Thursday, August 28, 2008

கள்ளச்சந்தைக்கு காரணமாகாதீர்!

தமிழகத்தைவிட அதிக மின்பற்றாக்குறை கர்நாடக மாநிலத்தில் நிலவுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை கோலோச்சும் பெங்களூர் நகரில், மின்தடை இருந்தாலும், அங்கு டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால் சென்னையில் ஏற்படுகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தட்டுப்பாடு.
எரியும் நெருப்பில் "பெட்ரோல்' ஊற்றியதைப் போல, ""செப்டம்பர் 15ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது; காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரைதான் பெட்ரோல் டீசல் விற்பனை நடைபெறும்'' என்று தமிழ்நாடு பெட்ரோல் முகவர் சங்கம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மூடுவதாலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை விற்பனையை நிறுத்தி வைப்பதாலும் ஊழியர் சம்பளம் மற்றும் மின்கட்டணத்தில் சேமிப்பு ஏற்படும் என்று சங்கத் தலைவர் சொல்லும் காரணம் வியப்பாக இருக்கிறது.
பெட்ரோல் நிலையங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் அல்ல. "கடைவிரித்தோம் கொள்வாரில்லை' என்ற கவலைக்கு வாய்ப்பே இல்லாதவர்கள் பெட்ரோல் முகவர்களும் சமையல் எரிவாயு முகவர்களும்தான்! இவர்களின் பிரச்னையே தாங்கள் கேட்கும் அளவுக்கு வழங்கப்படுவதில்லை என்பதுதான்.
தங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு குறைவின்றி பெட்ரோலியப் பொருளை ஆயில் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அவர்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தால் அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதைவிடுத்து, இரவில் விற்பனையை நிறுத்துவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறப்பதில்லை என்ற முடிவும் பிரச்னைக்கு தீர்வு ஆகாது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் நிலையங்களை திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாலும், இப்போதும்கூட எல்லா பெட்ரோல் நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவுகளிலும் திறக்கப்படுவதில்லை. நெடுஞ்சாலைகளிலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பெட்ரோல் நிலையங்கள் இரவிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுகின்றன. இரவுப் பயணம் மேற்கொள்வோர் இவற்றையே நம்பியுள்ளனர். இப்போது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, இவை செயல்படாதென்றால், நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வோர் மட்டுமல்ல, உள்ளூர் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவிய காலங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு லிட்டருக்கு மிகாமலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10 லிட்டருக்கு மிகாமலும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தபோது யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெட்ரோல் நிலையங்களின் தன்னிச்சையான இந்த முடிவை நியாயமானதாகவும் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நடவடிக்கையாகவும் பொதுமக்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர். ஆனால் தற்போது பெட்ரோல் முகவர் சங்கம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களுக்கு இடையூறாக மாறுவது மட்டுமல்ல, கள்ளச்சந்தைக்கும் வழி வகுக்கும். இரவு நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல், டீசலை கேன்களிலும் பாட்டில்களிலும் அடைத்து வைத்து, இரு மடங்கு விலைக்கு விற்கப்படும் நிலைமை உருவாக பெட்ரோல் முகவர் சங்கமே காரணமாக ஆகிவிடலாமா? இவர்களால் வேலை இழக்கப்போகும் பெட்ரோல் நிலைய இரவு நேர ஊழியர்கள் வேறு எந்த தொழிலுக்குப் போக முடியும்?
பெட்ரோலியப் பொருள்களில் கள்ளச்சந்தை மூலம் கொழுத்த லாபம் தருவது தற்போதைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே. இனி பெட்ரோல், டீசலுக்கும் கள்ளச் சந்தை என்றால்...நடுத்தர வருவாய் பிரிவினருக்குத் திண்டாட்டம்தான். பெட்ரோல் முகவர் சங்கம் சமூக நலன் கருதியும், தங்கள் தொழிலாளர் நன்மை கருதியும் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பெட்ரோல் நிலையமும் கடந்த ஓராண்டில் விற்ற பெட்ரோல், டீசல் அளவை கணக்கிட்டு, அந்த அளவை குறைந்தபட்சமாக வைத்துக்கொண்டு, அந்தப் பகுதியில் எத்தனை சதவீதம் வாகனங்கள் அதிகரித்துள்ளதோ அதற்கேற்ப பெட்ரோல், டீசலை அதிகரித்து வழங்க வேண்டிய பொறுப்பு ஆயில் நிறுவனங்களுக்கு உள்ளது.
தொழில்நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் டீசலை ஆயில் நிறுவனங்களிடம் நேரடியாக, பெட்ரோல் நிலையங்கள் பெறும் அதே கொள்முதல் விலையிலேயே பெறுவதற்கு அரசு வகை செய்தால், தொழில்நிறுவனங்களும் பயன்பெறும். இதனை தொழில்நிறுவனங்களுடன் அரசும் ஆயில் நிறுவனங்களும் பேசித் தீர்மானிக்கலாம்.
நன்றி : தினமணி

0 comments: