Thursday, September 4, 2008

நாடு எங்கே செல்கிறது?

""பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்'' என்றார் பாரதியார். அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டை விடுதலை செய்வதற்காக ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் கடமையை அவர் இதன் மூலம் நினைவுபடுத்துகிறார்; உரிமைக்காகப் போராடும்படி தூண்டுகிறார்.
சுதந்திரம் பெற்ற நாட்டின் நிலை என்ன? உடல், பொருள், உயிரை அர்ப்பணித்தவர்களின் தியாகங்களுக்கு மரியாதை உண்டா? விடுதலை பெற்ற தேசம் செல்லும் திசைவழி என்ன? சுதந்திரத்தின் பயனை மக்கள் அனுபவிக்கிறார்களா? விடுதலை பெற்றதன் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?
உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்த நாடு இது. பல நாட்டு மன்னர்களும், மாவீரர்களும் படையெடுத்து வருவதற்கு அதன் செல்வ வளமும், சிந்தை வளமும்தானே காரணமாக இருந்தது. இப்போது எல்லாவற்றையும் இழந்து நிராயுதபாணியாக நிற்பது பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.
நாட்டையும், மக்களையும் முன்னேற்றுவதாகக் கூறிக் கொண்டு தங்களையும், தங்கள் சொந்தங்களையும் முன்னேற்றிக் கொள்வது ஆளும் கட்சிகளுக்கு மக்கள் அளித்த உரிமையாகிவிட்டது. அவர்களை ஆட்சி பீடத்திலிருந்து இறக்கிவிட்டு தாங்களும் அனுபவிக்கத் துடிக்கும் எதிர்க்கட்சிகள்; இதற்காகவே ஜாதி மதக் கலவரங்களைத் தூண்டிவிடும் சமூக விரோதிகள்.
தேர்தல் முடிந்து ஆட்சியைப் பிடித்ததும் ஆளும் கட்சிக்கு மட்டுமே அரசாங்கம் சொந்தமாகிறது. கட்சி சார்பில்லாத பொதுமக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டுமே மதிக்கப்படுகின்றனர்.
வாக்குகளைப் பதிவு செய்வதோடு அவர்கள் கடமை முடிந்து விடுகிறது. மக்கள் அரசாகச் செயல்படாமல் கட்சி அரசாகவே செயல்படுகிறது. "மக்கள் ஆட்சி' என்பதன் புதிய பொருளே இதுதான்.
அதிகாரிகள் எல்லாம் ஆளும் கட்சிகளின் எடுபிடிகளாகவும், காவல்துறையினர் அவர்களின் ஏவலர்களாகவும் செயல்படுவது அவர்கள் கடமை. செல்வம் படைத்தவர்கள் செல்லப்பிள்ளைகளாகவும், ஏழை எளிய உழைக்கும் மக்கள் பாவப்பட்டவர்களாகவும் நடத்தப்படுகின்றனர்.
மக்களுக்கு அளிக்கப்படும் கல்வியும், மருத்துவமும் வீண் செலவு என்பதால் அரசின் பணத்தை அதற்காகச் செலவழிப்பது அநாவசியம் என முடிவு செய்து எல்லாம் தனியாருக்கு ஒதுக்கப்படுகின்றன.
மதுக்கடைகளால் வருமானம் வருகிறது என்பதால் அரசாங்கமே நடத்துகிறது. அதிலும் குறைந்த போதையுடைய கள்ளுக்கடைகள் தேவையில்லை; அதிக போதை தரும் அயல்நாட்டு மதுவகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. "குடி குடியைக் கெடுக்கும்' எனவும் எழுதப்படுகிறது.
அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் "போலிப் பல்கலைக் கழகங்கள்' நடத்திக் கொள்ளலாம்; பயிற்சி நிறுவனங்கள் நடத்தி மக்களின் பணத்தை பட்டப்பகலில் கொள்ளையடிக்கலாம்.
அரசாங்கமும், கல்வித்துறையும் "அனுமதி பெறாத நிறுவனங்களில் சேர வேண்டாம்' என்று வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிடும். அனுமதியில்லாமல் "மோசடி' செய்யும் நிறுவனங்களைக் கண்டு கொள்ளாது.
இந்த நாட்டு வங்கிகளில் விவசாயிகளுக்கு மாடு வாங்கக் கடன் கிடைக்காது; கார் வாங்க கடன் கிடைக்கும். அப்படியே மாடு வாங்கியவர்கள் கடன் தொகையைக் கட்ட முடியவில்லையென்றால் "ஜப்தி' செய்து வசூலிக்கவும் முடிகிறது.
வசதிகளும், அதிகாரங்களும் படைத்தவர்களுக்கு வங்கிகள் கோடிக்கணக்கில் கடன் கொடுக்கிறது. அதனைப் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு "வாராக்கடன்' என்று பெயர்சூட்டி தள்ளுபடி செய்யப்படும். அவர்களது பெயர்களை வெளியிடவும் வங்கிச் சட்டத்தில் இடமில்லை.
இப்போது இருக்கும் வாகனங்களுக்கே பெட்ரோல், டீசல் கிடைக்காத நிலையில், விவசாயிகளின் விளைநிலங்களைப் பறித்து, கார் தொழிற்சாலை கட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது.
அரசாங்கம் நாளைக்கு ஒரு சட்டமும், வேளைக்கு ஒரு திட்டமும் போட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆண்டு முடிவில் அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள், "இந்தத் திட்டங்களின் பயன்கள் கிராமப்புற மக்களைச் சென்றடையவில்லையே!' என்று வருத்தத்தோடும், அக்கறையோடும் பேசுவார்கள்.
இதுபற்றி பரிசீலிக்க விசாரணைக் குழுவும் அமைக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும், நீதிபதிகளுக்கும் வேலை வேண்டாமா?
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்புவரை புறம்போக்கு நிலங்களை மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர்; இப்போது பட்டா நிலங்களையே ஆக்கிரமித்துக் கொள்ளும் துணவு வந்துவிட்டது முன்னேற்றம்தானே!
இங்கு மக்களுக்குப் பாதுகாப்பு தேவையில்லை. அரசியல் தலைவர்களுக்குத்தான் பாதுகாப்பு எல்லாம். நமது காவல்துறை பாதுகாப்பு போதாது. துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை பாதுகாப்பு அவசியம்.
அதற்கும் மேலாக அவர்களது குண்டர் படை. இவ்வளவும் போதாமல் அவர்கள் வருகிறார்கள் என்றால் பொதுமக்கள் தெருக்களில் சாலைகளில் நடமாடக் கூடாது. அந்த அளவுக்கு தலைவர்களுக்கும், மக்களுக்குமான இடைவெளி பராமரிக்கப்படுகிறது.
சுதந்திர நாட்டில் அரசியல் கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது மட்டும் உண்மை பேசுகிறார்கள்; மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்; கோரிக்கைகளுக்காகப் போராடுகிறார்கள்; அவர்களே ஆளும் கட்சியாக வந்துவிட்டால் பேசியதையெல்லாம் மறந்து விடுவார்கள்.
உண்மை, நேர்மை, நடுநிலைமை என்னும் பண்புகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியது அரசும், அதனை நடத்தும் அரசியல் தலைவர்களும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் எல்லா இடங்களிலும் ஜாதி மற்றும் கட்சி சார்பாகவே அணுகும் நிலையே வளர்ந்து வருகிறது.
விளையாட்டுத் துறை இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா? அரசியல் தலையீடு காரணமாக 110 கோடி மக்களின் மனிதவளம் வீணாகிறது. ஒலிம்பிக் விளையாட்டில் உலக நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட்டுப் பாருங்கள்.
50வது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஒரு தங்கப்பதக்கம் பெறுவதற்கு 108 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நாட்டுப்புறங்களில் இல்லை. பல கிராமங்கள் நம் தலைவர்களின் பார்வைக்கு வருவதே இல்லை.
தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர்கள் பவனி வருகின்றனர். மக்களுக்கான "தரும தரிசனம்' அப்போதுதான். செவ்வாய் கிரகத்துக்கு வழிதேடும் இக்காலத்தில் பல கிராமங்களுக்குப் போக வர சாலைகளே இல்லை.
மன்னர் ஆட்சிக்காலத்தில் அரசனது தவறுகளைப் புலவர்கள் எடுத்துரைப்பார்கள்; சமயங்களில் இடித்துரைப்பார்கள். ஆனால் இந்த மக்களாட்சியில் அந்த நிலை இல்லை.
இங்கு அறிவார்ந்த பெருமக்கள் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூற அஞ்சுகின்றனர். அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதற்குத் தக பேசி பதவிகள், விருதுகள், பாராட்டுகள் பெறவே விரும்புகின்றனர்.
இது ஒரு நல்ல சமுதாயத்தின் அடையாளங்கள் அல்ல; முன்னேற்றத்தை விரும்பும் நாட்டுக்கும் ஆட்சிக்கும் அழகல்ல; இது ஓர் ஆபத்தான போக்கு; என்ன செய்வது?
""எங்கே மனதில் பயமின்றித் தலைநிமிர்ந்து நிற்கிறார்களோ எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ எங்கே துண்டு துண்டாகச் சிதறாத உலகம் உள்ளதோ அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்...'' என்று பாடினார் தாகூர்.
தேசம் என்பது மண்ணும், மலைகளும் அல்ல; கடலும், நதிகளும் அல்ல; அது நல்ல மனிதர்களைப் பெற்றிருக்க வேண்டும்; அத்துடன் சிறந்த ஆட்சியாளர்களால் வழிநடத்தப்பட வேண்டும். இப்போது கூறுங்கள்: நாடு எங்கே செல்கிறது?
உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி

0 comments: