Monday, August 18, 2008

பத்து ரூபாய் போராட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சின்ன கிராமம் தீர்த்தான்பட்டி. சில வாரங்களுக்கு முன் ஒரு நாள் இந்தக் கிராம மக்களால் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகம் முற்றுகையிடப்பட்டது.
அதற்கு முதல் வாரம் பெரம்பலூர் மாவட்டத்தில் பசும்பலூர் அருகேயுள்ள சிற்றூர், இரூர்சிற்றூர், செட்டிக்குளம்சிற்றூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அடுத்தடுத்த நாள்களில் கடும் வெயிலில் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூட்டையும் போலீஸாரின் கண்மூடித்தனமான தடியடி தாக்குதலையும் சந்தித்தனர் திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டணை கிராம மக்கள்.
இவையெல்லாம் எதற்காகத் தெரியுமா?
பத்து ரூபாய்க்காக!
ஆமாம். ஆச்சரியப்படாதீர்கள். இந்தப் பத்து ரூபாய்க்கான போராட்டக் காட்சிகள் மத்திய அரசின் வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்களில் மிக சகஜமானவை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவுத் திட்டமாகவும் அக்கட்சியின் "இளவரசர்' ராகுல் காந்தியின் விருப்பத் திட்டமாகவும் "சிலாகிக்கப்படும்' திட்டம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்.
புதிய பொருளாதாரக் கொள்கையால் கிராமப்புற வேலைவாய்ப்புகளை ஒழித்துக்கட்டிய பாவத்திலிருந்து தப்பிக்க காங்கிரஸ் தேடிக்கொண்ட ஓட்டுவேட்டை வழிகளில் இதுவும் ஒன்று.
நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், கிராமப்புறங்களில் வாழும் ஒரு குடும்பத்துக்கு, ஓர் ஆண்டில் வெறும் 100 நாள்கள் மட்டும் சாதாரண உடல் உழைப்பு சார்ந்த வேலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. (மீதி நாள்களில் வயிற்றில் ஈரத்துணிதான்).
நீர்நிலைகளைத் தூர்வாரும் சீரமைக்கும் பணி, பாசன மேம்பாட்டுப் பணி, ஊரகப் பகுதிகளில் இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முக்கியப் பணிகளாகும். கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களில் 18 வயதான கூலி வேலைசெய்யத் தயாராகவுள்ள அனைவரும் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யத் தகுதியுடையோர்.
வேலை வேண்டுவோர் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டு தங்களுக்கான வேலையைக் கேட்டு ஊராட்சி நிர்வாகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அளிக்கப்படும் வேலை ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் அளிக்கப்படலாம். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்சக் கூலி வாரக் கடைசியிலோ 15 நாள்களுக்குள்ளாகவோ வழங்கப்படும்.
சரி. கூலி எவ்வளவு தெரியுமா? ஒரு நாளைக்கு ரூ. 80!
ஆனால் இந்த எண்பது ரூபாயும்கூட வேலை செய்வோருக்கு முழுமையாகக் கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் இப்போதைய பிரச்னை.
ஏன்?
இத்திட்டத்தின் கீழ், ஒரு பணி மேற்கொள்ளப்படும்போது அதற்கான திட்ட மதிப்பீட்டையும் காலக்கெடுவையும் மதிப்பிடும் அலுவலர்கள், தங்கள் கணக்குத் தவறும்போது தொழிலாளர்கள் தலையில் கை வைத்துவிடுவதே காரணம்.
இதற்கு நம் அலுவலர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?
""இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் வேலைகள் பெரும்பாலும் மண் வேலைகள். ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ. 80 கூலியாக பெற சாதாரண மண் உள்ள பகுதியில் 83.70 கன அடி; கடின மண் உள்ள பகுதியில் 57.56 கன அடி வேலை பார்க்க வேண்டும். குழு குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கான வேலையையும் குறிப்பிட்டே தருகிறோம். ஆனால், சிலர் சரியாக வேலை பார்ப்பதில்லை. எஞ்சும் வேலையால் திட்ட மதிப்பீட்டு நாள்கள் கூடுதலாகிவிடுகிறது. எனவே, கூலியைப் பகிர்ந்து தர வேண்டியதாகிவிடுகிறது. இதனாலேயே, ரூ. 80க்குப் பதிலாக ரூ. 70, ரூ. 60 எனக் கூலியைக் குறைத்துத் தர வேண்டியிருக்கிறது'' என்கிறார்கள் நம் அலுவலர்கள்.
ஆனால், தொழிலாளர்கள் சொல்லும் காரணங்கள் வேறு.
""மழைக்காலத்தில் மண் வெட்டும் பணி இலகுவாக இருக்கும். ஆனால், கோடையில் பதம் மாறும். தவிர, ஊருக்கு ஊர், பகுதிக்குப் பகுதி மண்வாகு மாறுபடும். ஆனால், அலுவலர்களோ இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. அறைக்குள் உட்கார்ந்து அவர்கள் போடும் கணக்கு, நடைமுறைக்கு ஒத்துவருவதில்லை'' என்கிறார்கள் தொழிலாளர்கள்.
அலுவலர்களின் வாதத்தையே எடுத்துக்கொள்வோம். சிலர் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்பதற்காக எல்லோருடைய வயிற்றிலும் அடிப்பது எப்படி நியாயமாகும்? வேலையை ஆள் வைத்துக் கண்காணிக்காதது யாருடைய தவறு?
பத்து ரூபாய் என்பது அத்தனை சாதாரணமானதல்ல அலுவலர்களே!
நன்றி : தினமணி

0 comments: