Thursday, September 4, 2008

சிங்காரச் சென்னையின் உத்தபுரம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வடசென்னையில், வியாசர் பெருமானின் பெயர் தாங்கியுள்ள பகுதியில் வசிக்கும் இளைஞர்களுடான கலந்துரையாடலின்போது, வெளிப்பட்ட ஒரு கருத்து, நெஞ்சில் முள்ளாய்த் தைத்தது. அங்குள்ள படித்த இளைஞர்கள், சென்னையில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, வியாசர்பாடி என்று குறிப்பிடாமல், சென்னை என்றே தங்கள் முகவரியைக் குறிப்பிடுவார்களாம். நேர்முகத் தேர்வின்போதும், தாங்கள் வசிக்கும் பகுதியை கூடிய மட்டும் நேரடியாகக் குறிப்பிட மாட்டார்களாம்.
வியாசர்பாடி என்று குறிப்பிட்டால் தரமான வேலை கிடைக்காமல் போய்விடும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையில் இன்றும் அப்பகுதி படித்த இளைஞர்கள் உழல்கிறார்கள்.
வியாசர்பாடி, கொடுங்கையூர், காசிமேடு என்றாலே ரெளடிகள், சமூக விரோதிகள், குடிகாரர்கள் என்ற தவறான ஒரு பொதுக்கருத்து நிலவுவதே காரணம்.
தமிழ்நாட்டின் பெரிய திரைகளிலும், சின்னத்திரைகளிலும் ஓட்டுவதற்கு கதைகளுக்கு வேண்டுமானால் பஞ்சமிருக்கலாம். ஆனால், கதைகளுக்கு வேண்டிய வில்லன்கள் ராயபுரத்திலோ அல்லது காசிமேட்டிலோ உலவுவார்கள்.
படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு பட்டதாரி தென்சென்னையில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரிக்கு முதுநிலைப் பட்டத்திற்கு விண்ணப்பித்தார்.
நேர்முகத் தேர்வின்போது, தான் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள கல்லூரியில் இளநிலைப் பட்டம் முடித்து வந்துள்ளேன் என்று சொன்ன மாத்திரமே, இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று முதிர்ந்த ஒரு கல்வியாளரால் விரட்டியடிக்கப்பட்டாராம்.
சுகாதாரக் கேடு, சாராயம், கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி, வெட்டுக்குத்து, ஓட்டு வங்கி அரசியல் ஆகியவற்றிற்கு நடுவில் வடசென்னை மக்கள் உழன்றாலும், அதற்கெல்லாம் காரணம், அங்குள்ள சாமானிய உழைப்பாளிகளின் அறியாமையும், அடுத்தடுத்து வந்த அரசுகளின் மாற்றாந்தாய் மனப்பான்மையும்தான்.
உடுத்திய கந்தல்துணி வியர்வையில் எப்பொழுதும் நனைந்தே இருக்குமளவிற்கு மிகக் கடுமையான உழைப்பாளிகளையும், மீனவர்களையும், துறைமுகம், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சார்ந்த அமைப்பு சாரா ஒப்பந்தத் தொழிலாளிகளையும் அதிக அளவில் வடசென்னை கொண்டுள்ளதால், தென்சென்னையின் நடுத்தர வர்க்க, மேல்தட்டு வர்க்க நுகர்வுக் கலாசாரம் அங்கு இல்லை.
ஆதலால், அரசுக்குக் கிடைப்பது அவர்களின் உடல் உழைப்பும், சுலபமான ஓட்டுகளுமே தவிர, காந்தி நோட்டுகள் (மறைமுக, நேர்முக வரிகள்) அல்லவே. ஆதலால், புனிதமான உடல் உழைப்பிற்கு மதிப்பில்லாமை நம் சமுதாயத்தில் புரையோடிப் போயிருப்பதன் விளைவாக, அங்கு அரசுகளின் முதலீடுகளும் குறைந்த அளவே.
தென்சென்னையின் நுகர்வுக்கு ஈடு கொடுக்கும் சாலைகளும், ஐந்து நட்சத்திர விடுதிகளும், தரமான பள்ளிகளும், கல்லூரிகளும் அங்கு கிடையாது. ஆனால், குடிசைப்பகுதிகளில் தென்படுவது, திறந்தவெளி சாக்கடைகளும், குப்பைமேடுகளும் அவற்றின் மேல் கும்மாளமடிக்கும் குழந்தைகளும், பன்றிகளும் தெருநாய்களும்தான்.
கொடுங்கையூரிலிருந்து கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை வரை 200 ஏக்கருக்கும் மேல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வருகிறது. குப்பை கொட்டும் வளாகம், தொடர்ச்சியாக சிந்திய வண்ணம் வரும் லாரிகள் கொட்டும், மக்கும், மக்காத குப்பைகள் ஒரு பக்கம், மருத்துவக் கழிவுகள் மறுபக்கம் என பல்வேறு வகையான குப்பைகள் கலந்து கட்டி கவிழ்க்கப்படுகின்றன.
பல்வேறு ஆலைகளிலிருந்து வெளியேறும் விதவிதமான புகை, டன் கணக்கில் டயர்களையும் குப்பைகளையும் எரிப்பதால் ஏற்படும் புகை என்று வடசென்னை மக்களுக்கு தினமும் போகிப் பண்டிகைதான். ஆதலால், அங்குள்ள மக்கள் மூச்சைப் பிடிப்பதையும், விடுவதையும், பிராணாயாமம் போன்று கைவந்த கலையாக்கிக் கொண்டுள்ளார்கள்.
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்குப் போனால், தொற்று நோய் வருவது நிச்சயமாகிவிடும். குழந்தைகள் முதல் முதியோர் வரை அங்குள்ள மக்களுக்கு, பருவம் தவறாமல் கிடைப்பது, மலேரியா, சிக்குன் குனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்கள்தான்.
தொடக்கப்பள்ளி முதல் கல்லூரிகள்வரை தரமான கல்வி வசதி, சுகாதார வசதிகள், கட்டமைப்பு வசதிகள், தனிமனித வருமானம் போதிய அளவில் இல்லாமையால், கணிசமான மாணவ, மாணவிகள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.
பள்ளிப்படிப்பை முடித்த சில இளைஞர்கள் ஐ.டி.ஐ. போன்ற தொழிற்கல்வி படிப்புகளைத் தொடருவதும் பெரும்பாலான இளைஞர்கள் அமைப்பு சாரா வேலைகளுக்குப் போவதுமே இன்றைக்கும் நிதர்சனம்.
வடசென்னையில் தெருவிற்கு தெரு திறந்து விடப்பட்டுள்ள, "டாஸ்மாக்' வியாபாரம் ஒருபுறமும், கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்கள் மறுபுறமும், ஆந்திரத்திலிருந்து இறங்கும் பாக்கெட் சரக்குகள் மற்றொரு புறமுமாக பேய், பிசாசு, அசுரன்கள் போல, பல குடும்பங்களை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கின்றன.
சஞ்சய் சுப்பிரமணியன் முதல், ஒயிலாட்டம் வரை கலைநுணுக்கத்துடன் ரசிக்கும் பெருமக்கள் அங்கு இல்லை என்று நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனங்கள் நினைத்துவிட்டன போலும்.
சிங்காரச் சென்னைக்கு வேண்டிய செம்மொழி மையம், தகவல் தொழில்நுட்ப வளாகங்கள், உலகத்தரத்தில் நூலகம், துணை நகரங்கள் என்று சென்னையின் செழுமைப் பகுதிகள் நீண்டு கொண்டே போனாலும், அதிகார மையங்களுக்கு அருகில் கூட வர முடியாத இளித்த வாயர்கள் என்பதாலோ, என்னவோ, வடசென்னையில் அபூர்வமாகத் தொடங்கப்பட்ட ஒரு மேம்பாலம்கூட அந்தரத்தில் தொங்குகிறது. தென்சென்னையில் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள் பவனி வரும் நிலையில், வடசென்னைக்கு ஓட்டை, உடைசல் பேருந்துகள்தான். அவையும் போதுமான அளவில் இல்லை. ஆதலால், பெரும்பாலான மக்கள் "ஷேர் ஆட்டோ'க்களை மட்டும் நம்பிப் பயணிக்கிறார்கள்.
சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியின்போது, வடசென்னையில் விளையாட்டு மைதானங்கள், சிறிய பூங்காக்கள் கூட மிகக் குறைவாகவே உள்ளன என்று மாணவர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். அப்பொழுது பேசிய அவ்வட்டாரத்து கம்யூனிஸ்டு தலைவர், இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, வியாசர்பாடிக்கு ஒரு பொது நூலகம் கொண்டு வர வேண்டும் என்று போராடியும் வெற்றி பெற முடியவில்லை என்று அங்கலாய்த்தார். உத்தபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் கண்முன் தெரிந்ததால் கம்யூனிஸ்டுகள் அதனைச் சுலபமாக இடித்து விட்டனர். தென்சென்னைக்கும், வடசென்னைக்கும் நடுவில் உள்ள இந்த தீண்டாமைச் சுவர், தெரிந்தும் தெரியாமல், கண்களுக்குப் புலப்படாமல் நிழலாக இருப்பதால் இடிப்பது கடினம் என்று விட்டு விட்டார்களோ?
உத்தபுரத்துத் தீண்டாமைச் சுவரை இடிக்கப் புறப்பட்ட கட்சிகளே! அரசே! துணை நகரம், சிங்காரச் சென்னை, புதிய சட்டசபை வளாகம் போன்றவற்றை சற்றே தள்ளி வையுங்கள். வடசென்னை மக்களின் சமூக, பொருளாதார, சுகாதார, கல்வி சீரமைப்பிற்கென்று தனியான பட்ஜெட்டும், உயர்நிலைக்குழு ஒன்றும் நிறுவி சமூக நீதியை நிலைநாட்டப் புறப்படுங்கள்.
அ. நாராயணன்

நன்றி : தினமணி

2 comments:

said...

சரியான கட்டுரை. இருபது வருடங்களுக்கு முன் நான் பார்த்த கொளத்தூர், G.K.M பகுதிகள் இன்றும் அப்படியே தான் உள்ளது. வடசென்னை வேதனைகள் சில :
1. செண்ட்ரல் ஸ்டேஷன், பார்க், எக்மோர், சேத்பட் ஸ்டேஷன் பிளாட்பாரத்தை போய் பாருங்கள். ஒரே எச்சில் மயம். மூத்திரமும், இன்னும் சில கழிவுகளும் குமட்டும்.
2. தெருக்கு தெரு மூலையில் டீக்கடைகளில் அழுக்கு லுங்கி கட்டிக்கொண்டு ஆட்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். பேசும் போதே, அவர்களுக்கே தெரியாமல் காறி துப்பிக்கொண்டே இருப்பார்கள். பேச்சில் ...ங்கோத்தா.. சரளமாக வரும்.
3. பெரம்பூர் bridge.
4. loco works bridge
5. தரமான கடைகள், branded shops பார்க்க முடியாது.
6. நல்ல டாக்டர்கள், மருத்துவமனை இல்லை.
7. நல்ல ஹோட்டல் கிடையாது.
8. Train வசதி கிடையாது. அதாவது, பெரம்பூர் பகுதி மக்கள் நேரடியாக பீச் லைன் பிடிக்க முடியாது.
9. ரோட்டில் புழுதிப்படலமும், குப்பைகளும் எப்போதும் இருக்கும்.
இப்படி எத்தணையோ இருக்கின்றன.

said...

அமுதன் வருகைக்கு நன்றி