Friday, August 29, 2008

நீதிக்கு ஏங்கும் நீதிதேவதை!

ஆசிரியப் பணி என்பது மிகவும் புனிதமானது. அதிலும் நீதி தேவர்களை உருவாக்கும் சட்ட ஆசிரியப் பணியை மேன்மையானது என்றே சொல்ல வேண்டும். ஆனால் தங்களது மேன்மையையும், பொறுப்பையும் உணர்ந்து பெரும்பாலான ஆசிரியர்கள் செயல்படுவதில்லை என்பதுதான் வருத்தமான ஒன்று.
சட்டக் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என இரு பிரிவுகளாகச் செயல்படுகின்றனர். இதில் நிரந்தர ஆசிரியர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் தாங்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவதில்லை என்பதே பெரும்பாலான பகுதி நேர ஆசிரியர்களின் ஆதங்கமாக உள்ளது.
நிரந்தர ஆசிரியர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இதை பெரும்பாலான ஆசிரியர்கள் மதிப்பதில்லை.
தங்களுக்குள் பேசிவைத்துக் கொண்டு தங்களுக்கு வகுப்புள்ள நேரத்தில் மட்டும் கல்லூரிக்கு வந்துவிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது.
எது எப்படியோ? நீதிமன்ற நடவடிக்கைகளை பகுதி நேர ஆசிரியர்களால்தான் மாணவர்களுக்கு நன்கு கற்றுக் கொடுக்க முடியும். எனவே, அவர்களை நியமித்து உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தி வருகிறது.
இதுபோன்ற நிலையில் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்கள் அளவுக்கு நடத்தாவிட்டாலும் அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமாவது வழங்கப்படுவதே நியாயம்.
நிரந்தர ஆசிரியர்கள் வாரத்துக்கு 12 மணி நேரம் பாடம் நடத்துகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்துக்கு 9 மணி நேரம் பாடம் நடத்த வேண்டிய கட்டாயம். இருவரின் பணி நேரத்திலும் 3 மணி நேரமே வித்தியாசம். ஆனால் ஊதியத்திலோ மிகப்பெரிய வித்தியாசம்.
நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்திலேயே அதிகப்படியான மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 5,500 மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த இடத்தில் "சம உழைப்புக்கு சம ஊதியம்' வழங்கப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன விதிமுறையை பின்பற்றி பிறருக்கு முன்மாதிரியாய் திகழ வேண்டிய சட்டக்கல்லூரிகளின் நிர்வாகமே இவ்வாறு நடந்து கொள்வது கவலை அளிக்கிறது.
சட்டக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் தேர்வுக்கு முன்னதாகப் பாடத்திட்டம் எப்போதுமே நடத்தி முடிக்கப்பட்டதாக வரலாறு இல்லை என்ற கவலையும் மாணவர்கள் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இதுபோன்ற நிலையில் காலிப் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும். அந்த தருணத்தில் அனுபவமிக்க பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்களுக்கு தரமானக் கல்வி கிடைக்க வாய்ப்புள்ளது.
பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களை சட்டக் கல்லூரிகளில் "டெபுடேஷன்' முறையில் நியமித்து, அவர்களுக்கு பல்கலை. மானியக் குழுவின் ஊதிய நிர்ணயப்படி ஊதியம் வழங்கும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கை சட்டக்கல்லூரிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை குமுறவைத்துள்ளது. "உடற்கல்வி இயக்குநர்களை போல் பள்ளிகளில் பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களை சட்டக்கல்லூரிகளில் நியமிக்க முடியுமா?' என்று அவர்கள் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
சட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்துறையில் சட்ட ஆசிரியர்களாக பணியில் அமர்த்தப்பட்டவர்களை மட்டுமே பணியில் நியமிக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வந்தது.
ஆனால் இந்த விதிமுறையில் திடீர் திருத்தம் செய்து, சட்ட ஆசிரியர்கள் அல்லாத ஆசிரியர்களையும் நிர்வாகத்துறையில் நியமிக்கும் நடைமுறையை கொண்டுவந்துள்ளனர்.
சட்ட ஆசிரியர்கள் இருக்கும்போது இதுபோன்ற விதிமுறை திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
சின்டிகேட், செனட் ஆகியவற்றிலும் இந்த நடைமுறையை புகுத்தியுள்ளதன் உள்நோக்கம் என்ன? என்பதே பெரும்பாலான சட்டக் கல்லூரி ஆசிரியர்களின் கேள்வி.
இது ஒருபுறம் இருக்க, மாணவர்கள் தங்களுக்கு எதிராகவும் சட்டக்கல்லூரிகள் நிர்வாகம் அநீதியை இழைத்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
சட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்கள் கடைசி செமஸ்டரில் தாங்கள் வேண்டுமென்றே தோல்வியடைய வைக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.
பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தால்தான் வழக்கறிஞராகப் பணியாற்ற பதிவு செய்ய முடியும். இல்லையேல் இயலாது.
எனவே, இதை ஆயுதமாகப் பயன்படுத்தும் சிலர், பணம் கொடுக்கும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதும், பணம் கொடுக்காதவர்களை தோல்வி அடையச் செய்து வாழ்க்கையை நாசமாக்கும் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுபோன்றவர்களின் சதிச் செயலால் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் கூட வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பகிரங்கமாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த மோசமான செயலைக் கண்டித்து அண்மையில் தாங்கள் போராட்டம் நடத்தியதையும் நினைவுகூர்ந்தனர்.
பணத்தைக் கொடுத்து படிப்பவர்களுக்கு பி.ஏ.பி.எல் (ஹானர்ஸ்) என்று பட்டம் கொடுக்கிறார்கள், பணம் கட்ட முடியாத ஏழை மாணவர்களுக்கு பி.ஏ.பி.எல் என்ற பட்டம் அளிக்கிறார்கள். அரசே இது போன்றப் பாகுபாடுடன் செயல்படுவது எந்த வகையில் நியாயம்?
காசு இருந்தால் கல்வியை வாங்கிவிடலாம் என்பதற்கு சட்டக்கல்லூரியே வழிகாட்டியாகத் திகழ்வது வேதனை அளிப்பதாக உள்ளது. என்று மாறும் இந்த நிலை? நீதி தேவதைக்குத்தான் வெளிச்சம்!
நீதி. செங்கோட்டையன்
நன்றி : தினமணி

0 comments: