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் இந்த வேளையில் இந்த வாசகம்தான் மனதில் பளிச்சிடுகிறது. மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற பட்டியலில் உள்ள இந்தியா என்ற பாம்பின் தலை 21ம் நூற்றாண்டிலும், வால் 17ம் நூற்றாண்டிலும் இருக்கின்றன.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் 4 இந்தியர்கள் இருக்கிறார்கள். பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். அதே நேரத்தில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பதாக, அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றி ஆய்வு செய்த சென்குப்தா கமிட்டி கூறுகிறது. இப்படி இருவேறு உச்ச நிலைகளைக் கொண்டிருப்பதால்தான் இந்தியாவை பாம்புடன் ஒப்பிட வேண்டியதாயிற்று.
இன்றைய அரசியல் தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் கையிலெடுத்திருக்கும் பிரச்னை இதுதான். "அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற வாசகமும் இதிலிருந்து பிறந்ததுதான். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, "அனைவரும் நலமாக இருக்க வேண்டும்' என்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே நமது தினசரி வழிபாடு அமைந்திருக்கிறது. அந்த வகையில் அறிந்தோ அறியாமலோ "அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற பொருளாதாரக் கோட்பாட்டை நாள்தோறும் உச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர், "எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே' என்று இறைவனை வேண்டினார். இதுவும் "அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை' வலியுறுத்தும் வழிபாடுதான்.
வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமே அனைத்து நேரங்களிலும் நல்லது எனக் கூறிவிட முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் ஐ.நா. அமைப்பு நடத்திய ஆய்வில் சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் மூலம் "அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற வாசகத்துக்கு இன்னும் குறிப்பான விளக்கத்தைப் பெறமுடியும்.
இந்த அடிப்படையில் விரும்பப்படாத பொருளாதார வளர்ச்சி என சிலவற்றைப் பட்டியலிடமுடியும். அவை, 1. வேலை வாய்ப்பில்லாத பொருளாதார வளர்ச்சி. 2. நாட்டின் சமூக, கலாசார, கட்டுப்பாடுகளை மீறும் "வேரற்ற வளர்ச்சி'. 3. ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குப் பலன் கிடைக்கிறது என்பதற்காகப் பெரும்பான்மை மக்களுக்குச் சிரமம் உண்டாக்குவதன் மூலம் கிடைக்கும் "இரக்கமற்ற வளர்ச்சி'; பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்வது இதற்கு சரியான உதாரணம். 4. சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தலை உண்டாக்கும் வகையிலான "வருங்காலத்தை சிதைக்கும் வளர்ச்சி'.
பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். எல்லாக் காலகட்டத்திலும் "ஏழைகள்' இருக்கத்தான் செய்வார்கள். ஏனெனில் ஒவ்வொரு காலகட்டத்திலும் "ஏழை' என்பதற்கான வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக, பொருளாதார ரீதியாக இந்தியாவில் 77 சதவீதம் பேர் ஏழைகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு நாளைக்கு 2400 கலோரி சக்தியைத் தரும் உணவு கிடைக்காதவர்கள் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் 27 சதவீதம் பேர்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே வருவார்கள். அதனால், வறுமையை ஒழிப்பது அல்லது ஏழைகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவது என்பதை விட்டுவிட்டு, பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே உள்ளடக்கிய வளர்ச்சியின் உண்மையான அர்த்தமாகும்.
இந்திய மக்கள் அனைவருமே இந்தியாவின் குடிமக்கள் என்ற எண்ணமெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே இருந்தது கிடையாது. "வாக்கு வங்கி' அடிப்படையில் மக்களைப் பிரித்து வைப்பதுதான் அவர்களது எண்ணம்.
உதாரணமாக, சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு பொருளாதார வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்று கூறி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வாக்கு வங்கி அரசியல் அல்லாமல் வேறொன்றும் இல்லை.
இதுபோன்று ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சிறப்புச் சலுகைகள் அளிப்பதால், அவர்கள் மற்றவர்களுடன் சேராமல் தனித்தே வாழும் அபாயம் இருக்கிறது. அத்துடன் அரசு தங்களுக்காக சிறப்புச் சலுகைகளே அளித்தே தீர வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்படக்கூடும். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற நிலையை ஏற்படுத்துவதும் அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பு என்ற உரிமையை வழங்குவதும்தான் நல்ல நிர்வாகத்துக்கு அடையாளம். மதம் சார்ந்த கொள்கையை வகுப்பதன் மூலம், இந்த அடிப்படைக் கொள்கையே மீறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியானது, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் சென்றடைய வேண்டியது அவசியம். அப்படிச் செய்யாவிட்டால், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடையவே முடியாது.
அதேபோல், பொருளாதார வளர்ச்சியின் பயனை நகரங்களில் வசிப்போர் பெற்றிடும்போது, கிராமங்களில் வசிப்போர் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்தாக வேண்டும். நகரமயமாக்குவதை நாடு முழுவதுமே ஒரே சீராகச் செயல்படுத்த வேண்டும்.
ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான கல்வியும், சுகாதார வசதிகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். இவை இரண்டும் கிடைத்தால்தான் ஒரு மனிதன் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும்.
ஒரு குறிப்பிட்ட துறையை மட்டுமே மேம்படுத்துவது என்ற கொள்கையை விட்டுவிட்டு, அனைத்துத் துறைகளும் வளர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அண்மைக் காலமாக தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ந்து வரும்போது, வேளாண்துறை மிகவும் பின்தங்கி இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
சரி இந்த மாற்றங்களையெல்லாம் செய்வது யார் பொறுப்பு? அரசு, அரசு சாரா அமைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் போன்ற சமூக அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவைதான் இதைச் செய்ய முடியும். அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்தாக வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஊழலை ஒழிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்திருப்பதை மறுக்க முடியாது. தகவல் தொழில்நுட்ப வசதிகளும்கூட ஊழலை ஒழிப்பதிலும் நல்ல நிர்வாகத்தை வழங்குவதிலும் முக்கிய பங்காற்ற முடியும். ரயில்வே முன்பதிவு வசதி இதற்குச் சரியான உதாரணம்.
அனைத்துப் பிரிவு மக்களையும் அரசு சமமாகப் பாவிக்க வேண்டும். அரசின் கொள்கைகளும், தீட்டும் திட்டங்களும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும். வாக்கு வங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் பிரித்தாளும் தந்திர அரசியல் கைவிடப்பட வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் தனியார் நிறுவனங்களும் "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை' எட்டுவதில் சிறப்பாகப் பங்களிக்க முடியும். நகரங்களில் கிடைக்கும் வசதியை கிராமங்களில் கிடைக்கச் செய்வது என்ற டாக்டர் அப்துல் கலாமின் யோசனை மூலமாக நாடு முழுவதையும் நகர்மயமாக்க முடியும். இதற்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம்.
உலகமயமாக்கல் தத்துவம்கூட அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உதவுகிறது. இதன் மூலம் உலகமே ஒரே ஊராக மாறி வருகிறது என்கிறார் தாமஸ் ஃபிரைட் மேன். இதற்காக அவர் பட்டியலிட்டுள்ள காரணிகள் மூன்று. அவை, 1. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பார்க்க முடிகிற செயற்கைக்கோள் டி.வி. 2. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். 3. சில்லறை வர்த்தகம் மூலமாக வேளாண் துறையையே நிறுவனங்களிடம் ஒப்படைப்பது. இவை அனைத்தும் அதிரடியான நகர்மயமாக்கலுக்கு உதவுவதுடன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்.
மொத்தத்தில், பந்தயத்தில் ஒரு பிரிவினர் தவழ, ஒரு பிரிவினர் நடக்க, மற்றொரு பிரிவினர் ஓட என வேறுபட்ட வேகத்தில் பயணித்து வரும் இந்தியாவை ஒரே வேகத்தில் முன்னேறச் செய்வதற்கு பலவழி அணுகுமுறை அவசியம். அதைச் செய்வதற்கு இதுவே சரியான தருணம்!


(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்).

நன்றி : தினமணி

0 comments: