Friday, August 29, 2008

சமச்சீர் கல்வியா, தரமான கல்வியா?

பொருளாதார முன்னேற்றம்தான் ஒரு நாட்டிற்கு அத்தியாவசியம் எனும் அடிப்படையான கருத்து பழைய காலங்களில் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை. பின்னர் பொருளாதார முன்னேற்றம் ஒன்றினால் மட்டும் எல்லா தரப்பு மக்களும் முன்னேறிவிட மாட்டார்கள் எனும் கசப்பான உண்மை எல்லோருக்கும் புரிந்தது. வேலைவாய்ப்பு பெருகாத முன்னேற்றம் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தது.
குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் சரியான முறையில் அரசின் தலையீட்டினால் பொருளாதார முன்னேற்றத்தின் பலன் எல்லா மக்களையும் சென்றடையாதபட்சத்தில் ஒருதலையான முன்னேற்றமே மிஞ்சும் எனும் அனுபவத்தை நாம் உணர்ந்துள்ளோம்.
பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆன போதிலும் ஏழைகள் ஏழைகளாகவே தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் கவலையளிக்கும் ஓர் அம்சம்.
அதிகமான ஏழை மக்களைக் கொண்ட நாட்டில் இரண்டு நடவடிக்கைகள் மிக முக்கியமானவை ஒன்று கல்வி; மற்றொன்று சுகாதாரம்.
கல்வியைப் பொறுத்தமட்டில் ""எல்லோருக்கும் கல்வி'' எனும் திட்டத்தை ஐக்கிய நாட்டு சபையின் யுனெஸ்கோ (மசஉநஇஞ) நிறுவனம் 2002ம் ஆண்டு உலகமெங்கும் பறைசாற்றி நிதியுதவியும் நல்ல பல ஆலோசனைகளையும் வழங்கியது. அதனை ஏற்று நமது நாட்டிற்கு ஏற்ப சர்வ சிக்ஷ அபியான் எனும் திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
மற்ற எல்லா அரசுத் திட்டங்களையும்போல் இத்திட்டத்திலும் பணம் அதிகம் செலவிடப்படுவதை மட்டும் அறிவிக்கின்றார்களேயன்றி திட்டம் நல்ல பலனை அளிக்கின்றதா எனும் விவரம் தெரிவிக்கப்படவில்லை.
கிராமப்புறங்களிலும், நகரின் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியிலும் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்பது எல்லோரின் விருப்பமாகும்.
தமிழக அரசு சமச்சீர் கல்விக்குழு ஒன்றினை அமைத்து அவர்கள் ஒரு பெரிய அறிக்கையைத் தயாரித்துள்ளனர். அதை முழுமையாக நிறைவேற்றினால் நமது மாநிலத்தில் கல்வியின் வளர்ச்சி அபரிமிதமாகும் என ஆளுங்கட்சி பறைசாற்றுகிறது.
ஆனால் இந்த அறிக்கையை ஆராய்ந்து பார்த்தால் அறிக்கை தயாரித்தவர்கள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியினைச் சரியாகப் புரிந்துகொண்டார்களா? எனும் சந்தேகம் எழுகிறது.
நமது மாநிலத்தில் தற்சமயம் நடைமுறையில் ஐந்து வகையான கல்வி முறைகள் உள்ளன.
அவை, மாநிலவாரி கல்விமுறை, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பாடத்திட்டம், நர்சரி பள்ளிக் கல்வி முறை ஆகியன.
இவ்வாறு ஐந்து கல்வி முறைகள் ஒரே மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதனால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதாகவும், எனவே இவற்றை ஒரே சீராக்கி சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையின் முன்னுரை கூறுகின்றது.
சமச்சீர் கல்வி என்பது நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும், நகரின் எல்லாப் பகுதிகளிலும், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வியை மாணவர்களுக்கும் கற்பிப்பது ஆகும். அதற்கு என்ன நடைமுறை தேவை எனும் வகையில் ஆராய்ச்சி செய்து அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய குழு சமச்சீர் கல்வி என்பது மேலே சொல்லப்பட்ட ஐந்து வகையான கல்வி முறைகளையும் அழித்துவிட்டு ஒரே வகையான கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வகையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அதாவது எல்லோருக்கும் ஒரேவகையான பொது பாடமுறைத்திட்டம் என்பதுதான் சமமான ஒரே சீரான கல்வி கற்பிப்பதற்கான வழி எனும் கருத்து இக் கமிட்டியின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்துள்ளது என்பது உள்ளபடியே கவலை அளிக்கின்றது.
கல்வியில் முறை என்பது வேறு, தரம் என்பது வேறு. எந்த முறையான பாடத்திட்டத்துடனும் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும்.
நாங்கள் சிறுபிள்ளைகளாயிருந்தபோது 4 வயதில் பெற்றோர் கைப்பிடித்து சரஸ்வதி பூஜை நாளில் பள்ளிக்குச் சென்று ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கி காணிக்கை செலுத்தி ஓலைச்சுவடியில் பெயரெழுதப்பட்டு பள்ளியில் சேர்ந்து, ஊரில் உள்ள பெரியவர்கள் எல்லோரிடமும் ஆசி பெற்று, பின் ஆனா, ஆவன்னா பயின்றது நினைவுக்கு வருகிறது.
கிராமத்து கூரைப்பள்ளியில் தரையில் ஆற்று மண், உட்கார குட்டையான பலகைப் பெஞ்சுகள். ஒரே அறையில் முதலாவது பெஞ்ச்சில் முதல் வகுப்பு மாணவர்களும், இரண்டாம் வரிசையில் இரண்டாம் வகுப்பு மாணவர்களும், மூன்றாம் வரிசையில் மூன்றாம் வகுப்பு மாணவர்களும் இருப்போம்.
எங்கள் ஆசிரியரின் மிக சிரத்தையான போதனைகளும் அவரது வீட்டு வேலைகளை மாணவர்களாகிய நாங்கள் முறை வைத்துச் செய்ததும் நினைவில் உள்ளது.
ஐந்தாம் வகுப்பில்தான் முதன்முதலாக ஆங்கிலத்தில் ஏ, பி, ஸி, டி படித்தது நினைவிற்கு வருகிறது. அந்த நாள்களில் இன்ஸ்பெக்டர் வருகிறார் என்பது ஒரு வாரத்திற்கு முன்னரேயே அறிவிக்கப்பட்டு, பள்ளி முழுவதும் பெருக்கி, கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு, மாணவர்கள் யாவரும் சரியாக ஆடையணிந்து தயாராக காத்திருப்போம்.
எங்கள் வகுப்பில் ஆங்கிலத்தில் வாரத்தின் நாள்களை சண்டே, மண்டே என வரிசைப்படுத்தி கூறியதற்காக இன்ஸ்பெக்டரால் பாராட்டப்பட்டு, அதனால் எனது வகுப்பு ஆசிரியர் முகம் மலர்ந்தது நினைவில் நிற்கின்றது.
இதுபோன்ற ஒரு கிராமப்பள்ளியில் நல்லாசிரியர்கள் எங்களுக்கு அளித்த தரமான கல்வியினால் அதிக மதிப்பெண்களுடன் தேறி கல்லூரி படிப்பிற்காக நகரத்திற்கு வந்து விடுதியில் தங்கி, அங்கேயும் மிக அதிகமான கடமை உணர்ச்சியுடன் தரமான கல்வியினைப் போதித்த பேராசிரியர்கள் சொல்லிக் கொடுத்த உன்னதமான நடைமுறைகளைப் பயன்படுத்தி முன்னேறியதும் நினைவில் நிற்கின்றது.
என்ன அப்படி உன்னதமான நடைமுறை என்பதை இன்றைய மாணவர்களின் நலனுக்காகச் சொல்ல வேண்டும். ஒரு 40 பக்கம் நோட்டில் தனக்குத் தெரியாத ஆங்கில வார்த்தைகளைக் குறித்துக் கொண்டு அதற்கான அர்த்தத்தை எழுதி, தனக்குத் தெரிந்த வாக்கியங்களை அமைத்துப் பழக வேண்டும்.
மாதக்கடைசியில் ஆங்கில ஆசிரியர் அதனைச் சரிபார்த்து, திருத்த வேண்டியிருந்தால் திருத்தங்களை எங்களுக்குச் சொல்லித் தருவார்.
இதுபோன்ற வேலையை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்யும் எங்கள் ஆங்கில ஆசிரியருக்கு இது வரையறுக்கப்பட்ட வேலையில்லை. அவராக முன்வந்து மாணவர்களின் கல்வி அறிவு வளர வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் கூடுதலாக அவர் செய்த பணி இது என்பதை இன்றைய மாணவர்கள் உணர வேண்டும்.
பிற்காலத்தில் அமெரிக்காவில் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பில் ஒரு பாடமாகிய அக்கவுண்ட்ஸ் வகுப்பில் ஒரு வருடத்தில் சில மாதங்களுக்கு 31 நாள்களும் மற்றும் சிலவற்றிற்கு 30 நாள்களும் உள்ள கணக்கை எப்படி மனதில் நிறுத்துவது எனும் பயிற்சி நடந்தது.
கை விரல்களை மடக்கி எலும்பின் நுனி 31 நாள்கள் எனவும் இடைப்பகுதி 30 நாள்கள் எனும் எண்ணும் முறையை நான் சொன்னபோது, இது எங்கே நீங்கள் கற்றது என அவர்கள் கேட்க கிராமத்தின் 6ம் வகுப்பில் ஆசிரியர் சொல்லித் தந்தது எனச் சொல்ல முடிந்தது.
அமெரிக்காவில் பள்ளிகளில் வருடத்தின் மாதங்களை ஒரு பேப்பரில் எழுதி 30, 31 நாள்களைக் குறித்து மனப்பாடம் செய்து கொள்வார்களாம். நமது கல்வி முறையைப் பார்த்து அவர்கள் வியந்தது எனது பள்ளிப் படிப்பின் மகிமை எனக்குப் புரிந்தது.
எனவே கடமையுணர்ச்சியுடன், சிரத்தையுடன் தன் மாணாக்கர்களை இட்டுச்சென்ற ஆசிரியர்களே என்போன்ற பலரது கல்வித்திறனுக்குக் காரணம். அந்தக் காலத்தில் அகில இந்தியாவிலும் மிக அதிகமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவானது சென்னை மாகாணத்தில்தான். மஹாராஷ்டிராவில், பிகாரில், மேற்கு வங்கத்தில் மற்றும் குஜராத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இரண்டு பிரிவினர் ஒன்று சென்னை மாகாணத்தைச் சார்ந்தவர்கள். மற்றொன்று ஏனைய எல்லா மாநிலத்தையும் சார்ந்தவர்கள்! இன்றைய நிலைமை தலைகீழ். ஏன்?
அரசியல்வாதிகளையும் மிஞ்சிய வகையில் ஆசிரியர்கள் அணியமைத்து மேடையில் அரசியல் தலைவர்களுக்கு இணையாக முழங்கி வருடம் முழுவதும் அரசியல் செய்கின்றனர்!
ஓட்டு வங்கி அரசியல் காரணங்களால் ஆளுங்கட்சியும் அவர்களை எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. சங்க உறுப்பினர்களைக் கண்டு பள்ளி நிர்வாகம் பயப்படும் சூழ்நிலை. எந்த ஒரு பள்ளிக்கும் கல்வித்துறை இன்ஸ்பெக்டர்கள் ஆய்வுக்குச் செல்கிறார்களா என்பது தெரியவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது 56,000 பள்ளிகளில் 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் பயில்கிறார்கள். 4 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.
இப்பள்ளிகளின் தரத்தையும், ஆசிரியர் பணியின் தன்மையையும் ஆய்வு செய்ய போதிய பணியாளர்கள் இல்லை எனவும் எனவே அதிகப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் சமச்சீர் கல்வி அறிக்கை கூறுகின்றது.
ஏறக்குறைய 3,500க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு 10 ஆய்வாளர்களே உள்ளனர் எனவும், அதிகமான ஆய்வாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கை கூறுகிறது. ஆனால் இந்த 10 ஆய்வாளர்கள் 500 பள்ளிகளையாயினும் ஆண்டு ஒன்றிற்கு ஆய்வு செய்தனரா எனும் கணக்கினைப் பார்க்கத் தவறி விட்டனர் சமச்சீர் குழுவினர்.
ஆய்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன என்பதுதான் உண்மை. 2002ம் ஆண்டில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அல்டர்மேன் எனும் ஆராய்ச்சியாளர் எல்லாப் பள்ளிகளையும் ஆராய்ந்து பள்ளிகளின் கல்வித்தரம் உயர என்ன காரணிகள் தேவை என்பதை அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
அதில் ஊக்கத்துடனும் நன்னெறியுடனும் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கே முதலிடம் கொடுத்துள்ளார்.
எங்கள் கிராமத்து மக்கள் எல்லோரும் பள்ளி ஆசிரியர்களை மிக்க கண்ணியத்துடன் நடத்துவார்கள்.
தங்கள் வருங்காலச் சந்ததியாரை உருவாக்கும் பணி செய்யும் இவர்கள்தான் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை என்ற சூழ்நிலை அன்றைய கிராமங்களில் இருந்தது.
நாங்கள் பெரிய பதவிக்கு வந்த பின் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மிகப் பெருமிதத்துடன் எங்கள் பெயரைக் கூறி என் மாணாக்கர்கள் இவர்கள் என தனது ஓய்வுபெற்ற வயதிலும் பெருமையுடன் அவர்கள் கூறி மகிழ்ந்தது நினைவிலாடுகின்றது.
பாகிஸ்தானிலும், வியட்நாமிலும், நம் நாட்டில் ஆந்திரப் பிரதேசத்திலும், ஆராய்ச்சி செய்த யுனெஸ்கோ நிறுவனம், ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் பெற்ற பட்டங்களைவிட அவர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் தன்மை பெற்றிருந்தால் அதுவே நல்ல மாணாக்கர்களை உருவாக்குகின்றது எனும் முடிவிற்கு வந்துள்ளது.
இவையெல்லாவற்றையும்விட தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் ஆகிய இரண்டும் ஒரேநேரத்தில் இயங்க முடியும். மிக அதிகமான கட்டணங்களை வசூல் செய்து கொண்டு உயர் கல்வியை வழங்கும் தனியார் பள்ளிகளும், இலவசக் கல்வியளிக்கும் கார்ப்பரேஷன் மற்றும் அரசுப் பள்ளிகளும் ஒரேநேரத்தில் இயங்கலாம். தரமான கல்வியை அரசுப் பள்ளிகளும் வழங்குமாறு கண்காணிப்புப் பணிகளை அரசு கல்வித்துறை முடுக்கிவிட வேண்டும்.
ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களும், திருச்சி ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியும், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் அரசுத் துறையில் இயங்கி உலகத் தரத்து பொறியாளர்களை உருவாக்கும்போது அரசு கலைக்கல்லூரிகளும், பள்ளிகளும் ஏன் தரத்தினை உயர்த்தக் கூடாது எனும் கேள்வி எழுகிறது.
""முன்னேற்றத்திற்கான திட்டங்களை நான் வேறு நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எங்கள் நாட்டின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்து எப்போது எப்படி உயரிய நடவடிக்கைகள் இருந்தன என்பதைக் கண்டுபிடித்துச் செயலாற்றுவேன்'' என இத்தாலியின் முசோலினி சொல்லியதை நினைவில் கொள்வோம். நம் தமிழ்நாட்டின் பழைய கால அனுபவத்தைச் செயலாக்குவோம். தரமான கல்வியை அளிப்போம்.
கிராமத்து மாணவனுக்கும் நகரத்தின் சிறந்த பள்ளி மாணவனுக்குக் கிடைக்கும் தரமான கல்வியை அளிப்பதே ""சமச்சீர் கல்விமுறை'' எனும் உண்மையை உணர்ந்து கொண்டு நடவடிக்கை எடுப்போம்!
என். முருகன்
நன்றி :தினமணி

0 comments: