Monday, September 15, 2008

நீதியே நிலைபிறழ்ந்தால்...?

உத்தரப்பிரதேசம் காஜியாபாதில் நான்காம் நிலை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து ரூ.23 கோடி ரூபாயைச் சட்டவிரோதமாகக் கையாடிய ஊழலில், நீதித்துறையின் மூன்றடுக்கு வரிசை நீதிபதிகளுக்குப் பங்கிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
பஞ்சாபில் அதைவிட வேடிக்கை; ஒரு நீதிபதிக்கு லஞ்சமாக அனுப்பப்பட்ட பணம் தவறுதலாக, அதே பெயரை உடைய இன்னொரு நீதிபதியிடம் தரப்பட, விஷயம் வெளிப்பட்டு பத்திரிகைகளில் வந்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த கே.கே. சபர்வால் தனது சொந்த மகன்கள் நலனை உத்தேசித்துத் தீர்ப்பு வழங்கினார் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே, அதற்கு என்ன சொல்ல?
சௌமித்ர சென், கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி. அவர் வழக்கறிஞராக இருந்தபோது ஒரு வழக்கில் நீதிமன்றத்தின் சார்பில் பெறப்பட்ட பணத்தைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் போட்டு மோசடி செய்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் 2006ம் ஆண்டு அந்தப் பணத்தைக் குறைந்த வட்டியுடன் திருப்பிச் செலுத்தியிருக்கிறார் சௌமித்ர சென். இதுபற்றிய விசாரணைகள் நடந்ததும், ""விருப்ப ஓய்வு பெறுங்கள் அல்லது ராஜிநாமா செய்துவிடுங்கள்'' என்று அவரிடம் கூறப்பட்டது. அவரோ இதில் எதையும் செய்ய மறுத்துவிட்டார். விடாப்பிடியாக, நீதிபதியாகத் தொடரத்தான் செய்வேன் என்று அடம்பிடிக்கும் அவரை என்ன செய்வது? அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரையே செய்திருக்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.
ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. குறைந்தபட்சம் 100 மக்களவை உறுப்பினர்களோ அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர்களோ, ""சம்பந்தப்பட்ட நீதிபதி பதவியிறக்கம் செய்யப்பட வேண்டும்'' என்று குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்க வேண்டும். இரு அவைகளிலும் தனித்தனியே பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்தால் மட்டும் போதாது; மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவையில் இருந்தாக வேண்டும். 1968ம் ஆண்டு நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின்படி ஒருவரைப் பதவி நீக்குவது என்பது உடனடியாக நடக்கக்கூடிய விஷயமல்ல என்பது நீதிபதி சௌமித்ர சென்னுக்குத் தெரியாதா என்ன?
தனது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை சந்திப்பதைக்கூடத் தவிர்த்த நீதிபதிகள் இருந்த காலம் ஒன்று இருந்தது. இவ்வளவு இழிவான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியும் நீதிபதி பதவியிலிருந்து விலக மறுக்கும் சௌமித்ர சென் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இந்தக் காலம். இதற்கு முக்கியமான காரணம், நீதிபதிகள் தேர்வில் நடக்கும் முறைகேடுகள்தான்.
நீதிபதிகள் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களுடைய பின்னணி பற்றிய முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு, அப்பழுக்கில்லாதவர் என்று உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அவை எதுவும் பின்பற்றப்படுவதே இல்லை.
2006ல் நீதிபதிகள் விசாரணைச் சட்டம் பற்றிய முன்வடிவு தயாரிக்கப்பட்டு தூங்குகிறது. பதவியில் இருக்கும் நீதிபதிகளைக் கொண்ட தேசிய நீதிக்குழுமம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், தவறு நிரூபிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் ஆலோசனையைக் குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் அதிகாரத்தை அதற்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் விசாரணைச்சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏனோ அந்தச் சட்டம் இப்போதும் முன்வரைவாகவே தொடர்கிறது.
இந்திய ஜனநாயகத்தில் எத்தனை எத்தனையோ குறைகள் இருந்தாலும், நீதித்துறை ஓரளவுக்கு நேர்மையாக இருப்பதால்தான் அந்தக் குறைகளை மீறி நாம் தொடர்கிறோம். நீதித்துறை களங்கப்படுவதும், அதன் மீது மரியாதை குறைவதும் ஒரு நல்ல ஜனநாயகத்தின் அறிகுறி அல்ல. தவறுகள் வெளியில் தெரியக்கூடாது என்று மூடிமறைப்பதும், யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று தடுப்பதும், தவறுகள் அதிகரிக்கத்தான் உதவும்.
""தர்மோ ரக்ஷதி ரக்ஷித:'' என்று வடமொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது, நாம் தர்மத்தைக் காப்பாற்றினால், தர்மம் நம்மைக் காப்பாற்றும் என்று அதற்குப் பொருள். நமக்கு நீதி வழங்கும் நீதித்துறையை நாம் பாதுகாக்கத் தயார்; நீதியே நிலை பிறழ்ந்தால் நம்மை யார் பாதுகாப்பது?
நன்றி : தினமணி

0 comments: