Tuesday, August 5, 2008

மாவட்டம் தோறும் பல்கலைக்கழகம்!

தமிழகத்தில் உயர்கல்வியை வளர்க்கும் நிறுவனங்களாக மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் போன்றவை பெரும்பங்கு வகித்து வருகின்றன. இத்தனை அமைப்புகள் இருந்தாலும் உயர்கல்வி என்பது சிலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரி, இராணி மேரிக் கல்லூரி, கோவை அரசுக் கல்லூரி, குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள் ஆகிய அரசுக் கல்லூரிகளையும், கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி ஆகிய அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளையும் பல்கலைக்கழக நிலைக்கு உயர்த்திய அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் நிறைவடைந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான உடனே கல்லூரி ஆசிரியர் அமைப்புகள் தங்களது இயக்கங்களின் மூலம் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டன. அதேபோல் அனைத்து அரசியல் இயக்கங்களும் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து இரண்டு தனியார் பல்கலைக்கழக மசோதா சட்டமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்பப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்கள் புதிதாகத் தொடங்கப்பட வேண்டும் என்ற முடிவு ஏன் உண்டானது என்ற கேள்வி எழாமலில்லை. தேசிய அறிவு சார் குழு இந்தியாவில் மேலும் 1500 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவை இன்றைய நடைமுறை உலகியலுக்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட வேண்டும் என்றும், பன்னாட்டு உயர்கல்வித் தரத்துடன் இந்தியாவின் உயர்கல்வித் தரமும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் அக்குழு வலியுறுத்துவது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
"உலகமயமாக்கல்' என்ற அலை நம் நாட்டின் உயர்கல்வியையும் விட்டுவைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதி 3இன் படி இன்று நாடெங்கிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் முளைக்கத் தொடங்கி கல்வித்துறையில் வியாபாரிகள் பெருகுவதற்கும், அந்நிய நாட்டு நிறுவனங்கள் உயர்கல்வியில் முதலீடு செய்வதற்கும் வழி வகுத்துள்ளன.
1947ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறியபோது அவர்கள் விட்டுச்சென்ற இரண்டு முக்கிய சொத்துக்கள் ஒன்று ஆங்கில மொழி, மற்றொன்று தாமஸ் மெக்காலேயால் உலகிற்கு பறைசாற்றப்பட்ட கல்விமுறை. இந்த இரண்டும் இந்திய மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்தவையாகவே இன்றுவரை விளங்கி வருகின்றன. அதை அடியொற்றி உயர்கல்வி என்ற கட்டடமும் உருவாக்கப்பட்டு இன்று பல வகையில் உருமாற்றம் பெற்று உயர்ந்து கொண்டே வருகிறது.
நம் தமிழகத்தில் 1857இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்துக்குப் பின் 17 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 9 சதவீதம் தான் என அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் வாயிலாக அறிய முடிகிறது. இன்றுள்ள பல்கலைக்கழகங்களில் 9 சதவீத மாணவர்களே உயர்கல்வி பயிலும் நிலை உள்ளதால், மேலும் பல பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் என தேசிய அறிவு சார் குழு சொல்வதில் உண்மையான பொருள் இருப்பதாகவே கொள்ளலாம்.
அதற்காக உயர்கல்வியைத் தனியார் வசம் தாரை வார்த்துவிட வேண்டும் என்ற கொள்கையிலிருந்து அரசு விடுபட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி வணிகத்தைச் செய்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு உயர்கல்வி வளர்ச்சி, அதன் தரம் ஆகியவற்றைக் காட்டிலும் போட்ட பணத்தை மீண்டும் எடுப்பதில்தான் முனைப்பு ஏற்படுகிறது. தனியார் பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயம் குறித்துத் தெளிவான முடிவை உறுதி செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகம் என்பது அனைத்துத் துறைகளையும் கற்பிக்கும் இடமாகவும், கற்கும் இடமாகவும் இருக்க வேண்டும். ஆனால், சில ஆண்டுகளாக நம் தமிழகத்தில் துறைக்கு ஒரு பல்கலைக்கழகம் என்ற புதிய கலாசாரத்தை நாம் தொடங்கியுள்ளோம். பொதுவாக அனைத்துத்துறை சார்ந்த கல்வியைப் போதிக்கும் இடமாக இவை இருப்பதால் தான் "சர்வ கலாசாலை' என அழைக்கப்பட்டு பின்னாளில் பல்கலைக்கழகம் என அழைக்கப்படலாயிற்று. அனைத்துத் துறைக் கல்வியையும் போதிக்கும் நிலை தற்போது தமிழக அரசால் நடத்தப்படுகின்ற எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை.
ஆனால், 1929ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் அண்ணாமலை செட்டியாரால் உருவாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், நிர்வாகம், வேளாண்மை, பொறியியல், மருத்துவம், கல்வியியல் போன்ற அனைத்துத்துறை கல்வியும் கற்பிக்கும் பல்கலைக்கழகமாக அப் பல்கலைக்கழகம் இப்போதும் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில், அரசின் மானியமாக சுமார் ரூ. 45 கோடி பெறும் பல்கலைக்கழகமாகவும் இது விளங்கி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூரில் தொடங்கப்பட்ட எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போல அனைத்துத்துறை சார்ந்த கல்வியைக் கற்பிக்கும் இடமாகவும் உள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் போதிக்கும் அனைத்துத்துறை கல்வி முறைகள் தமிழக அரசால் நடத்தப்படுகின்ற பல்கலைக்கழகங்களில் இல்லையே ஏன்?
சமச்சீர் கல்வி முறை குறித்து நாம் அண்மைக் காலமாக அதிகம் பேசி வருகிறோம். ஆனால், ஏற்றத்தாழ்வும், பல வேறுபாடும் கொண்ட கல்விமுறையும் தான் சமச்சீர் கல்வி முறையா? என்பதைக் கல்வியாளர்களும், அறிவு சார் சான்றோர்களும் சிந்திக்க வேண்டும். மேலை நாடுகளில் உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களின் தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களில் அனைத்துத்துறை சார்ந்த கல்வியைக் கற்கும் இடமாக உள்ளன என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழகத்தில் முந்தைய ஆட்சியின்போது சில அரசுக் கல்லூரிகள் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கல்லூரி ஆசிரியர், அலுவலர் போராட்டத்துக்குப்பின் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. முந்தைய அரசின் அறிவிப்பைச் சற்று மாற்றி உறுப்புக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்ட கல்லூரிகளை எல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களாக அறிவித்துள்ளனர்.
1983 84ஆம் ஆண்டுகளில் அன்றைய தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகமும், கோவையில் பாரதியார் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன. அப்போது அந்தந்தப் பகுதி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், மாணவர்கள் தங்கள் உயர்கல்வித் தேவைக்காக சென்னைக்கு வருவதைத் தவிர்ப்பதற்காகவும், இப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படுகின்றன என அறிவித்தார். அந்த அறிவிப்பு அன்று அனைவரையும் கவர்ந்தது.
இன்று மருத்துவப் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம், விளையாட்டுத் துறைப் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகங்கள் போன்றவை சென்னையில் அமைந்துள்ளன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் தங்கள் தேவைக்காக சென்னையை நோக்கித்தான் இன்றும் வரவேண்டியுள்ளது.
தேசிய அறிவு சார் குழுமத்தின் பரிந்துரைப்படி மேலும் பல பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. பெருந்தலைவர் காமராஜ் ஊருக்கு ஓர் ஆரம்பப் பள்ளியை ஏற்படுத்தியதால் தான் தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி உண்டாயிற்று. அதுபோல் மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டால் அது உயர்கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாய் அமையும்.
தொடங்கப்படுகின்ற பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, நிர்வாகம், போன்ற அனைத்துத்துறை சார்ந்த கல்வியையும் கற்கும் பல்கலைக்கழகமாக அமைய வேண்டும். மாவட்டத்தில் ஏற்கெனவே இயங்கிவரும் கல்லூரிகள், அந்த மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளாக அமைய வேண்டும். ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் ஐம்பதுக்கு மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகள் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்கள் பட்ட மேற்படிப்பையும், முதுநிலை ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கின்ற இடமாக விளங்க வேண்டும். உயர் கல்வியில் ஓர் இலக்கை நோக்கிய வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.
எங்கள் ஆட்சியிலும் இத்தனை பல்கலைக்கழகங்களை உருவாக்கி விட்டோம் என்று சொல்வதற்காக மட்டுமன்றி உண்மையிலேயே சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் திட்டங்கள் தொலைநோக்குடன் அமைந்திட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி, ஓர் அரசு பொறியியல் கல்லூரி என உருவாகி அனைத்துத்துறை கல்வியையும் பெறுகின்ற இடமாக அம் மாவட்டம் திகழும்.
காமராஜ் சாலையில் மட்டும் ஐந்து பல்கலைக்கழகங்கள் இருப்பதைவிட ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் என்ற நிலை உருவாகுமானால், உயர்கல்வியில் அம் மாவட்டம் தன்னிறைவு பெற வழிகோலும். மாவட்டத்தில் இருக்கின்ற சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் அமைவதற்கும், அங்குள்ள தொழில்கள் வளர்வதற்கும், இப் பல்கலைக்கழகங்கள் கவனம் செலுத்துவதற்கும் ஏதுவாகும்.
அரசால் அறிவிக்கப்படும் எந்த ஒரு திட்டமும் மாநிலத்தில் பெரும்பான்மை மக்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் அமைய வேண்டும். புதிதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் பெரும்பான்மை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையுமா என்பது ஐயத்திற்குரியதே! உரியவர்கள் சிந்திப்பார்களா?
வி.சீ. கமலக்கண்ணன்
நன்றி : தினமணி

0 comments: