Sunday, August 31, 2008

இலங்கையில் வ.உ.சி.

1906அக்டோபர் 16ல் தூத்துக்குடியில் வ.உ.சி.யின் பெருமுயற்சியால் ""சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிமிடெட்'' எனும் பெயரில் சுதேசிக் கப்பல் கம்பெனி அமைக்கப்பட்டது.
தமது அருமைச் சீடர் சிதம்பரம் பிள்ளையின் புதிய சுதேசிய முயற்சியை அறிந்து திலகர் பாராட்டியது, சென்னை "சுதேசமித்திரன்' இதழில் (24101906) பின்வருமாறு செய்தியாக வெளியிடப்பட்டது.
""திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானியாகிய சிதம்பரம்பிள்ளை, தூத்துக்குடிக்கும் சிலோனுக்கும் சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்திற்கு அவர் செய்திருக்கும் பெரும் பணிவிடையாகும்''.
2782008 "தினமணி'யில் "தூத்துக்குடியில் செப்டம்பர் 5ல் சுதேசிக் கப்பல் நூற்றாண்டு விழா' எனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
2006ல் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய "நூற்றாண்டு விழா'வை 2008லாவது நடத்த முற்பட்டவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் பெரும்பாலோர் அறிந்திராத வ.உ.சி.யின் இலங்கைப் பயணம் பற்றிய செய்தி அறியப்பட வேண்டியதாகும்.
சுதேசி நாவாய்ச் சங்கத்திற்கு ஆதரவு திரட்ட வ.உ.சி. மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுள் ஒன்று, இலங்கைப் பயணம் ஆகும்.
வ.உ.சி. இலங்கை, கொழும்பு நகரில் பேட்டா எனும் பகுதியில் வாழ்ந்த தமிழ் வர்த்தகர்களின் ஆதரவைத் திரட்டச் சென்றார்.
கொழும்பு நகரில் இருந்து அக்காலத்தில் வெளிவந்த "தி சிலோன் அப்சர்வர்' எனும் மாலை நாளிதழில் ஏப்ரல் 6 (வெள்ளிக்கிழமை), 1906 இதழில் ""இலங்கையில் சுதேசி இயக்கம் கொழும்பு தூத்துக்குடியிடையே புதிய நீராவிக்கப்பல்'' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
இந்தச் செய்தியில் வ.உ.சி.யை பேட்டி கண்டு அவருடைய கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் சுருக்கம் வருமாறு.
""இந்தியாவில் சில காலத்திற்கு முன்பு தொடங்கிய சுதேசிய இயக்கம் வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 16க்குப் பிறகு விறுவிறுப்பு பெற்றது.
இதனுடைய பிரதிநிதியாக தூத்துக்குடி வழக்கறிஞர் (பிளீடர்) நம்மிடையே வந்துள்ளார். இவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் புரியும் செட்டிகளுக்குமிடையே அவர் ஆங்கிலம் அறிந்தவர் என்பதைத் தவிர வேறுபாடு ஏதும் இல்லை.
அப்சர்வரின் பிரதிநிதியொருவர் இன்று காலை பேட்டாவில் தங்கியிருந்த மிஸ்டர் சிதம்பரம் பிள்ளையை சில நிமிடங்கள் சந்தித்து சுதேசி இயக்கம் தொடர்பாக உரையாடினார்.
ஐரோப்பிய வர்த்தகத்தை பகிஷ்கரிப்பதே இந்த இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்றும், "அந்நிய வர்த்தகம்' என்றால் "பிரிட்டிஷ் வர்த்தகமும்' அடங்கும் என்று மிஸ்டர் பிள்ளை கூறினார்.
இந்தியத் தொழில்களை மேம்படுத்தவே இந்த இயக்கம் முக்கியமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலோர் ஆதரவளித்துள்ளனர். இப்பொழுது இலங்கையின் ஆதரவைப் பெற விரும்புகின்றோம்.
இங்கு இயக்கத்தின் கொள்கைகளை விளக்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் போவதாகவும், முக்கியமானவர்களைச் சந்திக்கப் போவதாகவும் மிஸ்டர் பிள்ளை தெரிவித்தார்.
கொழும்பு தூத்துக்குடிக்கு இடையே நீராவிக்கப்பல் 20ம் தேதியில் இருந்து நாள்தோறும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிது காலம் கொழும்பு தூத்துக்குடிக்கு இடையே நிகழும் சேவை, பிறகு கடற்கரையைச் சுற்றி நிகழும் என்றும் மிஸ்டர் பிள்ளை கூறினார்.
புதிய கப்பல் சேவையானது, தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து தென்னிந்தியாவுக்கும் கூலிகளை ஏற்றிச் செல்லாது என்பதை சுதேசிய இயக்கத்தின் பிரதிநிதியிடமிருந்து அறிந்தோம்.
இந்த விளையாட்டை பி.ஐ. கம்பெனி சில காலத்திற்கு முன்பு தொடங்கியது என்றும், கூலிகளைக் கட்டணமின்றி இலவசமாக ஏற்றிக்கொண்டும், உடுக்க சிறிதளவு துணியும் கொடுத்தது என்றும் அவர் கூறினார்.''
அதிகார வருக்கத்தின் பக்கபலத்துடன் தூத்துக்குடி கொழும்பு கப்பல் போக்குவரத்தை நடத்திய "பி.ஐ.எஸ்.என்.'' எனும் பிரிட்டிஷ் கம்பெனியை எதிர்த்து வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனி இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
உதயதாரகை
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து 1841 முதல் அமெரிக்கன் மிஷன் சார்பில் வெளிவந்து கொண்டிருந்த, "மார்னிங்ஸ்டார் உதயதாரகை' எனும் நாளிதழிலும் வ.உ.சி.யின் இலங்கை விஜயம் குறித்து எழுதப்பட்டது.
ஏப்ரல் 12 (வியாழக்கிழமை), 1906ல் வெளிவந்த ""சுதேசாபிமானக் கிளர்ச்சி தி ஸ்வதேசி மூவ்மெண்ட்'' எனும் தலையங்கத்தில் வ.உ.சி. பற்றியும், "தி சிலோன் அப்சர்வர்' செய்தியும் இடம் பெற்றுள்ளன.
இலங்கையிலும் சுதேச தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று "உதயதாரகை' எழுதியது. வ.உ.சி. பற்றிய செய்தி மட்டும் இங்கு பின்வருமாறு எடுத்தாளப்படுகின்றது.
""வங்காளத்தில் தொடங்கிய இவ்வெழுச்சி இந்தியா முழுவதிலும் பரந்து இப்போது இலங்கையிலும் தாவியிருக்கின்றது... இலங்கையிலும் இவ்வாறு உபந்நியாசங்கள் செய்வதாய் தூத்துக்குடி வாசராகிய மெஸ் சிதம்பரம் பிள்ளை என்னுமொருவர் கொழும்பு வந்திருக்கின்றனர்.
""ஒப்சேவர்' பத்திரிகைக் கடிதரொருவர் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர், "சுதேச கைத்தொழில் முயற்சிகளைத் தைரியப்படுத்தி பிற நாட்டுப் பொருள்களின் வரவைக் குறைப்பது மேற்குறித்த எழுச்சியின் நோக்கமென்றுங்..... கூறினார்....
தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையில் பிரித்தானிய கொம்பனிக் கப்பல்களுக்கெதிராய், பம்பாய்ப் பட்டணத்திலுள்ள "ஈசாயீ' கொம்பனியாரின் கப்பல்களோடும்படி செய்வதும் மேற்குறித்த சங்கத்தவர்களின் தீர்மானமென மெஸ். சிதம்பரப்பிள்ளை கூறுகின்றனர். இந்த பம்பாய்க் கொம்பனியாரின் கீழ் 50 கப்பல்கள் அங்கு மிங்குமோடி வியாபாரப் பொருள்களையும் பிரயாணிகளையுமேற்றித் திரிகின்றன.
தொடக்கத்தில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையிலோடும். சில நாள்களாய் வேறு கப்பல்களும் சேர்ந்து இலங்கையைச் சுற்றியும், இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலும் ஓடித் திரியும். இந்த மாதம் 20ம் தேதி முதல் இக் கப்பல்கள் ஓடத் தொடங்குமாம்!
வ.உ.சி. யின் இலங்கைப் பயணச் சுதேச இயக்கச் சொற்பொழிவுகள் அங்கிருந்த இதழ்களிலும், தமிழக இதழ்களிலும் பதிவாகியுள்ளனவா? என்பதும் கண்டறியப்பட வேண்டியதாகும்.
பெ.சு. மணி
(கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர்)
நன்றி ; தினமணி

0 comments: