Thursday, September 4, 2008

அரசுதான் குற்றவாளி!

சென்னை தியாகராய நகரிலுள்ள சரவணா ஸ்டோர்சில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து சுமார் பத்து மணிக்கோ அதற்குப் பிறகோ நேர்ந்திருந்தால் அதனால் ஏற்பட்டிருக்கும் உயிர்ச்சேதம் ஏராளமாக இருந்திருக்கும் என்பதை யாரால் மறுக்க முடியும்?
எந்தவித வரைமுறையும் இல்லாமல் அவரவர் இஷ்டப்படி வணிக வளாகங்களைக் கட்டிக்கொள்ள நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசு ஊக்கமளித்ததன் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதற்கு, இந்தத் தீ விபத்து ஓர் உதாரணம். கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நாம் "விதிமுறை மீறல்கள்' என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்களை இப்போது மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
""ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால்கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.
இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தைச் சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்களுக்கு அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?''
ஆங்காங்கே தீவிரவாதம் தலைதூக்கும் இன்றைய சூழ்நிலையில், தி.நகர் ரங்கநாதன் தெரு போன்ற குறுகிய சாலைகளில் இதுபோன்ற வணிக வளாகங்களைக் கட்ட அனுமதி அளிப்பது என்பதே தவறு. அப்படி இருக்கும்போது, எல்லா வரம்புகளையும் மீறி, சட்டதிட்டங்களைச் சட்டைசெய்யாமல் அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்ட அனுமதித்திருப்பது அதைவிடத் தவறு.
சரவணா ஸ்டோர்சில் தீ விபத்து ஏற்பட்டபோது, தாங்கள் அந்தத் தெருவின் உள்ளே நுழையவே சிரமப்பட்டதாகத் தீயணைப்புப் படையினர் கூறி இருக்கிறார்கள். குறுகலான அந்தத் தெருவில் மேலே உள்ள தளங்களில் தீ பிடித்தால் அதை அணைப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கி இருக்கிறார்கள். அதிகாலை நேரமாக இல்லாமல், உள்ளே நூற்றுக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருந்திருந்தால், தங்களால் ஒன்றும் செய்திருக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்கும்போது, இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை சுட்டிக்காட்டி இடித்துத் தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், சட்டம் இயற்றி இந்த விதிமுறை மீறல்களை அங்கீகரிப்பதில் அரசு முனைப்புக் காட்டுகிறது. முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், தமிழக அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்காகச் செயல்படவில்லை என்றுதானே பொருள்.
இனியாவது அரசு விழித்துக் கொண்டு, விதிமுறை மீறல்களைக் காப்பாற்றும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். வணிக வளாகங்கள் நூறடி சாலைகளில் மட்டும்தான் கட்டப்பட வேண்டும் என்று சட்டம் போட வேண்டும். அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு இந்த அரசு தயாரா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது!
நன்றி : தினமணி

0 comments: