Saturday, August 30, 2008

சில சிந்தனைகள்

ஒகேனக்கல் பிரச்னைக்காக உண்ணாவிரதத்தில் ரஜினி பேசிய பேச்சிற்கு கன்னட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கன்னடத்தில் ரஜினி படங்களை ஓட விட மாட்டோம் என்றும் கண்டனக் குரல் எழுப்பினர். அன்று அது குறித்து எதுவும் கருத்துத் தெரிவிக்காத ரஜினி தனது படம் குசேலன் அங்கே திரையிடப்பட வேண்டுமென்பதற்காக பழைய கன்னட எதிர்ப்புப் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார். பயன் இரண்டு மாநிலங்களிலும் படம் ஓடவில்லை. உமியும் போய் தீயும் போயிட்டென்று ஒரு பழமொழி உண்டு தமிழில்.
உண்ணாவிரதம் என்கிற ஓர் அரிய போராட்டத்தை தேசத் தந்தை காந்தி அடிகள் அறிமுகம் செய்தார். இருபது நாள்கள் முப்பது நாள்கள் என்று உண்ணாவிரதம் இருந்தார் அந்தப் பெரியவர்.
ஆனால் தேசத் தந்தையின் அந்த உன்னதமான போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஒரு நாள் அரை நாள் என்றெல்லாம் உண்ணாவிரதத்தை நடத்தத் தொடங்கி விட்டனர் நமது அரசியலார்.
மக்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட பாபா ஆம்தே, மேதா பட்கர் போன்றவர்களின் தியாகத்தை எல்லாம் மறைத்து இந்தப் போலி உண்ணாவிரதங்களுக்கு விளம்பரங்கள் அதிகமாயின.
ரஜினி செய்த தவறு ஒன்றே ஒன்றுதான். கடவுளை முழுமையாக நம்புகின்ற ரஜினி நல்ல மழை தர வேண்டி இறைவனை வேண்டி நின்றிருக்க வேண்டும். சரியான மழை மட்டும் பெய்து விட்டால் எடியூரப்பாவோ தேவகெளடாவோ தண்ணீரை நிறுத்தி விட முடியுமா?
இன்னொன்றும் புரியவில்லை. ஒகேனக்கல் தமிழகத்தின் பகுதி. அதற்குள்ளே தண்ணீர் வந்து விட்ட பிறகு எதற்கு கர்நாடகத்தின் அனுமதி வேண்டும். அங்கே காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தலில் இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என்று நமது முதல்வர் கூட்டணி தர்மத்திற்காகச் செய்த வேலை இது.
எல்லாவற்றிலும் மத உணர்வுகளை மொழி உணர்வுகளைத் தூண்டியது நாம் தானே. அதன் பின்னர்தான் மற்றவர்கள் ஆரம்பித்தார்கள்.
மதுரை முத்து, தமிழர் படை துவக்கிய பின்னர்தான் மராட்டியத்தில் சிவசேனை, கர்நாடகத்தில் வட்டாள் நாகராஜின் இயக்கம் போன்றவை தோன்றின.
கேரளத்துப் பருவ மழைதான் குற்றாலத்தில் அருவியாகக் கொட்டுகின்றது.
நமது தமிழ்நாட்டிற்குள்ளேயே ஒரு ஊர்க்காரர்கள் மற்றொரு ஊருக்குத் தண்ணீர் தர மறுக்கின்றார்களே. இது என்ன கூத்து.
இயற்கையை அழிக்கின்ற அதில் பணம் சம்பாதிக்கின்ற ஒழுங்கீனத்தைக் கற்றுத் தந்தது யார்?
திரைப்படக் கலைஞர்களும் மனிதர்கள்தான். ஆனால் மொழி கடந்து மதம் கடந்து அவர்கள் வாழ்பவர்கள். அவர்களை இந்தச் சர்ச்சைகளுக்குள் இழுப்பது சரியல்ல.
ஒட்டுமொத்த மனித குலத்திற்கான போராட்டங்களில் கலைஞர்கள் ஈடுபடுவதுதான் அவர்களுக்குப் பெருமை.
அதேபோல் அரசியல் காரணங்களுக்காகத்தான் தமிழ்மொழி செம்மொழியென்று அறிவிக்கப்பட்டதென்று சொன்னபோது கோபப்பட்டவர்கள் இன்று உணர்வார்கள் கன்னடமும் தெலுங்கும் செம்மொழியாகப் போகின்ற காரணத்தை.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் கூற்று மேடைக்கு மட்டும் என்ற நடிப்பினால்தான் நாம் மொழி பேசி இனம் பேசி அழிகின்றோம்.
மனிதர்கள் மனிதப் பண்பினை இழந்ததனாலேயும், பணம் ஒன்றே குறிக்கோளாக நமது தலைவர்கள் கோடிகளிலே புரள்வதனாலேயும் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையினை ஒழுங்கீனமான வாழ்க்கையினால் நமது மக்கள் பிரதிநிதிகள் பலர் காட்டியதனாலேயும் காடுகளை அழித்தேனும் பணம் சம்பாதிக்க சிலர் முற்பட்டதனாலேயும் உண்மையும் ஒழுக்கமும் போயிற்று; மழையும் போயிற்று.
மீண்டும் மீண்டும் ஒழுங்கீனமானவர்களையே பார்க்கின்ற படித்த இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் இந்தத் தவறானவர்களிடம் சிக்கியிருப்பதனைப் பார்த்து வெதும்புவதும் அதன் விளைவாக சிலர் ஆயுதம் ஏந்துவதும் அவர்களை நமது நாட்டுக் காவல் துறை வேட்டையாடுவதும் எந்த வகையில் நியாயம். நியாயம் அற்ற முறைகளிலே செல்வம் சேர்த்து அவர்கள் வாழ்க்கையோடும் எதிர்காலத்தோடும் விளையாடுகின்ற அந்த மக்கள் பிரதிநிதிகளையல்லவா கைது செய்ய வேண்டும்.
மின் வெட்டு என்று சொன்னால் உடனே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதைச் சொல்லத் தகுதியற்றவர் என்பதுவும் அவர் ஆட்சியிலே மின் வெட்டு அதிகம் என்பதுவும் எப்படி சரியான பதிலாகும். அதனால்தானே அவரை நீக்கி விட்டு உங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள்.
இதாவது பரவாயில்லை. இன்னொரு கூத்து வேறு மாநிலங்களைச் சுட்டிக்காட்டுவது. குஜராத்தில் இருக்கின்றதா உ.பி.யில் இருக்கின்றதா என்பது. எனக்குப் புத்தகங்கள் வேண்டும் என்று குழந்தைகள் தங்கள் தந்தையிடம் கேட்டால் எதிர்த்த வீட்டுக்காரர் அவர் பிள்ளைகளுக்கு வாங்கித் தந்திருக்கின்றாரா என்று ஒரு தந்தை கேட்பதுபோல் இல்லையா.
தி.மு.க. ஆகட்டும் அ.இ.அ.தி.மு.க. ஆகட்டும். யார் நல்லதே செய்தாலும் குறை கூறி நிற்கின்ற அரசியல்.
காங்கிரஸை எதிர்த்து 1967ல் தேர்தலில் இன்றைய முதல்வர் பேசியதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கின்றனர்.
காமராசரை அவர் கேட்காத கேள்விகளா?
ஆனால் இன்று அவரை நோக்கிக் கேள்விகளை வைத்தால் "என் வயதென்ன... என் அனுபவமென்ன... என்னைக் கேட்கின்ற தகுதி இல்லாதவர்களெல்லாம் கேட்கின்றார்கள்' என்கின்றார்.
ஆனால் பெரியவர் இராஜாஜியையும் பெருந்தலைவர் காமராஜையும் இவர் கேட்ட போது இவர் வயசென்ன என்று அவர்கள் கேட்டதில்லை. மக்களாட்சியைக் கொண்டு வரப் பாடுபட்ட அந்தத் தலைவர்களுக்கு அதன் மகத்துவம் புரிந்திருக்கிறது.
பண்டித நேருவின் மருமகன்தான் முந்த்ரா ஊழலை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். தனது நல்ல நண்பர் என்று பார்க்காமல் டி.டி.கே.யை பதவி நீக்கம் செய்தார் நேரு.
சொந்த ஜாதியில் ஒருவர் இருக்கின்றார் என்று சிபாரிசு வந்தபோதும் நெ.து. சுந்தரவடிவேலுவைத்தான் கல்வித்துறை இயக்குநராகக் காமராஜ் நியமித்தார்.
உறவினர்கள் தம்மை வந்து பார்ப்பதைக் கூட காமராஜும், ராஜாஜி போன்றோரும் அனுமதித்ததில்லை.
உடுத்திய வேட்டிக்கு மாற்று வேட்டி இல்லாமல் உழவர்களுக்கும் ஏழைகளுக்கும் பாடுபட்டார் ஜீவா.
அரசியல் என்பது சேவை என்று வாழ்ந்தவர்கள் அவர்கள்.
ஆனால் அவர்களால் கிடைத்த இந்த வாழ்வில் ஒரு ஆட்சியைக் காப்பாற்ற நடந்த கூத்துகளை மொத்த நாடும் பார்த்து வெதும்பியது.
அரசியல் கூத்துகளுக்கென்று ஒரு பதக்கம் மட்டும் இருக்குமென்றால் அபிநவ் பிந்த்ரா பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பார்.
நெல்லை கண்ணன்

2 comments:

said...

//மின் வெட்டு என்று சொன்னால் உடனே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதைச் சொல்லத் தகுதியற்றவர் என்பதுவும் அவர் ஆட்சியிலே மின் வெட்டு அதிகம் என்பதுவும் எப்படி சரியான பதிலாகும். அதனால்தானே அவரை நீக்கி விட்டு உங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள்.//
மிகச் சரியான பொலிட்டிகல் ஸ்டேட்மென்ட்

//திரைப்படக் கலைஞர்களும் மனிதர்கள்தான். ஆனால் மொழி கடந்து மதம் கடந்து அவர்கள் வாழ்பவர்கள். அவர்களை இந்தச் சர்ச்சைகளுக்குள் இழுப்பது சரியல்ல.//
நிதானமான சிந்தனை

//மீண்டும் மீண்டும் ஒழுங்கீனமானவர்களையே பார்க்கின்ற படித்த இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் இந்தத் தவறானவர்களிடம் சிக்கியிருப்பதனைப் பார்த்து வெதும்புவதும் அதன் விளைவாக சிலர் ஆயுதம் ஏந்துவதும் அவர்களை நமது நாட்டுக் காவல் துறை வேட்டையாடுவதும் எந்த வகையில் நியாயம். நியாயம் அற்ற முறைகளிலே செல்வம் சேர்த்து அவர்கள் வாழ்க்கையோடும் எதிர்காலத்தோடும் விளையாடுகின்ற அந்த மக்கள் பிரதிநிதிகளையல்லவா கைது செய்ய வேண்டும்.//
உரத்த சிந்தனை

said...

r.selvakkumar வருகைக்கு நன்றி