Wednesday, August 27, 2008

போகுமிடம் வெகுதூரம்!

"கடந்த முறை ஒன்று கிடைத்ததற்கு... இந்த முறை மூன்று' என்று ஆறுதல்பட்டுக் கொள்வதைத் தவிர, பெய அளவில் பெருமிதம் அடைய ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது. ஒலிம்பிக் திருவிழாவில் ஒரே வீரருக்கு 8 தங்கம், 3 தங்கம் என அமெக்காவும், ஜமைக்காவும் பதக்க அறுவடையில் ஈடுபட்டபோது, 110 கோடி மக்களின் பிரதிநிதியாகச் சென்ற இந்தியக் குழு பெற்ற மூன்று பதக்கங்கள், ஆறுதலைத் தவிர வேறு எதைத் தந்துவிட முடியும்? வெற்றிக்கான திறமை இங்கு உள்ளது; சயான வழிகாட்டுதலும், தயார்படுத்துதலும் இல்லை என்று வழக்கமான தோல்விக் காரணிகளை ஆராயும் வேளையில் சில ஆத்ம பசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒலிம்பிக்கில் இந்திய அணியின் ஒட்டுமொத்த திறமையை மதிப்பிடும் அதே நேரத்தில் தனிப்பட்ட வீரர்கள் சிலன் அலட்சியத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தங்கம் வென்ற அபினவ், வெண்கலம் வென்ற சுசில்குமார், விஜேந்தருக்கு ஒரு "சல்யூட்', காலிறுதிக்கு முன்னேறிய சாய்னா, ஜிதேந்தர், அகில்குமார் ஆகியோருக்கு ஒரு "சபாஷ்' போடும் வேளையில், அலட்சியத்தால் வாய்ப்பை கோட்டைவிட்டவர்களுக்கு ஒரு "குட்டு' வைத்தால் என்ன என்றே தோன்றுகிறது. ஆசிய அளவில் சாதனை படைத்த, நம்பிக்கை நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்ட நீளம்தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், ஒலிம்பிக் போட்டியில் மூன்றுமுறையும் "ஃபவுல்' செய்து, தகுதிச் சுற்றிலேயே வெளியேறி நம்பிக்கையைப் பொய்யாக்கினார். "கணுக்கால் காயம்' என அஞ்சு மிகச் சாதாரணமாக அதற்குக் காரணமும் கூறினார். புற்றுநோயின் கொடூரத் தாக்குதல் இருந்தாலும் 10 கி.மீ. நீச்சல்போட்டியில் தங்கம் வென்ற நெதர்லாந்து வீரர், விபத்தில் ஒரு காலை இழந்தாலும் நீச்சல் போட்டியில் பங்கேற்று பந்தயதூரத்தை நிறைவுசெய்த வீராங்கனை போன்றவர்களின் வெற்றிக்கான போராட்டத்துடன் அஞ்சு கூறிய காரணத்தை ஒப்பிட்டுப்பார்த்தால், அவர் யாரை ஏமாற்றுகிறார் என்பது புயும். அடுத்து டென்னிஸ் புயல்(?). உடை விஷயத்தில் இந்தியாவில் ஆங்காங்கே கிளம்பிய எதிர்ப்பையடுத்து, இந்தியாவில் இனி விளையாடவே மாட்டேன் என்று சபதம்(!) செய்து வெளிநாடுகளில் மட்டுமே விளையாடி வந்த சானியா. சொந்த நாட்டில் விளையாட மாட்டேன் என்று கூறியவரால், சொந்த நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் அந்நிய மண்ணில் எப்படி விளையாட முடியும்? முடியாது என்று முதல்சுற்றிலேயே தோற்று வெளியேறி பதில்சொன்னார் சானியா. டென்னிஸ் இரட்டையர் போட்டியிலும் சானியா சுனிதா ஜோடி 2வது சுற்றில் தோற்றுப்போனது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது வரை இருவரும் சேர்ந்து பயிற்சி ஆட்டத்தில்கூட ஆடியது இல்லையாம். தொடர்ந்து... டென்னிஸ் இரட்டையர்களாகப் போற்றிப் புகழப்பட்ட பயஸ், பூபதி. பல சர்வதேச போட்டிகளில் மகுடம் சூடிய இந்த ஜோடி, "ஈகோ' மோதலால் அண்மைக்காலமாக பிந்தே இருந்தது. பின்னர், "நாட்டு நன்மைக்காக' வேறு வழியின்றி ஒலிம்பிக்கில் சேர்ந்துவிளையாடுவதாக அறிவித்தனர். வெற்றி என்ன மந்திரத்தில் காய்க்கும் மாங்காயா? போட்டிக்கு முந்தையநாள் வரையில் சேர்ந்து பயிற்சி செய்யாமல், நேராக மைதானத்திற்கு வந்தால், தோற்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இவை தனிப்பட்ட குறைபாடுகள் என்றால், விளையாட்டில் அரசியல் விளையாடுவதை நிரூபித்தது ஒரு சம்பவம். பளுதூக்கும் வீராங்கனை மோனிகா ஊக்கமருந்து உட்கொண்டதாக கடைசி நேரத்தில் பிரச்னை கிளப்பி, அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டது. காலம் கடந்தபிறகு அவர் மீதான குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. "தனக்கு எதிரான சதியால் தான் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாக' மோனிகா குமுறலை வெளிப்படுத்தினார். ஒலிம்பிக்கில் பங்கேற்று இருந்தால் மோனிகா பதக்கம் வென்றிருப்பாரா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அவரது ஒலிம்பிக் வாய்ப்பு பறிக்கப்பட்டதற்கு யார் காரணம்? அவசரப்பட்டு குற்றம்சாட்டி பின்னர் மறுத்தது ஏன் என்று ஒரு விசாரணைகூட நடத்தப்பட்டதாகத் தெயவில்லை. அடுத்து காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் ஆசை உள்ளது. ஆனால், அடிப்படையிலேயே ஏராளமான குறைபாடுகளுடன் விளையாட்டில் இன்னும் தவழும் குழந்தையாகவே இருக்கிறது. மக்கள்தொகையில், தொழில்வளர்ச்சியில், தகவல்தொழில்நுட்ப புரட்சியில் வீறுநடைபோடும் இந்தியாவை விளையாட்டில் மட்டும் எத்தியோப்பியா, நைஜீயா, அஜர்பைஜான், ஜிம்பாப்வே போன்ற குட்டிதேசங்கள் புறந்தள்ளி முந்துவது பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது. ரயில்வேயில் வேலைசெய்து கொண்டே மல்யுத்தத்தில் கவனம் செலுத்தி அதில் பதக்கமும் வென்ற சுசில்குமார் போல எல்லோரும் அமைந்துவிட மாட்டார்கள். எத்தனையோ திட்டங்களுக்கு கோடி கோடியாக செலவு செய்யும் மத்திய, மாநில அரசுகள்... நாட்டின் கெளரவத்தை உலக அரங்கில் பறைசாற்றும் விளையாட்டுத் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே சிறந்த வீரர்களை தத்தெடுத்து உலகளாவிய போட்டிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து தயார்செய்ய வேண்டும். திறமையான வீரர்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் திறமையான பயிற்சியாளர்களும். விளையாட்டில் அரசியல் விளையாடுவதை அனுமதிக்கக் கூடாது. இன்னும் ஏராளமான நடவடிக்கைகள் அவசியம். ஏனெனில், விளையாட்டுத் துறையில் நாம் போகுமிடம் வெகுதூரம்!
எஸ். ராஜாராம்
நன்றி :தினமணி

0 comments: