Monday, September 15, 2008

அண்ணன் காட்டிய வழி!

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா பெரிய அளவில் தமிழகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. மிகக் குறுகிய காலம் மட்டுமே முதல்வராக இருந்த ஒரு தலைவனால் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடிந்தது என்றால் அதற்குக் காரணம், அந்த மனிதன் தன்னை மக்களுடன் இணைத்துக் கொண்டதும், அவர்களது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதும்தான்.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது, அண்ணாவிடம் பண பலம் இருக்கவில்லை. காங்கிரஸ் என்கிற மாபெரும் சக்தியை எதிர்கொள்ளும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் இருக்கவில்லை. மக்களின் கவனத்தை ஈர்க்கும் மேடைப் பேச்சையும், கவர்ந்திழுக்கும் சினிமாவையும் தனது ஆயுதங்களாகக் கொண்டு களமிறங்கிய அண்ணாவால், மக்கள் மத்தியில் எழுச்சியையும், சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியையும் ஏற்படுத்த முடிந்ததென்றால் அதற்குக் காரணம், அவரிடம் காணப்பட்ட தலைமைப் பண்பும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சகோதர பாசமும், இதயத்தின் அடித்தளத்தில் சுரந்த மனித நேயமும், அனைத்துக்கும் மேலாக அவரிடம் இருந்த தன்னம்பிக்கையும்தான்!
1967ல் இந்தியாவின் பல மாநிலங்களில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ். ஏனைய மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆனால், தமிழகத்தில் இன்றுவரை காங்கிரசால் ஆட்சியில் அமர முடியாமல் போனதற்குக் காரணம், அண்ணா அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற அடித்தளமும், காங்கிரஸ் ஒரு பணக்காரர்களின் கட்சி என்கிற வெகுஜன அபிப்பிராயமும்தான்.
சி.என். அண்ணாதுரை எம்.ஏ. என்கிற அந்த எளிய மனிதரை இந்தத் தமிழகம் முழுவதுமே "அண்ணா' என்று அழைத்தது. அவர் மரணத்தின்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள்பெருவெள்ளம் உலகம் இன்றுவரை கண்டறியாதது. இன்றளவும் கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. இவர்களன்றி, தமிழகத்தில் வானொலிப்பெட்டி இருந்த வீடுகள் முன்பாக கூடி நின்று அழுத நெஞ்சங்கள் பல கோடி.
இத்தனைப் பேரின் உள்ளங் கவர்ந்த தலைவர்அரசியல் உலகில் இருந்த அப்பாவி மனிதர் என்றால் மிகையாகாது. சட்டப்பேரவைக்கு போட்டியிட்டால் முதல்வராக முடியும் என்ற நிலைமை இருந்தபோதும் மக்களவைக்குப் போட்டியிட்டவரை அப்பாவி என்றுதானே சொல்ல இயலும்.
காங்கிரஸுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒரே கூட்டணியில் சேர்த்து ஆட்சியைப் பிடித்த அண்ணாவின் வெற்றிக்கு உழைப்பையும், தமிழையும் காரணம் என்று சொல்லாமல், "ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி லட்சியம், ஒரு படி நிச்சயம்' என்ற தேர்தல் வாக்குறுதிதான் காரணம் என்று கருதினால் அது பிழையாகத்தான் அமையும்.
அந்த ஒரு வாக்குறுதிக்காக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதும், அதற்கு அடுத்துவந்த தேர்தலில் காங்கிரஸ் இதை முன்வைத்து பிரசாரம் செய்தபோதும் மக்கள் அதை பொருட்படுத்தவில்லை என்பதுமே அதற்குச் சான்று.
அண்ணா தன் குடும்பத்தை எந்த நாளிலும் முன்னிலைப் படுத்தியதே இல்லை. அவரது மனைவி மற்றும் வளர்ப்பு மகன் பெயரும் முகமும் அவரை நேசித்த பல கோடித் தமிழர்கள் அறியாதவை. அவர் தனக்காகவோ அல்லது தன் குடும்பத்துக்காகவோ நிறுவனங்களைத் தொடங்கவில்லை. அல்லது பல பன்னாட்டு நிறுவனங்களில் பல கோடிக்கு பங்குகள் வாங்கி வைத்து, குடும்பத்தினரின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஏற்படுத்தித் தந்ததில்லை.
அண்ணாவின் மிகப்பெரிய சாதனை என்ன? தமிழனுக்குத் தமிழன் என்கிற உணர்வையும், தமிழினத்துக்குத் தனித்துவம் தேவை என்கிற வேட்கையையும் அளித்தது சாதனை. அண்ணா இன்னும் தமிழர்களின் மனதில் தனியாசனம் இட்டு அமர்ந்திருப்பது ஏன்? புகழின் உச்சியிலும் எளிமை, பதவியிலும் பணிவு என்பதை வாழ்ந்து காட்டியதால்.
நன்றி ; தினமணி

0 comments: