Friday, August 29, 2008

பதவியின் விலை பதவி!

பேரம் படிந்தது; அரசு பிழைத்தது; பதவி நீடித்தது. இதனால் பிரதமரின் மரியாதை அதிகரித்ததா, ஆளும் கட்சியின் செல்வாக்கு அதிகரித்ததா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஆட்சி கவிழாமல் இருந்தது என்பதுடனும், பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் என்பதுடனும், அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இருந்த தடை விலகியது என்பதுடனும் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங்கைப் பொருத்தவரை அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க அவர் தயாராக இருக்கலாம். ஆனால், அதை இந்திய ஜனநாயகம் தாங்கியாக வேண்டி இருக்கிறதே, அதுதான் வேதனையிலும் வேதனை. தனது பதவியையும், ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சார்பில் தரப்பட்டிருக்கும் விலை, மக்களாட்சித் தத்துவத்தின் மீது இருக்கும் மரியாதையைக் குலைத்து, மக்களுக்கு அதில் வெறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டிருக்கிறது.
ஆதிகேசவலு நாயுடு என்பவர் ஆந்திராவில் ஒரு மிகப்பெரிய சாராய வியாபாரி. நரசிம்ம ராவ் காலத்தில் காங்கிரஸ்காரராக இருந்த ஆதிகேசவலு நாயுடு, சந்திரபாபு நாயுடு பதவிக்கு வந்ததும் தெலுங்கு தேசம் கட்சிக்குத் தாவிவிட்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரபாபு நாயுடு ஆதிகேசவலு நாயுடுவை, திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக நியமித்தார்.
ஒரு சாராய வியாபாரியை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக நியமித்து, அந்தக் கோயிலின் புனிதத்தையே சந்திரபாபு நாயுடு கெடுத்துவிட்டார் என்று எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்புக்குத் தலைமை வகித்தவர் இன்றைய முதல்வர் ராஜசேகர ரெட்டி.
அது பழைய கதை. இப்போது ஆதிகேசவலு நாயுடு ஒரு மக்களவை உறுப்பினர். அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுடன் அவர் நடத்திய பேரத்தின் விளைவாக, அரசுக்கு ஆதரவாகக் கட்சி மாறி வாக்களித்தவர்களில் ஆதிகேசவலு நாயுடுவும் ஒருவர் என்று நம்பப்படுகிறது. இப்போது, அதற்கான விலையை அளித்து ஆதிகேசவலு நாயுடுவை கெளரவித்திருக்கிறார் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி. ஆமாம், அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அவர் மீண்டும் திருப்பதி தேவஸ்தானத்தில் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆந்திராவில் இப்படி என்றால், ஜார்க்கண்டில் இன்னும் ஒருபடி மேலே போய், மிகப்பெரிய விலையைக் கொடுத்திருக்கிறது ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. கிரிமினல் குற்றங்கள் இருப்பதால் ஒருவரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளத் தயங்கியவர்கள், இப்போது அவரை மாநில முதலமைச்சராக்க முன்வந்திருக்கிறார்கள். காரணம்? அரசுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்ததற்கு நன்றிக்கடன்!
தனது முதல் சட்டப்பேரவைத் தேர்தலை கடந்த பிப்ரவரி 2005ல் சந்தித்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை ஐந்து அமைச்சரவைகள் அமைந்துவிட்டிருக்கின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் ஆதரவு கொடுப்பதற்குப் பிரதி உபகாரமாக மத்திய அமைச்சர் பதவி தனக்குத் தரப்படுகிறது என்று அப்போதே தெரிவித்திருந்தார். பொறுத்துப் பார்த்தார். சிபு சோரனுக்குத் தந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவதாகக் காணோம்.
ஜார்க்கண்ட் கூட்டணி அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கி, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி, பெரிய ரகளையே செய்துவிட்டார். வேறு வழியில்லாமல், மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளத் தகுதி இல்லாதவர் என்று ஓரம்கட்டப் பட்டவரை, மாநில முதலமைச்சராக்கி அழகு பார்க்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி.
அரசியல் என்பது பதவி மற்றும் ஆட்சியை மையமாக்கி நடத்தப்படும் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் தன்மானத்தை இழப்பதும், பேரம் பேசுவதும், தார்மிக நெறிகளுக்கு மாறாக நடப்பதும், தவறான நபர்களுக்குப் பதவிகளை வழங்குவதும் அரசியலின் அடிப்படையான மக்களாட்சித் தத்துவத்தைக் கேலிப்பொருளாக்கி விடும்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர், பொருளாதார நிபுணர். திறமையான நிதியமைச்சர், நேர்மையான மனிதர், கெளரவமான பிரதமர் என்றெல்லாம் இத்தனை வருடங்களாகச் சேர்த்து வைத்திருந்த பெயரை எல்லாம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிக்காகப் பேரம் பேசிவிட்ட டாக்டர் மன்மோகன் சிங்கிற்காகப் பரிதாபப்படுவதைத் தவிர வழியில்லை. அவருக்காக மட்டுமா, இந்திய ஜனநாயகத்துக்காகவும்கூட!
நன்றி : தினமணி

0 comments: